(பாங்கியிற் கூட்டத்தின் பின் பிரிவாற்றாமல் வருந்திய தன் வேறுபாடுகளை உணர்ந்து கவன்ற தோழியை நோக்கி, ‘‘தலைவரது பிரிவினால்எனது உள்ளம் நோய் கொண்டது; கண்களும் அழகிழந்து பசலையை அடைந்தன’’ என்று தலைவி கூறி ஆற்றாமைக்குக் காரணத்தைப் புலப்படுத்தியது.)
 13.    
மாசறக் கழீஇய யானை போலப் 
    
பெரும்பெய லுழந்த விரும்பிணர்த் துறுகல்  
    
பைத லொருதலைச் சேக்கு நாடன் 
    
நோய்தந் தனனே தோழி 
5
பசலை யார்ந்தன குவளையங் கண்ணே.  

என்பது தலைவன் தோழியிற் கூட்டங்கூடி (பி-ம். கூட்டி) ஆற்றும்வகையான் ஆற்றிவித்துப் பிரிய, வேறுபட்ட கிழத்தி தோழிக்கு உரைத்தது.

    (தோழியிற் கூட்டம்- தோழியை முன்னிட்டுக் கொண்டு தலைவியைக்கூடியது. ஆற்றும் வகையான் ஆற்றுவித்தல்: பெருநயப்புரைத்தும், பிரியேன் என்றும், பிரிந்து மீள்வேன் என்றும், இடமணித்தென்றும் கூறிஆற்றுவித்தல்.)

கபிலர்.

    (பி-ம்.) 1. ‘கெழீஇய’ 3. ‘லொருத்தலைச்’, ‘லொருதலை சேக்கு’; 5. ‘யார்ந்தநங்குவளை’, ‘யான்றனங்குவளை’.

    (ப-ரை.) தோழி-, மாசு அற கழீஇய- மேலே உள்ள புழுதி முற்ற நீங்கும்படி பாகனால் கழுவப்பட்ட, யானை போல-யானையைப் போல, பெரு பெயல் உழந்த-பெரிய மழையை ஏற்றுத் தூய்மையுற்ற, இரு பிணர் துறுகல்-பெரிய சருச்சரையை உடைய துறு கல்லானது, பைதல் ஒரு தலை-பசுமையை உடைய ஓரிடத்தில், சேக்கும் நாடன் - தங்குகின்ற மலை நாட்டை உடைய தலைவன், நோய் தந்தனன்- காம நோயைத் தந்தான்; அதனால், குவளை அம் கண்- முன்பு குவளை மலரைப் போன்று இருந்த என்னுடைய அழகிய கண்கள், பசலை ஆர்ந்தன- இப்பொழுது பசலை நிறம் நிரம்பப் பெற்றன.

    (முடிபு) தோழி, நாடன் நோய் தந்தனன்; அதனால் என் கண்கள் பசலையார்ந்தன.

    (கருத்து) தலைவன் பிரிவினால் வேறுபாடுகள் உண்டாயின.

    (வி-ரை.) மாசு என்றது புழுதியை; யானை தன் தலையிலும் உடம்பிலும் தானே புழுதியை வாரி வீசிக் கொள்ளும் இயல்பினது என்பது இங்கே அறிதற்குரியது; ‘‘நீறாடிய களிறு’’ (பட். 49) தன் பாலுள்ள புழுதி முற்றும் நீங்கும்படி கழுவப்பட்ட யானையைப் போலத் துறுகல்லில் உள்ள பல மாசுகளும் அறக்கழுவ வேண்டுதலின் பெரும்பெயல் என்றாள்; இங்கே கூறப்பட்ட இவ்வுவமை இந்நூலின் 279-ஆம் செய்யுளில், ‘‘மழைகெழு மறந்த மாயிருந் துறுகல், துகள்சூழ் யானையிற் பொலியத் தோன்றும்’’என்று எதிர்மறை முகத்தால் ஆளப்பட்டிருத்தல் காண்க. இருமை-கருமையுமாம். பிணர்-நால்வகை ஊறுகளுள் ஒன்று; இதனை ஜர்ஜ்ஜரா என்பர் வடமொழியாளர்; அது தமிழில் சருச்சரை என வழங்கும்;இக் காலத்தில் சுரசுரப்பு என்பதும் அது. துறுகல்- உருண்டைக் கல்;பொற்றையென வழங்கும்; நெருங்கிய மலையென்பர் நச்சினார்க்கினியர்.பைதல்-ஈரமுமாம். நாடன்-குறிஞ்சி நிலத் தலைவன் ; குறுந். 3:4,வி-ரை. நோயென்றது பிரிவாற்றாமையால் மிக்க காம நோயை (கலித்.17:9,ந.) அஃது உடம்பின் மெலிவிற்குக் காரணமாவது (சிலப். 16:79,அரும்பத.). பிரிவாற்றாத மகளிருக்குக் கண் பசத்தல் இயல்பு. குவளையங்கண் என்றது பசலை ஆர்வதற்கு முன் இருந்த நிலையைப் புலப்படுத்தியபடி; கழிந்ததற் கிரங்குதலால் தற்புகழ்ச்சி ஆகாது.

     துறுகல் தன் இயல்பினை மறைக்கும் மாசு நீங்கப் பெற்ற நாடன் அவ்வியல்பிற்கு மாறாக என் கண்களின் இயல்பை மறைக்கும் பசலையைவளரச் செய்தனன் என்பது குறிப்பு.

     (மேற்கோளாட்சி) மு. பாங்கி தலைவனை இயற்பழித்தது (தொல். களவு.23,இளம், ந.)

    ஒப்புமைப் பகுதி2. மழை துறுகல்லைக் கழுவுதல்: ‘‘வான்கண் கழீஇய வகலறை’’ (குறிஞ்சிப்.98)

    1-2. துறுகல்லிற்கு யானை உவமை: குறுந். 279;5-6; ‘‘கூழை யிரும்பிடிக் கைகரந் தன்ன, கேழிருந் துறுகல்’’, ‘‘பொருத யானைப் புகர்முகங் கடுப்ப, மன்றத் துறுகன் மீமிசைப் பலவுடன், ஒண் செங் காந்தளவிழு நாடன்’’ (குறுந்.111:4-5, 284:1-3); ‘‘யானை... தூறிவர் துறுகற் போலப் போர்வேட்டு, வேறுபல் பூளையொ டுழிஞை சூடி’’ (பட். 231-5); ‘‘காழ்மண் டெஃகங் களிற்றுமுகம் பாய்ந்தென, ஊழ்மல ரொழிமுகை யுயர்முகந் தோயத், துறுகல் சுற்றிய சோலை வாழை’’, ’’களிறுமலைந் தன்னகண்கூடு துறுகல்’’ (மலைபடு. 129-31, 384); ‘‘குறுங்கா லிற்றிப் புன்றலை நெடுவீழ், இரும்பிணர்த் துறுகற் றீண்டி வளிபொரப், பெருங்கை யானை நிவப்பிற் றூங்கும்’’ (அகநா.57:6-8.)

    4. தலைவியின் நோய: (குறுந்.224:3,400:7); ‘‘ஆற்றனோ யடவிவ ளணிவாட’’, ‘‘நோய்மலி நெய்சமொ டினைய றோழி’’, ‘‘நோயட வருந்தியும்’’ (கலித். 17:9, 27:22, 44:14).

    தலைவன் நோய் தருதல்; ‘‘உள்ளூருஞ் சிந்தைநோ யெனக்கே தந்து’’ (திவ். திருநெடுந்தாண்டகம், 23.)

    5. கண் பசலை ஆர்தல்: ‘‘காமங் கொல்லிவள் கண் பசந்ததுவே’’, ‘‘நெய்த லுண்கண் பைதல் கூர’’, ‘‘கண்ணுந் தோளுந் தண்ணறுங் கதுப்பும், பழநல மிழந்து பசலை பாய’’ ( நற். 35:12, 113:7,219:1-2); ‘‘பூப்போ லுண்கண் பொன்போர்த் தனவே’’, ‘‘உண்கண் பசப்ப தெவன்கொலன்னாய்’’, ‘‘ஏதி லாளர்க்குப் பசந்தவென் கண்ணே’’, ‘‘கயலெனக் கருதிய வுண்கண், பயலைக் கொல்கா வாகுதல் பெறினே’’ ‘‘நயந்தோருண்கண் பயந்துபனி மல்க’’, ‘‘பசப்பணிந் தனவான் மகிழ்நவென் கண்ணே’’, ‘‘என்செயப் பசக்குந் தோழியென் கண்ணே’’, ‘‘பல்லிதழுண்கண் பசத்தன்மற் றெவனோ’’, ‘‘பயந்தன மாதோநீ நயந்தோள் கண்ணே’’, ‘‘பனிமலர் நெடுங்கண் பசலை பாய’’, ‘‘கொன்றைப் பூவிற் பசந்த வுண்கண்’’ (ஐங். 16:4, 21:4, 34:4, 36:4-5, 37:2, 45:4, 169:5, 170:4, 264:4, 477:1, 500:1); ‘‘பல்லிதழ் மலருண்கண் பசப்ப’’, ‘‘பொன்னெனப் பசந்தகண் போதெழி னலஞ்செல’’ (கலித். 45:11, 77;12); ‘‘கண்பசந்து’’ (அகநா.146:11); ‘‘முயக்கிடைத் தண்வளி போழப் பயப்புற்ற, பேதை பெருமழைக் கண்’’, ‘‘கண்ணின் பசப்போ’’ (குறள்,1239-40); சீவக.231.

    4-5. தலைவனால் நோயும் பசலையும் உண்டாதல்: ‘‘ஆய்மல ருண்கண் பசப்பச், சேய்மலை நாடன் செய்த நோயே” (ஐங்.242:4- 5); ‘‘அரிமத ருண்கண் பசப்பநோய் செய்யும், பெருமான்’’ (கலித். 82:20-21); ‘‘சாயலு நாணு மவர்கொண்டார் கைம்மாறா, நோயும் பசலையுந் தந்து’’ (குறள், 1183); ‘‘பயப்பூரச், சங்காட்டந் தவிர்த் தென்னைத் தவிராநோய் தந்தானே’’(தே. திருஞா. திருச்செங்காட்டங்குடி.)

(13)