(தலைவன் வரைந்து கொள்ளாமல் நெடுநாள் ஒழுகினானாக, அவ்வொழுக்கத்தால் வரும் அச்சத்தினும் அவன் வாராதமைவதால் வரும் துன்பம் பொறுத்துக் கொள்ளுதற்கரியது என்று தலைவிக்குக் கூறும் வாயிலாகத் தோழி வரைவின் இன்றியமையாமையைப் புலப்படுத்தியது.)
 117.    
மாரி யாம்ப லன்ன கொக்கின் 
    
பார்வ லஞ்சிய பருவர லீர்ஞெண்டு 
    
கண்டல் வேரளைச் செலீஇய ரண்டர் 
    
கயிறரி யெருத்திற் கதழுந் துறைவன்  
5
வாரா தமையினு மமைக்  
    
சிறியவு முளவீண்டு விலைஞர்கை வளையே. 

என்பது வரைவு நீட்டித்த விடத்துத் தலைமகட்குத் தோழி சொல்லியது.

குன்றியன் (பி-ம். குன்றியனார்.)

     (பி-ம்.) 3. ‘செலீஇ’; 4. ‘கயிறரி பெருந்தீரத் தழுந்துந் துறைவன்’, ‘பெருந்திறத் தழுந்து துறைவன்’.

     (ப-ரை.) தோழி---, மாரி ஆம்பல் அன்ன கொக்கின் - மாரிக்காலத்து ஆம்பல் மலரைப் போன்ற தோற்றத்தை உடைய கொக்கினது, பார்வல் அஞ்சிய பருவரல் - பார்வையை அஞ்சிய துன்பத்தையுடைய, ஈர் ஞெண்டு - ஈரமான நண்டு, கண்டல் வேர் அளை செலீஇயர் - தாழை வேரினிடையே உள்ள வளைக்குட் செல்லும் பொருட்டு, அண்டர் கயிறு அரி எருத்தின் - இடையராற் பிணிக்கப்பட்ட கயிற்றை அறுத்துச் செல்லும் எருதைப் போல, கதழும் -விரைந்து செல்லுதற்கு இடமாகிய, துறைவன் - கடற்றுறை யையுடைய தலைவன், வாராது அமையினும் அமைக -இங்கே வாராமற் பொருந்தினும் பொருந்துக; அவன்வாரா மையால் நின் உடல் மெலிய நின்கைகள் முன் அணிந்த வளைகளை இழப்பினும் பிறருக்கு அம்மெலிவு புலப்படாமல் அந்நிலையிலும் செறிப்பதற்குரியனவாகிய, விலைஞர் கைவளை - விற்பார் தரும் கைவளைகளுள், சிறியவும் - சிறிய அளவை யுடையனவும், ஈண்டு உள - இங்கே உள்ளன.

     (முடிபு) துறைவன் வாராதமையினும் அமைக; விலைஞர் கைவளை சிறியவும் ஈண்டு உள.

     (கருத்து) தலைவன் வரைந்து கொள்ளாமையால் உண்டான மெலிவை நாம் மறைத்து ஒழுகுவோமாக.

     (வி-ரை.) கொக்கின் புறத்தே அலைநீர்த்திவலைகள் காணப்படும் ஆதலின், அதற்கு மாரியினால் நனைந்த ஆம்பலை உவமை கூறினாள். பார்வல் - பார்வை; “இன்க ணுடைத்தவர் பார்வல்” (குறள். 1152) என்பதன் உரையைப் பார்க்க.

     தலைவன் தலைவியோடு களவின்பம் துய்த்து வரைந்து கொள்ளாமல் நெடுநாள் ஒழுகினான்; அதனால் தலைவி துயருற்றாள். தோழி அதனை உணர்ந்து, “இவர் வரைதல் இன்றிக் களவில் வந்து செல்லுதல் அச்சந் தருதற்குரியது. இங்ஙனம் நம் உள்ளத்தே அச்சம் மிகும்படி வருவதினும் வாராதமைவதே நலம் தரும். அங்ஙனம் வாராமலிருப்பின் எனக்குத் துயரம்மிக்கு உடல் மெலியும், அவ்வுடல் மெலிவைக் கைவளைகள் கழன்று புலப்படுத்துமேயெனின் அம்மெலிவைப் பிறரறியாவாறு செறித்துக் கொள்ளும் சிறியவளைகளும் உள்ளன” என்றாள். இதனால் களவுப் புணர்ச்சியினால் வரும் அச்சத்தையும், அது பெறாவிடின் தலைவிக்கு உண்டாகும் துன்பத்தையும் வெளியிட்டு, இவ்விரண்டும் நீங்க விரைவில் வரைந்து கொள்ளுதலே தக்கதென்னும் கருத்தைக் குறிப்பித்தாள்.

     இது, தலைவன் சிறைப்புறத்தானாகத் தோழி தலைவிக்குக் கூறியதென்று தோற்றுகின்றது.

     கொக்கின் பார்வையை அஞ்சி நண்டு தன் வளையிலே தங்குவதைப் போல, ஊரினர் அலரை அஞ்சித் தலைவன் தலைவியை விரைவில் மணந்துகொண்டு தன் அகத்தே இல்லறம் நடத்தற்குரியன் என்பது குறிப்பு.

     ஏகாரம் ஈற்றசை.

     மேற்கோளாட்சி 3-4. கதழ்வு என்னும் உரிச்சொல் விரைவுப்பொருளில் வந்தது (தொல். உரி. 18, இளம், 17, ந.)

     1-4. தலைமகள் உவமை கூறியவழி, நின்ற பெண்டிர் தடுப்பக் கயிறரி யெருதுபோலப் போந்தனையெனத் துனியுறு கிளவி வந்தது. (தொல். உவமை. 30, இளம்.)

     ஒப்புமைப் பகுதி 1. கொக்கின் புறத்திற்கு ஆம்பற்பூ : குறுந். 122:1-2: “மாரிக் கொக்கின் கூர லன்ன, குண்டுநீ ராம்பற் றண்டுறை யூரன்”, “கயக்கணக் கொக்கி னன்ன கூம்புமுகைக், கணைக்கா லாம்பல்”, “கொக்கின், கூம்பு நிலை யன்ன முகைய வாம்பல்” நற். 100:2-3, 230:2-3, 280:1-2.)

     2. பார்வல் : மதுரைக். 231; பதிற்.84:5; புறநா.3:19; பெருங்.3. 4:43.

     2-3. நண்டினது கண்டல் வேரளை : “புலவுத்திரை யுதைத்த கொடுந்தாட் கண்டற், சேர்ப்பே ரீரளை யலவன்” (நற்.123:9-10); “கனிகவின் சிதைய வாங்கிக் கொண்டுதன், தாழை வேரளை வீழ்துணைக் கிடூஉம், அலவன்” (அகநா.380:5-7); “கண்டல் வேரளை சேரலவா நீ” (நன்.310, மயிலை. மேற்.)

     நண்டின் வேரளை : குறுந். 328: 1-2, ஐங்.22:1-2, 23:1.

     1-3. கொக்கிற்கு அஞ்சி நண்டு தன் வளையிற் புகுதல் : “வேப்பு நனை யன்ன நெடுங்க ணீர்ஞெண், டிரைதேர் வெண்குரு கஞ்சியயல, தொலித்த பகன்றை யிருஞ்சேற றள்ளற், றிதலையின் வரிப்ப வோடி விரைந்துதன், நீர்மலி மண்ணளைச் செறியு மூர” (அகநா. 176: 8-12)

(117)