ஐயூர் முடவன். (பி-ம்.) 2. ‘நிலவு குவித்தன்ன’ ; 4. ‘இன்னாராவார்’.
(ப-ரை.) தோழி---, நிலவு குவித்தன்ன வெண்மணல் ஒரு சிறை - நிலவைத் தொகுத்தாற்போன்ற தோற்றத்தை யுடைய வெள்ளிய மணற்பரப்பின் ஒரு பக்கத்தில் உள்ள, இருள் திணிந்தன்ன ஈரம் தண் கொழு நிழல் - இருள் செறிந்தாற் போன்ற ஈரமும் குளிர்ச்சியுமுடைய கொழுவிய நிழலையுடைய, கருகோடு புன்னை பூ பொழில் - கரிய கிளைகளையுடைய புன்னை மரங்கள் அடர்ந்த பூஞ்சோலை, புலம்ப - தனிமைப் பட்டிருப்ப, இன்னும் வாரார் - தலைவர் இன்னும் வந்தாரிலர்; பல் மீன் வேட்டத்து - பல வகை மீன்களை வேட்டையாடுதலையுடைய, என்னையர் திமில் - தமையன்மார் ஏறிச் சென்ற மீன் படகுகள், வரூ உம் - மீண்டு வரும்.
(முடிபு) பொழில் புலம்ப, இன்னும் வாரார்; என்னையர் திமில் வரூஉம்.
(கருத்து) தலைவர் இப்பொழுதே வருதல் நலம்.
(வி-ரை.) பகலில் தலைவியைக் கடற்கரைப் பொழிலிற் கண்டு இன்பந் துய்த்துவரும் தலைவன் ஒரு நாள் அங்கே தலைவி அறியாதவாறு அவளும் தோழியும் பேசுவனவற்றை அறிந்து மகிழும் அவாவினால் மறைந்திருந்தான். அவன் வந்திலனென்று கருதிய தோழி பின்பு அவன் அருகில் மறைந்திருப்பதை உணர்ந்து அவன் கேட்கவேண்டுமென்னும் கருத்தோடு தலைவிக்குச் சொல்லுவாளாய் இதனைக் கூறினாள்.
இருள் திணிந்தன்ன நிழலென்றது உள்ளே நிகழ்வனவற்றைப் புறத்தார் அறிவரிய நிலையின தென்றபடி. கொழு நிழல் புன்னைப்பூம் பொழிலுக்கு அடை. கடற்கரை மணற்பரப்பின் ஒரு சார் புன்னைப் பொழில் உள்ளது. மெத்தென்ற மணற்பரப்பும், தண்மையும,் பூமணமும் விரவியிருத்தலால் அது பகற்குறிக்கு ஏற்ற தகுதியையுடைய இடமென்பது பெறப்படும்.
புலம்ப - தனிப்ப; தலைவன் வாராமையினால் பொழில் தனிமை யுடையதாயிற்று.
“தலைவர் இதற்குள் வந்திருத்தல் வேண்டும். இனி வருவதற்குப் பாணிப்பின் மீன்வேட்டைக்குச் சென்ற நம் தமையன்மார் மீண்டு வந்துவிடுவராதலின், இங்கே நிற்றலரிதாகும்” என்று தலைவன் அறியும்படி கூறினாள். இதற்குப் பயன் தலைவன் உடனே மறைவினின்றும் வெளிவந்து தலைவியைக் காண்டல்.
காலையில் மீன்படகில் மீன்பிடிக்கச் சென்ற நெய்தனிலமாக்கள் மாலையில் மீண்டு வருதல் இயல்பு. ‘என்னையர் திமில் வரூஉம்’ என்றமையால் பகற்போது சுருங்குவதையும் தோழி குறிப்பித்தாளாயிற்று
ஏகாரம் : ஈற்றசை
மேற்கோளாட்சி 5. “வல்லெழுத் தியற்கை யுறழத் தோன்றும்” என்பதனுள் தோன்றுமென்பதனாற் பல என்பதன் அகரம் கெட, லகரம் மெல்லெழுத்தாய் முடிந்தது (தொல். உயிர்மயங்கு. 13, ந.)
மு. ஒருவழித் தணத்தற்கண் தோழி தலைவிக்குக் கூறியது (தொல். களவு. 24, இளம்.); தலைவன் நீடத் தலைவி வருந்தியது (நம்பி. 154.)
ஒப்புமைப் பகுதி 1. நிழலுக்கு இருள் : குறுந். 81:5-6, ஒப்பு.; “தூங்கிருள்வெய் யோற்கொதுங்கிப், புக்கிருந்தா லன்ன பொழில்” (நள. சுயம்வர.22.)
2. மணலுக்கு நிலவு : குறுந். 320:3; “நிலவெக்கர்ப் பல பெயர” (பொருந. 213); “நிலவுக்கானல்” (மதுரைக். 114); “நிலவடைந்த விருள் போல, வலையுணங்கு மணன்மூன்றில்” (பட். 82-3); “நிலவுமணல்”, “நிலவுமணன் முற்றத்து”, “நிலவுக்குவித் தன்ன மோட்டு மணல்”, “நிலவுத்தவழ் மணற்கோடு”, “நிலவுமண னீந்தி” (நற். 31:9, 140:6, 159:3, 163:5, 183:3), “வாணிலா வேய்க்கும் வயங்கொளி யெக்கர்” (கலித். 131:17); “நிலாவி னிலங்கு மணன்மலி மறுகு” (அகநா. 200:1); “நிலவு மணல் வியன்கானல்” (புறநா. 17:11); “நிலாவெழுந்த வார்மணல்” (திணைமா. 29); “நிலவோ ரன்ன வெண் மணற் பாக்கத்து” (தமிழ்நெறி, மேற்.); “அறல் விளங்கு நிலாமணல்” (மணி. 8:11.)
1-2. நிழலுக்கு இருளும் மணலுக்கு நிலவும்: “பொழிலே, இரவோ ரன்ன விருளிற் றாகியும், நிலவோ ரன்ன வெண்மண லொழுகியும், அரைசு மண நயந்த பந்தர் போலவும், வரைவா ழியக்கிய ருறைவிடம் போலவும்” (யா.வி.69, மேற்.)
3. கருங்கோட்டுப்புன்னை: நற். 67:5, 249:1, 311:9; ஐங்.161:2; பெருங்.1.40:68.
2-3. நிலவுமணலும் கருங்கோட்டுப்புன்னையும்: “நிலவுக்குவிந் தன்ன வெண்மண லொருசிறை, இரும்பி னன்ன கருங்கோட்டுப் புன்னை” (யா.வி.38, மேற்.)
3-4 புன்னைப் பொழிலில் தலைவனும் தலைவியும் அளவளாவுதல்: குறுந். 299:3-4, 303:6, கலித்.135:6,9,12; அகநா.320:10-13, 340:1-2, 370:3-4.
5. மீன் வேட்டம்: “புன்றலை யிரும்பரதவர் ... பாயிரும் பனிக்கடல் வேட்டஞ் செல்லாது” (பட். 90-92); “கோட்டுமீ னெறிந்த வுவகையர் வேட்டமடிந், தெமரு மல்கினர்”.
“எல்லிமிழ் பனிக்கடன் மல்குசுடர்க் கொளீஇ, எமரும் வேட்டம் புக்கனர்”, “கோட்சுறாக் குறித்த முன்பொடு, வேட்டம் வாயா தெமர்வா ரலரே,” “திண்டிமிற் பரதவ ரொண்சுடர்க் கொளீஇ, நடுநாள் வேட்டம் போகி” (நற்.49:5-6, 67:8-9, 215:1-2, 388:4-5); “பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்”, “கோட்டு மீன் வழங்கும் வேட்டமடி பரப்பு” (அகநா. 140:170:11); அகநா. 10:11; புறநா.399:5.
மீன்வேட்டையாடுவார் திமில் : குறுந்.304:4.
4-5. மீன்வேட்டம் புக்கார் திமிலில் வருதல்: “எந்தை திமிலிது நுந்தை திமிலென, வளைநீர் வேட்டம் போகிய கிளைஞர,் திண்டிமி லெண்ணும்” (நற். 331:6-8); “ஏற்பட, வருதிமில்” (அகநா.190:2-3.)
(123)