பொன்னாகன். (பி-ம்.) 1. ‘கிடப்பினென்’; 3. ‘வைகலும்’; 4. ‘ஆராலருந்திய’, ‘லருந்தும்’; 5. ‘மென்மதிநுதலே’.
(ப-ரை.) இயல் தேர் கொண்க - இயற்றப்பட்ட தேரை உடைய தலைவ, நெய்தல் பரப்பில் - நெய்தல் நிலத்தின் கண், பாவை கிடப்பி - எனது பாவையை வளர்த்திவிட்டு, நின் குறி வந்தனென் - நீ இருக்குமிடத்து வந்தேன்; அல்கலும் - இரவு வருதலும், ஆரல் அருந்த வயிற்ற - ஆரல் மீனை அருந்தி நிறைந்த வயிற்றை உடைய ஆகிய, நாரை - நாரைகள், என் மகள் நுதல் மிதிக்கும் - என் மகளாகிய அப்பாவையின் நெற்றியை மிதிக்கும்; ஆதலின், செல்கம் - யாம் போகின்றோம்; செல்ல வியங்கொண்மோ - அவளைப் போகும்படி நீயே ஏவுவாயாக.
(முடிபு) கொண்க, பாவை கிடப்பினென்; வந்தனென்; என் மகள் நுதல் நாரை மிதிக்கும்; செல்கம்; செல வியங்கொண்மோ.
(கருத்து) தலைவியைக் கண்டு அளவளாவி விரைவில் விடுப்பாயாக.
(வி-ரை.) நெய்தற் பரப்பு - நெய்தற் பூவின் பரப்பு எனினுமாம்; பாவையின் இடத்துள்ள பேரன்பினால் நெய்தல் மலர்களைப் பரப்பி அப்பரப்பின் மேல் மெத்தென வளர்த்தி வந்தாளெனக் கொள்க, பாவை - பஞ்சாய்க் கோரையினாற் செய்த பாவை; தாது முதலியவற்றாற் செய்த பாவையுமாம். பாவை என்றது தலைவியை. இயல் தேர் - இயலுந்தேர் எனலுமாம். வந்தனென் என்று முன்பு ஒருமையாற் கூறிப் பின்பு செல்கமெனப் பன்மையாற் கூறினமையின் தோழியுடன் தலைவி வந்துள்ளா ளென்பதையும் அவளைக் குறியிடத்தே நிறுத்தித் தோழி வந்தனளென்பதையும் தலைவன் உணர்வான். வியங்கொள்ளல் - ஏவலை மேற் கொள்ளல்; “வியங்கொண்டான்” (சிலப். 9:78.) ஆரலருந்திய வயிற்றவென்றது, மிதிக்குங்கால் நோய்தரும் கனமுடையது என்றபடி.
என் மகள் என்றது பாவையை, பாவையினிடத்தே அன்பு பூண்டு அதனைப் போற்றி வளர்த்தலும், மணம் முதலிய செய்து மகிழ்தலும் மகளிர்க்கு இயல்பு. மகளிர்க்குப் பாவையின் பாலுள்ள அன்பை இந்நூல் 48-ஆம் செய்யுளாலும் அதன் விசேடவுரையாலும் உணரலாகும்.
மோ: முன்னிலையசை (குறுந். 275;2, 390;2.) அல்கல் - இரா; பகல் குறைந்து இரா வருதல் என்னும் பொருளில் வந்தது.
ஏ: ஈற்றசை.
மேற்கோளாட்சி மு. தலைமகள் குறை நயந்தமை தலைமகற்குக் கூறியது (தொல். களவு. 24, இளம்.); ஆயத்தின் நீங்கித் தன்னொடு நின்ற தலைவியைத் தலைவனொடு கூட்டவேண்டி அவளின் நீங்கித் தலைவனுக்கு இன்னுழி எதிர்ப்படுதியென உரைக்கும் இடத்துப் பாங்கிக்குக் கூற்று நிகழ்ந்தது; ‘வந்தன னென்றும் என்மகளென்றும் ஒருமைகூறிச் செல்கமென்ற உளப்பாட்டுப் பன்மையால் தலைவி வரவுங்கூறி இடத்து
உய்த்தவாறும் உணர்த்தினாள்; செலவியங் கொண்மோ வென்றது நீயே அவளைப் போக விடுவாயாக வென்றதாம்’ (தொல். களவு 24, ந.)
ஒப்புமைப் பகுதி 1. பாவை : குறுந். 48:1, ஒப்பு. 2. தலைவன் தேரூர்ந்து வருதல்;தொல்.பொருள்.
4-5. ஆரல் அருந்த வயிற்ற நாரை: “பழனப் பன்மீ னருந்த நாரை” (ஐங். 70:1.)
நாரை ஆரல்மீனை அருந்துதல் : குறுந். 25: 4-5, ஒப்பு: “கூர்வாய்ச் சிறுகுருகே குண்டுநீ ருட்கிடந்த, ஆர லிரைகருதி நித்தலு நிற்றியால்” (தொல். களவு. 20, ந. மேற்.); “கழிப்புநீ ராரலொடு கொழுப்பிறாக் கொளீஇய, நாரைச் சேவல் பார்வலொடு வதிந்த”, “கழனி யாரல் கவுளகத் தடக்கிப், பழன மருதிற் பார்ப்புவாய்ச் சொரிந்து, கருங்கா னாரை நரன்று வந்திறுப்ப” (பெருங். 3. 4:42-3, 7:29-31.)
மு. | “பனியேர் நறுமலர்ப் பாயலிற் கண்வளர் பாவையொரு | | தனியே கிடந்தழுந் தாயுமங் கில்லைத் தடஞ்சிலம்பா |
| முனியேல் விடைகொள்வன் முற்றுநின் காவன் முகிணகைசெங் |
| கனியே யினியசெவ் வாய்நவ்வி மான்விழிக் காரிகையே” |
| (அம்பிகாபதி கோவை, 153) |
(114)