வெள்ளி வீதியார் (பி-ம். வெள்ளி வீதி.) (பி-ம்.) 2. ‘பிறங்கிரு’, ‘முந்நீராவிற்’.
(ப-ரை.) தோழி, நம் காதலோர் - நம்முடைய தலைவர், நிலம் தொட்டு புகாஅர் - சித்தி பெற்ற சாரணரைப்போலப் பூமியைத் தோண்டி உள்ளே புகார்; வானம் ஏறார் - ஆகாசத்தின் கண் ஏறார்; விலங்கு இரு முந்நீர் - குறுக்கிடுகின்ற பெரிய கடலின்மேல், காலின் செல்லார் - காலினால் நடந்து செல்லார்; நாட்டின் நாட்டின் - நாடுகள் தோறும், ஊரின் ஊரின் -ஊர்கள் தோறும், குடிமுறை குடிமுறை - முறையாகக் குடிகள் தோறும், தேரின் - ஆராய்ந்தால், கெடுநரும் உளரோ - அகப்படாமல் தப்புவாரும் உள்ளாரோ? இரார்.
(முடிபு) நம் காதலோர் புகாஅர்: ஏறார்; செல்லார்; தேரிற் கெடுநரும் உளரோ?
(கருத்து) தூதுவிட்டுத் தலைவரைத் தேடித் தருகுவன்.
(வி-ரை.) நிலந்தொட்டுப் புகுதல் முதலிய மூன்று அற்புத சக்திகளும் சித்தி வகைகள்; இவற்றை இருத்தியென்பர். சைனர்கள் இத்தகைய சித்திகளைப் பெற்ற சாரணரெண்மரென்பர்.பௌத்தர்களும் இத்தகைய சித்திகளைப் பற்றிப் பாராட்டுவர். தம் தந்தையாகிய சுத்தோதனனுக்கு ஞானம் உண்டாக்குதற் பொருட்டு இத்தகைய அற்புதங்களைப் புத்தர் காட்டினாரென்று அசுவகோஷ போதிசத்துவ ரென்பவரால் இயற்றப்பெற்ற புத்த சரிதத்தின் 19-ஆம் வர்க்கம் தெரிவிக்கின்றது.
விலங்குதல் - அலைகள் குறுக்கிடுதல். முந்நீர் - மண்ணைப் படைத்தல், காத்தல், அழித்தலென்னும் மூன்று நீர்மையையுடையது (சிலப். 17: ‘முந்நீரின்’ அடியார்.); யாற்று நீரும் ஊற்று நீரும் மழைநீருமுடைமையால் இப்பெயர் பெற்றதென்பது சிலர் கொள்கை (புறநா. 9, விசேடவுரை.)
நாடு, ஊர், குடி என்பன ஒன்றனுள் ஒன்று அடங்கியவை ஆதலின், அம்முறைப்படி கூறினாள். குடியென்றது குடும்பத்தை.
“நம் தலைவர் இவ்வுலகத்தில் ஏதேனும் ஒரு நாட்டிலுள்ள ஓரூரில் ஒரு குடியில் இருப்பர்; சாரணரைப் போல இவ்வுலகுக்குப் புறம்பே செல்பவரல்லர்; ஆதலின் எல்லா நாட்டிலும் உள்ள ஊர்கள் யாவற்றிலும் அமைந்த குடிகளையெல்லாம் தேடின் அகப்படாமற் போதற்கு நியாய மில்லை; அங்ஙனம் தேடித் தருவேன். நீ வருந்தற்க” என்று தோழி, தலைவியை ஆற்றுவித்தாள்.
ஏ : அசை நிலை.
இரண்டாவது கருத்து: ‘’தலைவரைத் தேடின் அகப்படுவார்” என்று கூறும் வாயிலாக, தூதுவிட்டு அங்ஙனம் தேடி அவரைக் கண்டு தன் நிலையைக் கூறச்செய்யின் நலமென்னும் கருத்தைத் தலைவி தோழிக்குப் புலப்படுத்தினாள்.
மேற்கோளாட்சி மு. செவிலி இடைச்சுரத்துச் சென்று தலைவியைத் தேடத் துணிந்தது; ‘இக் குறுந்தொகையுள் நம்மாற் காதலிக்கப் பட்டாரென்றது அவ்விருவரையும்’ (தொல். அகத். 37,ந.தமிழ்நெறி. 23, மேற்..) இருவராவார்: தலைவனும் தலைவியும்.
வரலாறு
இச்செய்யுளைப் பாடிய வெள்ளி வீதியார் தம்முடைய கணவனைத் தேடித் திரிந்தா ரென்றதொரு செய்தி,
| “நெறிபடு கவலை நிரம்பா நீளிடை |
| வெள்ளி வீதியைப் போல நன்றும் |
| செலவயர்ந் திசினால் யானே” (அகநா. 147:810) |
என்று ஒளவையாராற் கூறப்பட்டுள்ளது. அகநானூற்றின் 45-ஆம் செய்யுளில் வெள்ளி வீதியார்,
| “ஆதி மந்தி போலப் பேதுற் |
| றலந்தனெ னுழல்வென் கொல்லோ” |
என்று பாடியுள்ளார். வெள்ளி வீதியார் தம் கணவனைத் தேடிய வரலாற்றை நோக்குமிடத்து அங்ஙனம் தேடுவதற்குமுன் அகநானூற்றின் 45-ஆம் செய்யுளையும், குறந்தொகைச் செய்யுளாகிய இதனையும் கூறினரென்று தோற்றுகின்றது.
ஒப்புமைப் பகுதி 1-2. நிலத்திற் புகுதல், வானமேறுதல், கடலிற் செல்லுதல்: “நிலத்திற் குளித்து நெடுவிசும் பேறிச,் சலத்திற் றிரியுமோர் சாரணன்” (மணி. 24:46-7); “நீரினிற் பூவில் வானி னினைத் துழி யொதுங்கு கின்ற, சாரண ரெண்ம ராவார் சமணரி லிருத்தி பெற்றோர்” (சூடாமணி. 2:4.)
3. மு. அகநா. 236:17.
(130)