கிளிமங்கலங்கிழார் (பி-ம். கிள்ளிமங்கலங்கிழார்.) (பி-ம்.) 2-3. ‘நீர் நிலைப்’; 3-4. ‘புதன்மலியொண்’; 7.’றின்னா வெறி தரும்’, ‘றின்னா தெறி வரும்’.
(ப-ரை.) தோழி---, நீர - நீரிலுள்ள, நீலம் பைம்போது உளரி - நீலத்தினது மலருஞ் செவ்வியையுடைய பேரரும்பை மலரச் செய்து, புதல - புதலிலே உள்ள, பீலி ஒள் பொறி கருவிளை - மயிற்பீலியின் ஒள்ளிய கண்ணைப் போன்ற கருவிளை மலரை, ஆட்டி - அலைத்து, நுண் முள் ஈங்கை செ அரும்பு ஊழ்த்த - நுண்ணிய முள்ளையுடைய ஈங்கையினது செவ்விய அரும்புகள் மலர்ந்த, வண்ணம் துய்மலர் - நிறத்தையும் துய்யையும் உடைய மலர்கள், உதிர - உதிரும் படி, தண்ணென்று - குளிர்ச்சியையுடையதாகி, இன்னாது எறிதரும் வாடையொடு - இன்னாததாகி வீசுகின்ற வாடைக் காற்றினால், என் ஆயினள் கொல் - எத்தன்மையினள் ஆனாளோ, என்னாதோர் - என்று நினைந்து கவலையுறாத தலைவர், வாராராயினும் - வாராவிடினும், வரினும் - வந்தாலும், நமக்கு யார் ஆகியர் - நமக்கு எத்தகைய உறவினராவர்? வருவதற்குள் இறந்து படுவேன்.
(முடிபு) தோழி, என்னாயினள் கொல் என்னாதோர், வாராராயினும் வரினும் யாராகியர்?
(கருத்து) தலைவர் வாராமையின் யான் இறந்துபடுவேன்.
(வி-ரை.) “உயிரோடிருப்பின் அவர் வந்தால் இன்புறுவேன்; அவர் வருதற்குரித்தான இப்பருவத்தில் வாராமையின் யான் இனி இறந்து படுவேன்; யான் இறந்துபட்ட பின்னர் அவர் வரினும் வாராவிடினும் எனக்கு ஆகும் பயன் ஒன்றுமில்லை” என்று தலைவி கூறினாள்.
இன்னாதெறிதரும் வாடையென்றது அவ்வாடையே தன் உயிர் நீத்தற்குரிய காரணமாகுமென்று குறிப்பித்தவாறு.
துய் - பஞ்சின் நுனிபோன்றதொரு பொருள். ஓ, ஏ: அசைநிலை.
இரண்டாவது கருத்து: “நம்மேல் அன்புடையராயின் நம்மைத் துன்புறுத்தும் இவ்வாடைக்காலத்தே வந்து துன்பத்தைப் போக்க வேண்டும். இதற்குப் பாதுகாப்பாக வாராவிடின் அவர் இனி வந்தும் பயனில்லை” என்று தோழி கூறியதாகக் கொள்க.
மேற்கோளாட்சி 1-2. அகைப்பு வண்ணம் வந்தது (தொல். செய். 229, பேர். ந.)
மு. பருவங்கண்டழிந்து தலைவி கூறியது (தொல். கற்பு. 6, ந. செய், 211, பேர் ந.)
ஒப்புமைப் பகுதி 1. யாராகியர்: குறுந். 40:1.
1-2. அவர் யாராகியர்: ‘வாரா தோர்நமக் கியாஅர்” (அகநா. 50:8.)
4. கருவிளம்பூவிற்கு மயிற் பீலி: “தண்புனக் கருவிளைக் கண்போன் மாமலர், ஆடுமயிற் பீலியின் வாடையொடு துயல்வர” (நற். 262: 1-2.)
3-4. புதல கருவிளை: “கருவிளை முரணிய தண்புதற் பகன்றை” (அகநா. 255:11.)
5. நுண் முள் ஈங்கை: “கொடுமு ளீங்கை” (நற். 204:9; அகநா. 357:1.)
5-6. ஈங்கையின் துய்ம்மலர்: “ஈங்கைய, வண்ணத் துய்ம்மலர்” (குறுந். 380: 5-6); “ஈங்கைத் துய்த்தலைப் புதுமலர்” (நற். 193:1-2); “ஈங்கைத் துய்யவிழ் பனிமல ருதிர”, “முட்கொம்பீங்கைத் துய்த்தலைப் புதுவீ” (அகநா. 252:9-10, 306:3.)
5-7. வாடையால் ஈங்கைப்பூ உதிர்தல்: “ஈங்கைவா டுதிர் புக.... மேனின்ற வாடையால்” (கலி. 31:3-6.)
4-7. கருவிளை, ஈங்கை, வாடை: “நீர்வார் கண்ணிற் கருவிளை மலரத், துய்த்தலைப் பூவின் புதலிவ ரீங்கை, நெய்த்தோய்த் தன்ன நீர்நனை யந்தளிர், இருவகி ரீருளி னீரிய துயல்வர... ஆனா தெறிதரும் வாடையொடு” (அகநா. 294:5-15.)
மு. குறுந். 82.
(110)