வாயிலான்றேவன், (பி-ம்.) 4. ‘செவ்வறன்’; 5. ‘றுய்வன்’.
(ப-ரை.) தோழி---, மழைவிளையாடும் - மேகங்கள் விளையாடுதற்கிடமாகிய, குன்றசேர் சிறுகுடி - மலையைச் சேர்ந்த சிற்றூரினிடத்து, கறவை - மேயும் பொருட்டு அகன்றிருந்த பசுக்கள், கன்று வயின் படர - தம் கன்றுகளினிடத்தே நினைந்து செல்ல, புறவில் - முல்லை நிலத்தில், பசு இலை முல்லை - பசிய இலைகளையுடைய முல்லையினது, ஆசு இல் வான் பூ - குற்றமில்லாத சிறந்த மலர்ப் பரப்பு, செ வான் செவ்வி கொண்டன்று - செக்கர் வானத்தின் அழகைக் கொண்டது; யான் உய்யேன் - இக் கார்ப்பருவத்து மாலையில் தலைவர் வாராமையின் யான் உயிர் வாழேன்.
(முடிபு) தோழி, முல்லை வான்பூச் செவ்வான் செவ்வி கொண்டன்று; யான் உய்யேன்.
(கருத்து) கார்ப்பருவம் வந்துவிட்டது; தலைவர் பிரிவை இனிப் பொறுத்திரேன்.
(வி-ரை.) கறவை - பாற்பசு. மாலைக் காலத்திற் பசுக்கள் கன்றை நினைந்து வீடு செல்லுதல் மரபு. முல்லைநிலம் செந்நிறமாயிருத்தலின் அதற்குச் செவ்வானமும் அதன்கட்பூத்த முல்லை மலர்களுக்கு உடுக்களும் உவமை; சீவக. 726. மழை விளையாடுதல் கார்காலத்தை யறிவிப்பது; கறவை படர்தலும் முல்லை பூத்தலும் மாலையில் நிகழ்வன. போல்வல்: அசை. ஏகாரம்: அசைநிலை.
மேற்கோளாட்சி 2. படரென்னும் உரிச்சொல் செலவாகிய குறிப்புணர்த்தியது (தொல். உரி. 44, சே. 42, ந. 44, தெய்வச். இ.வி. 282.)
ஒப்புமைப் பகுதி 1. மழைவிளையாடுங் குன்று: “மால்வரை, மழைவிளை யாடுநாடனை” ( குறுந். 263:6-7); “வெண்மழை, வான்றோ யுயர் வரை யாடும் வைகறை” (அகநா. 139:6-7.)
2. மாலையில் கறவை கன்றுவயிற் படர்தல்: (குறுந். 64:1-3); “ஆன்கணம், கன்றுபயிர் குரல மன்றுநிறை புகுதர” (குறிஞ்சிப். 217-8); “கறவைதம் பதிவயிற், கன்றமர் விருப்பொடு மன்றுநிறை புகுதர” (கலி. 119: 9-10); “பதவுமேய லருந்து மதவுநடை நல்லான், வீங்குமாண் செருத்தறீம்பால் பிலிற்றக், கன்றுபயிர் குரல மன்றுநிறை புகுதரு, மாலை”, “கன்றுபயிர் குரல மன்றுநிறை புகுதரும், ஆபூண்டெண்மணி யைதியம் பின்னிசை, புலம்புகொண் மாலை கேட்டொறும்” (அகநா. 14:9-12, 64: 14-6); “குவளை மேய்ந்த குடக்கட் சேதா, முலை பொழி தீம்பா லெழுதுக ளவிப்பக், கன்றுநினை குரல மன்றுவழிப் படர” (மணி.5:130-32.)
5. உய்யேன் போல்வல்; குறுந். 103:5-6.
4-5. மாலையில் முல்லை மலர்தல்: குறுந். 162:2-3, 234:2-3, 387:1-2
(108)