(“நீ காம நோயுறல் தகாது” என்று பாங்கனை நோக்கித் தலைவன், “காமம் யாவரிடத்தும் இயல்பாக உள்ளதே; ஆயினும் அது வெளிப்படற் குரியதொரு காலத்தை யுடையது” என்று கூறியது.)
 136.    
காமங் காம மென்ப காமம் 
    
அணங்கும் பிணியு மன்றே நுணங்கிக் 
    
கடுத்தலுந் தணிதலு மின்றே யானை 
    
குளகுமென் றாண்மதம் போலப் 
5
பாணியு முடைத்தது காணுநர்ப் பெறினே. 

என்பது தலைமகன் பாங்கற்கு உரைத்தது.

மிளைப்பெருங் கந்தன்.

     (பி-ம்.) 3. ‘தணித்தலும்’; 4. ‘றாள் பதம்’.

     (ப-ரை.) காமம் காமம் என்ப - காமம் காமம் என்று உலகினர் அதனைக் குறை கூறுவர்; காமம் - அக்காமமானது, அணங்கும் - புதியதாகத் தோற்றும் வருத்தமும், பிணியும் அன்று - நோயும் அன்று; நுணங்கி - நுண்ணிதாகி, கடுத்தலும் - மிகுதலும், தணிதலும் - குறைதலும், இன்று - இலது; யானை---, குளகு மென்று ஆள் மதம் போல - தழை யுணவை மென்று தின்று அதனாற் கொண்ட மதத்தைப் போல, காணுநர் பெறின் - கண்டு மகிழ்வாரைப் பெற்றால், அது பாணியும் உடைத்து - அக்காமம் வெளிப்படும் செவ்வியையும் உடையது.

     (முடிபு) காமம் காமம் என்ப; காமம் அணங்கும் பிணியும் அன்று; கடுத்தலும் தணிதலும் இன்று; அது காணுநர்ப் பெறின் பாணியும் உடைத்து.

     (கருத்து) காமம் இயல்பாகவே ஒருவரிடம் இருந்து உரிய காலத்தில் வெளிப்படுவது.

     (வி-ரை.) தலைவன் ஒரு தலைவியைக் காமுற்றா னென்பதை யறிந்த பாங்கன், “பேரறிவுடைய நீ காம நோயை அடைதல் நன்றோ?” என்று இடித்துரைக்க, அவனை நோக்கித் தலைவன் கூறியது இது.

     என்ப - என்று உலகினர் கூறுவர். பொதுவாகச் சுட்டினும் பாங்கன் கூறியதையே தலைவன் கருதினான். அணங்கு - பிறரால் உண்டாகும் வருத்தம். பிணி - தன்பால் தோன்றும் நோய். கடுத்தல்: கடியென்னும் உரிச்சொல் ஈறு திரிந்தது; (குறள். 706, பரிமேல்..)

     நுணங்கிக் கடுத்தலென்னும் தொடரை இரண்டு செயலாக்கி நுணங்குதலும், கடுத்தலுமென்று கொள்க. கடுத்தல் - வெம்மையாதல்; தணிதல்- தண்மையாதல் எனலும் பொருந்தும் (குறள். 1104.)

     அடங்கியிருந்த யானையின் மதம் தழையுணவை உண்ட காலத்தில் வெளிப்படுவதைப் போல, ஊழின் வலியால் காணற்குரியாரைக் காணப்பெறின் இயல்பாகவே உள்ளத்துள் அடங்கியிருந்த காமம் வெளிப்படுமென்று உவமையை விரித்துக் கொள்க. இங்ஙனம் கூறியதனால், “தெய்வத்தின் ஆணை வழியே யான் தலைவியைக் கண்டேன்; அவள் எனக்குரிய ளாதலின் அவளைக் கண்ட மாத்திரத்தே என்பால் இதுகாறும் தோற்றாமல் அடங்கியிருந்த காமம் வெளிப்படும் செவ்வியை உடையதாயிற்று. ஆதலின் யான் கொண்ட காமம் பிறரால் வந்த வருத்தமன்று; என்பால் புதிதாக வந்த நோயுமன்று” என்பதைத் தலைவன் விளக்கினான்.

     இங்ஙனமே தலைவியைக் கண்ட காலத்தில் காமம் உண்டாவதற்குக் குளகையுண்டபோது யானைக்கு மதம் விளைதலை உவமம் கூறிய,

  
“நாறுமும் மதத்தி னாலே நாகத்தை யிரிக்கு நாகம் 
  
 ஆறிய சினத்த தன்றி யதிங்கத்தின் கவளங் கொண்டால் 
  
 வேறுநீர் நினைந்து காணீர் யாவர்க்கும் விடுக்க லாகா 
  
 தூறித்தே னொழுகுங் கோதை நம்பிக்கு மன்ன ளென்றான்” (750) 

என்ற சிந்தாமணிச் செய்யுளும், “குளகுபோல் மதத்தை விளைப்பவள் இவளும் ஆதலால் விடுத்தலரி தென்றான்” என்ற அதன் விசேடவுரையும் இங்கே பயன்படுவன.

     காமம் தலைவனிடத்தே அடங்கியிருந்து தலைவியைக் கண்ட காலத்தே வெளிப்படுமென்னும் கருத்து,

   
“நீங்கிற் றெறூஉங் குறுகுங்காற் றண்ணென்னும் 
   
 தீயாண்டுப் பெற்றா ளிவள்”                  (குறள். 1104)  

என்பதன் விசேடவுரையில் பரிமேலழகர்,

     ‘தன் காமத்தீத் தன்னையே அவள் தந்தாளாகக் கூறினான், அவளான் அது வெளிப்படுதலின்’என்றெழுதியதனாலும் விளங்கும்.

     பாணி - ஏற்ற காலம் (புறநா. 209:17); என்றது வெளிப்படற்குரிய காலத்தை.

     காணுநர் எனப் பன்மையாற் கூறினமையின் தலைவன் தலைவி யென்னும் இருசாரார்க்கும் இந்நிலை பொதுவென்பது பெறப்படும்; இதனை, உதயணனும் வாசவதத்தையும் ஒருவரையொருவர் காணுங் காலையில் அவ்விருவரிடத்தும் புதிதாகக் காமம் வெளிப்பட்டு இருவயினொத்த தென்பதைக் கூறுவதாகிய,

  
“இருவரு மவ்வழிப் பருகுவனர் நிகழ 
  
 ...... ...... ..... ...... 
  
 ...... ...... எடுத்த சென்னியன் 
  
 மன்னவன் முகத்தே மாதரு நோக்கி 
  
 உள்ளமு நிறையுந் தள்ளிடக் கலங்கி 
  
 வண்டுபடு கடாஅத்த வலிமுறை யொப்பன  
  
 பண்டுகடம் படாஅ பறையினுங் கனல்வன 
  
 விடற்கருந் தெருவினுள் விட்ட செவ்வியுட்  
  
 டுடக்குவரை நில்லாது தோட்டி நிமிர்ந்து 
  
 மதக்களி றிரண்டுடன் மண்டி யாஅங் 
  
 கில்வழி வந்ததம் பெருமை பீடுறத் 
  
 தொல்வழி வயகத்துத் தொடர்வினை தொடர 
  
 ...... ...... ..... ...... 
  
 ...... ...... ..... இசைந்த 
  
 அமைப்பருங் காதலும் ...... ...... 
  
 ...... ...... ..... ...... 
  
 இருவயி னொத்து”                  (1. 32:27-49.)  

என்னும் இனிய அரிய பெருங்கதைப் பகுதியால் உணரலாகும்.

     ஊழ்வலியினாலன்றி, வடகடலிட்ட ஒரு நுகத்தின் ஒரு துளையில் தென்கடலிட்ட ஒரு கழி கோத்தாற்போலக் (இறை. 2, உரை.) காணப்பெறுதல் அருமையாதலின், (குறள். 334, பரிமேல்.) பெறினென்றான்.

     காணுநர்ப் பெறின் - ஆராய்வாரைப் பெறினென்பதும் ஒன்று.

     மேற்கோளாட்சி மு. களவுக் காலத்துத் தலைவனைப் பாங்கன் கழறல் (தொல். கற்பு. 41, இளம்..)

     ஒப்புமைப் பகுதி 1-2. காமம்.... அன்றே: குறுந். 204:1-2. 4. யானை தழையுணவைத் தின்று மதங்கொள்ளுதல்: “புன்காற், சிறியிலை வேம்பின் பெரிய கொன்று, கடாஅஞ் செருக்கிய கடுஞ்சின முன்பிற், களிறு” (நற்.103:1-4.)

(136)