வாயிலான் தேவன். (பி-ம்.) 1. ‘றொடுத்த’
(ப-ரை.) தோழி----, கடு புனல் தொகுத்த - மிக்க புனலால் தொகுக்கப்பட்ட, நடுங்கு அஞர் அள்ளல் - நடுங்குதற்கு ஏதுவாகிய துன்பத்தைத் தரும் சேற்றினிடத்து, இரை தேர் - மீனாகிய உணவைத் தேர்கின்ற, கவிர் இதழ் அன்ன - முள்ளு முருங்கை மலரின் இதழைப் போன்ற, தூவி -மெல்லிய இறகையும், செ வாய் - செம்மையாகிய அலகையும் உடைய, நாரைக்கு----, எவ்வம் ஆக - துன்பம் உண்டாகும்படி, தூஉம் துவலை - தூவுகின்ற நீர்த்துளி களையுடைய, துயர்கூர்வாடையும் - பிரிந்தார் துயர்கூர்தற்குக் காரணமாகிய வாடைக்காற்றையுடைய கூதிர்க் காலத்திலும், நம் காதலர் - பிரிந்து சென்ற நம்முடைய தலைவர், வாரார் - வருவாரல்லர்; யான்----, வாழேன் - வாழ்வேனல்லேன்.
(முடிபு) தோழி, நம் காதலர் வாடைக்காலத்தும் வாரார்; யான் வாழேன்.
(கருத்து) தலைவர் இன்னும் வாராமையின் துன்பம் மிகப் பெற்றேன்.
(வி-ரை.) தன்பாற் சென்றாரை ஆழ்த்திவிடும் இயல்பினதாதலின் நடுங்கஞரள்ளலென்றாள். இரைதேரும் முயற்சியையுடைய நாரைகளும் துன்புற்று அம்முயற்சி யொழிதற்கு ஏதுவாக இருக்கும் இவ்வாடைக் காலத்தில் தலைவர் மட்டும் தம் முயற்சியை ஒழிந்து ஈண்டுப் போந்தில ரென்பது குறிப்பு.
வாடையும்: உம்மை இழிவு சிறப்பு. போல்வர், போல்வல்: உரையசைகள் (தொல். இடை. 29.) ஏகாரம் அசை.
நம் காதலரென்றாள், தனக்கும் தோழிக்குமுள்ள ஒற்றுமை பற்றி.
“என்னுடன் தாம் சேர்ந்திருத்தற்குரிய இவ்வாடைக் காலத்திலும் தலைவர் மீண்டிலர்; இவ்வாடையின் துயர் பொறுத்தற்கு அரிதாயிற்று; அவருடைய பிரிவை இக்காலம் மிகுதியாகப் புலப்படுத்தி விட்டதாதலின் இனி உயிரை வைத்துக் கொண்டு ஆற்றும் ஆற்றல் இல்லேன்” என்று தலைவி கூறி வருந்தினாள்.
மேற்கோளாட்சி 1. கடியென்னும் உரிச்சொல் மிகுதிப்பொருளில் வந்தது (தொல்.உரி. 86, இளம்.); உரிச்சொல் ஈறுதிரிந்து வந்தது (தொல். உரி. 98, இளம்.)
ஒப்புமைப் பகுதி 2. நாரையின் தூவி செந்நிறமுடையது: “ மடநடை நாரை, பதைப்ப வொழிந்த செம்மறுத் தூவி” (ஐங். 156:2-3); ‘பெரிய நாரை சிறகு சிவந்திருத்தலானும்’ (கலி. 126:1-5, ந.); “சிறுமீன் கவுட்கொண்ட செந்தூவி நாராய்” (ஐந். எழு. 68.)
2. இரைதேர் நாரை: “இரைதேர் நாரை”, “இரைதேருந் தடந்தா ணாரை” (நற்.35:6, 91:4.)
4. துயர்கூர் வாடை: குறுந். 110:6, 240:4, 277:6, 317: 5-6, 332: 1-2.
(103)