பாலைபாடிய பெருங்கடுங்கோ. (பி-ம்.) 4.’அழாற்றோழி’,
(ப-ரை.) தோழி---, வினையே - தொழில் தான், ஆடவர்க்கு உயிர் - ஆண்மக்களுக்கு உயிர் ஆகும்; வாணுதல் - ஒளிபொருந்திய நெற்றியையுடைய, மனையுறை மகளிர்க்கு - இல்லின் கண் உறையும் மகளிர்க்கு, ஆடவர் உயிர் என - கணவன்மாரே உயிர் ஆவரென்று, நமக்கு உரைத்தோரும் தாமே - நமக்கு எடுத்துக் கூறியவரும் அத்தலைவரே; அழாஅல் - அழுதலையொழிவாயாக; செலவு அழுங்குவர் - அவர் செல்லுதலைத் தவிர்வர்.
(முடிபு) தோழி, உரைத்தோரும் தாமே; அழாஅல்; செலவு அழுங்குவர்.
(கருத்து) தலைவர் உன்னைப் பிரியாராதலின் நீ வருந்தற்க.
(வி-ரை.) தலைவன், “ஆடவர்க்கு வினை உயிர்” என்று கூற அதனால், “இவன் வினைமேற் பிரியக் கருதினான்” என்று எண்ணித் தலைமகள் வேறுபட்டாள். அதுகண்ட தோழி, “வினையே ஆடவர்க்கு உயிரென்ற தன்றி, மகளிர்க்கு ஆடவரே உயிரென்றும் அவர் கூறியுள்ளார்; ஆதலின் அவர் உடலாகிய நின்னைவிட்டுப் பிரியார்; நீ வருந்தாதே” என்று கூறி ஆற்றுவித்தாள். இது கற்புக் காலத்தது.
வினையே: ஏகாரம் பிரிநிலை. வினையே யென்பதன் ஏகாரத்தை ஆடவரென்பதற்கும் கூட்டி முடிக்க. உயிரே: ஏகாரம் அசை நிலை. மனை யுறை மகளிர் - மனையிலிருந்து கற்பொழுக்கம் தவறாத மகளிர். உடலுள் ளளவும் முயற்சியுடன் இருத்தல் ஆடவர்க்கு இலக்கணமாதலின் அவர்க்கு வினை உயிரென்றும், கணவரைப் பிரிதலின்றி வாழ்வதே மகளிர்க்கு இலக் கணமாதலின் அவருக்கு ஆடவர் உயிரென்றும் கூறினான். நமக்கென்றது தனக்கும் தலைவிக்கும் உள்ள ஒற்றுமைபற்றி. உரைத்தோரு மென்ற உம்மை இப்பொழுது பிரிவதற்குரிய முயற்சியைச் செய்வோரும் என்று எதிரதுதழீஇயது. தாமே: ஏகாரம் தேற்றம்.
அழுங்குவர் - தவிர்வர்; ‘செலவழுங்கினார் - செலவு கெடுத்தார்’ (தொல். உரி. 53, இளம்.) செலவே: ஏ அசை நிலை.
ஒப்புமைப் பகுதி 1. வினை ஆடவர்க்கு உயிர்: “வினைநன் றாதல் வெறுப்பக் காட்டி” (அகநா. 33:1); “இன்பம் விழையான் வினைவிழைவான்றன்கேளிர், துன்பந் துடைத்தூன்றுந் தூண்” (குறள். 615.)
2. மகளிர்க்கு ஆடவர் உயிர்: “இன்னுயி ரன்ன பிரிவருங் காதலர்’ (நற். 237:3); “ஆடவ ருயிரென வருகு பேயினார்”, “ஐயா நீயென தாவி யென்பது, பொய்யோ பொய்யுரையாத புண்ணியா”, “பொருடரப் போயினர்ப் பிரிந்த பொய்யுடற், குருடரு தேர்மிசை யுயிர் கொண்டுய்த்தலான்”, “விழைவுறு பொருடரப் பிரிந்த வேந்தர்வந், துழையுறவுயிருற வுயிர்க்கு மாதரின்” (கம்ப. எழுச்சிப். 22, அரசியற். 9,. கார்காலப். 22, 25.)
4. அழாஅல்: குறுந். 8:2; “ஆழன் மடந்தை யழுங்குவர் செலவே” (நற். 391:1.)
(135)