மாமூலனார். (பி-ம்.) 1. ‘நெகிழ நாளும்’ 2. ‘பாடில கலுழுமங் கண்ணொடு’ 3. ‘முயங்குவம்’ 4. ‘எழுகினி வாழி நெஞ்சே’, ‘வாழிய நெஞ்சே’, ‘முனாஅது’, ‘முனையது’; 6. ‘வல்வேற்’; 7. ‘தேத்தாராயினும்’; 8. ‘வழிவிடல்’, ‘நட்பே’,
(ப-ரை.) என் நெஞ்சே வாழி-எனது நெஞ்சே நீ வாழ்வாயாக! கோடு ஈர் இலங்கு வளை ஞெகிழ- சங்கினை அறுத்துச் செய்யப்பட்டு விளங்கும் கைவளை உடல் மெலிவினால் நெகிழா நிற்ப, நாள்தோறும் பாடு இல கலிழும் கண்ணொடு- நாள்தொறும் இமை பொருந்துதல்இல்லாதனவாகிக் கலங்கியழும் கண்ணோடு, புலம்பி- தனித்து வருந்தி, ஈங்கு இவண் உறைதல் உய்குவம்- இப்படி இங்கே தங்குதலில் இருந்து தப்புவேமாக; ஆங்கு- தலைவர் இருக்கும் இடத்திற்கு, இனி எழு-செல்லஇப்பொழுது எழுவாயாக; முனாது - முன்னே உள்ளதாகிய, குல்லை கண்ணி-கஞ்சங் குல்லையாலாகிய கண்ணியை அணிந்த, வடுகர் முனையது-வடுகருக்குரிய இடத்தினதாகிய, பல் வேல் கட்டி நல் நாட்டு உம்பர்-பல வேலையுடைய கட்டி என்பவனுடைய நல்ல நாட்டிற்கு அப்புறத்தில் உள்ள, மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்- மொழி வேறுபட்ட நாட்டில் உள்ளவரேனும், அவருடை நாட்டு- அவருடைய நாட்டினிடத்து, வழிபடல் சூழ்ந்திசின்-செல்லுதலை எண்ணினேன்.
(முடிபு.) நெஞ்சே, உய்குவம்; எழு நாட்டு வழிபடல் சூழ்ந்திசின்.
(கருத்து) தலைவரைப் பிரிந்து தனித்திருத்தலை இனி ஆற்றேன்.
(வி-ரை.) வளைஞெகிழ்தலும் கண் பொருந்தாமையும் தலைவனைப் பிரிந்த துன்பத்தால் விளைந்தவை. உறைதலும: உம்மை, அசைநிலை(புறநா.26:3, விசேடவுரை);சாரியையுமாம் (தொல். குற்றியலுகரப். 76.) இனி -இப்பொழுது (குறள்,1083, பரிமேல்.)
வடுகர்: இவர் வேங்கடத்தின் வடக்கே இருந்த ஒரு சாதியார்; மிக்க வீரமும் வன்மையும் உடையவராகச் சொல்லப்படுகின்றனர்; இவருள் ஒரு சாரார் வேட்டை ஆடும் தொழில் உடையார்; அதன் பொருட்டு நாய்களையும் உடன் கொண்டு வருவர்; இவரை ‘வம்பவடுகர்’ என்றும் நூல்கள் கூறும்.
கட்டி: இவன் சேரனுடைய படைத் தலைவர்களுள் ஒருவன்; கங்க நாட்டிற்குத் தலைவனாகச் சொல்லப்படுகின்றான். மொழி பெயர் தேஎம்-மொழி வேறுபட்ட நாடு. இதனால், கட்டியினுடைய நாடும் வடுகரது நாடும் வேற்று மொழியை உடையன என்பது பெறப்படும்.
மொழி வேறுபட்ட நாட்டில் சென்று உறைதல் அருமையாதலின் ஆயினும் என்று சிறப்பும்மை கொடுக்கப்பட்டது. வழிப்படல் என்பதுஎதுகை நோக்கி இயல்பாயிற்று. வழிபடல்- தலைவன் இருக்கும் இடத்துச்செல்லுதல் (தொல். களவு. 22); வழிபாடு செய்தலுமாம்.
மேற்கோளாட்சி1-4. தலைவி நெஞ்சொடு உசாவித் தலைவனைச் சேர்ந்தது
(தொல். பொருளியல், 9.இளம.்) மு. தலைவி தலைவன் உள்ள இடத்திற்குச் செல்லுதலும் பொருளாகவருதல் (தொல். களவு. 22, இளம்.); தலைவன் நாட்டிற்குச் செல்வாமென்று தலைவி தன் நெஞ்சிற்குக் கூறியது (தொல். களவு. 22,ந.)
ஒப்புமைப் பகுதி 1 கோடீரிலங்குவளை: குறுந். 31:5, 365:1. சங்கை அறுத்துவளைசெய்தல்: ‘‘கடற்கோடு செறிந்த வளைவார் முன்கை’’, ‘‘கடற்கோடறுத்த வரம்போ ழவ்வளை’’, ‘கோடீ ரெல்வளை’ (ஐங். 191:1, 194:1, 196:1,)வளை நெகிழ்தல்: குறுந். 31:5, 50:4, 125:1, 211:1, 216:3, 289:2, 316:1, 365:1, 371:1; நற். 26:1, 56:4; ஐங். 27:3, 54:3, 136:2, 140:3; கலி.3:3; குறள்,1157; கைந்நிலை 55.
2. கண்துயிலாமை: குறுந். 6:4, ஒப்பு. துஞ்சாமையும் கலுழ்தலும்;(குறுந்.357:1-2, 365:2); ‘‘பாடின்றிப் பசந்தகண் பைதல பனிமல்க’’(கலி.16:1.)
3. உய்தல்: ‘‘ஒருவே மாகிய புன்மைநா முயற்கே’’, ‘‘தெருமரலுயவே’’ (குறுந்.57:6, 250:6); ‘‘அன்னை சொல்லு முய்கம்’’ (அகநா.65:2.) 3-4. ‘‘எழுவினி நெஞ்சஞ் செல்கம்’’ (புறநா.207:1) ‘‘உய்ய வேண்டி னெழு போத நெஞ்சே’’ (தே. திருஞா. திருப்புகலூர்); ‘‘நீயிருந்திங் கென் போது நெஞ்சமே’’ (திருவாரூர் மும்மணிக். 23); ‘‘உருகி நெஞ்சே நினைந்திங் கிருந்தென் றொழுதும்மெழு’’ (திவ். பெரியதிரு. 9.3:2.)
5. வடுகர் முனை: ‘‘கல்லா நீண்மொழிக் கதநாய் வடுகர், வல்லாணருமுனை’’ (அகநா.107:11-2.)
6. பல்வேல்: ‘‘பல்வே லெழினி’’ (குறுந்.80:5); ‘‘பல்வேற் றிரையற் படர்குவி ராயின்’’ (பெரும்பாண். 37); ‘‘பகைபுறங் கண்ட பல்வே லிளைஞரின்’’ (குறிஞ்சிப். 129.) கட்டி: ‘‘துன்னருங் கடுந்திறற் கங்கன் கட்டி’’, ‘‘போரடு தானைக் கட்டி’’ (அகநா.44:8, 226:16.)
7. மொழி பெயர் தேஎம்: ஐங். 321:4; அகநா.67:12, 211:8, 5-7. வடுகர் முனையதாகிய நாடு: ‘‘கடுங்குரற் பம்பைக் கதநாய் வடுகர் நெடும்பெருங் குன்றம்’’ (நற். 212:5-6); ‘‘வேங்கடத் தும்பர்... இகன் முனைத் தழீஇய வேறுடைப் பெருநிரை, நனைமுதிர் நறவி னாட்பலி கொடுக்கும், வானிணப் புகவின் வடுகர் தேஎத்து’’, ‘‘புடையலங் கழற்காற் புல்லி குன்றத்து, நடையருங் கானம் விலங்கி நோன்சிலைத், தொடையமை பகழித் துவன்று நிலை வடுகர், பிழியார் மகிழர் கலிசிறந் தார்க்கும், மொழி பெயர் தேஎம்’’ (அகநா. 213:3-8, 295:13-7.)
மு. ‘‘நாஞ்செலி னெவனோ தோழி... குன்றுவிலங் கியவினவர் சென்ற நாட்டே’’ (அகநா.309:12-7.)
(11)