(தலைவியைப் பால்வயத்தனாகிக் கண்டு அளவளாவிய தலைவன், “நின்னை யான் பிரியேன்” என்று கூறி, அவள் பிரிவென்ப தொன்றுண்டென்று ஓர்ந்து அஞ்சுமாறு செய்தது.)
     137.    
மெல்லிய லரிவைநின் னல்லகம் புலம்ப  
    
நிற்றுறந் தமைகுவெ னாயி னெற்றுறந் 
    
திரவலர் வாரா வைகல் 
    
பலவா குகயான் செலவுறு தகவே. 

என்பது இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் பிரிவச்சம் உரைத்தது.

     (பிரிவச்சம் உரைத்தது - பிரிவென்பதொன்று உண்டென்றும், அஃது அஞ்சுதற் குரியதென்றும் தோன்ற உணர்த்தியது.)

பாலை பாடிய பெருங்கடுங்கோ.

     (பி-ம்.) 1. ‘புலம்பல்’; 4.’செலாஅது தகவே’.

     (ப-ரை.) மெல் இயல் அரிவை - மென்மைத் தன்மையையுடைய அரிவையே, நின் நல் அகம் புலம்ப - நின் நல்ல நெஞ்சம் தனிமையால் வருந்த, நின் துறந்து - நின்னைப் பிரிந்து சென்று, அமைகுவென் ஆயின் - சென்ற இடத்தே மனம் பொருந்தி இருப்பேனாயின், யான் செலவுறு தகவு - யான் அங்ஙனம் செல்வதற்குற்ற தக்க வினையின் கண், என் துறந்து இரவலர் வாரா வைகல் பல ஆகுக - என்னை நீங்கி இரப்போர் வாராத நாட்கள் பல வாகுக!

     (முடிபு) அரிவை, நின் அகம் புலம்ப நிற்றுறந்து அமைகுவெனாயின் யான் செலவுறு தகவு இரவலர் வாரா வைகல் பலவாகுக.

     (கருத்து) நின்னைப் பிரியேன்; பிரியின் அறப்பயனை இழந்தவனாவேன்.

     (வி-ரை.) மெல்லியலரிவை யென்றதும் நல்லகமென்றதும் என் பிரிவால் துன்பத்தைத் தாங்கற் கேற்ற ஆற்றலுடையாயல்லை யென்னும் கருத்துடையன. அரிவையென்றது இங்கே பருவங் குறித்ததன்று.

     எற்றுறந்து - என்னை நெடுந்தூரத்திலே மனத்தால் துறந்து.

  
“ஒல்வ, கொடாஅ தொழிந்த பகலு முரைப்பிற் 
  
 படாஅவாம் பண்புடையார் கண்”            (நாலடி. 169) 

என்பவாதலின் ஈதலில்லா நாள் நன்னாளன்று. யான் வினை மேற்கொண்டு செல்வேனாயின் அங்ஙனம் செல்லுமிடத்தில் இரவலரைப் பெறாத துன்பத்தை யானடைகவென்பது கருத்து.

    யான் செலவுறு தகவானது இரவலர் வாரா வைகல் பலவற்றின் பயனை உடையதாகுக வென்றும் பொருள் கூறுதல் பொருந்தும். செல்லலென்பது துன்பத்துக்குப் பெயராதலைப் போலச் செலவென் பதையும் துன்பத்துக்குப் பெயராகக் கொண்டு யான் துன்பத்தை அடையும்படி இரவலர் வாரா வைகல் பல எனக்கு ஆகுக வென்று பொருள் கொள்ளுதலும் ஒன்று; செலவு உறுதக - துன்பத்தை அடைய.

     இரப்போரைக் காணாமலும், இரப்போர்க்கு ஈயாமலும் இருக்கும் நாள் கெட்ட நாளென்பது கருதி வஞ்சினங் கூறுவோர் இங்ஙனம் குறிப்பது மரபு;

  
“புரப்போர் புன்கண் கூர  
  
 இரப்போர்க் கீயா வின்மையா னுறவே”      (புறநா. 72:17-8), 
  
“ஏற்றவற் கொருபொரு ளுள்ள தின்றென்று 
  
 மாற்றல னுதவலன் வரம்பில் பல்பகல் 
  
 ஆற்றில னுழற்றுமோ ராத னெய்துமக் 
  
 கூற்றுறு நரகினோர் கூறு காள்கயான்”      (கம்ப. பள்ளியடைப். 113.) 
  
“கருந்தடங்கண் மங்கையரை நோக்குற்ற கண்ணும் 
  
 பெருந்தடந் தோள்பிணித்த கையும் - பருந்தின் 
  
 வளைவாயிற் பெய்யேனேல் வந்திரத்தார் துன்பம் 
  
 களையாது மாற்றுகவென் கை”         (வீர. பொருட். 17, மேற்.) 

என்பவற்றை ஓர்க.

     தலைவன் இங்ஙனம் கூறியதனால் தலைவி, “இவர் செலவுறுதற்குரிய காரியமும் உண்டு போலும்!” என்று கருதிப் பிரிவை அஞ்சுவாள்;

     “இவ்வாறு இவை கேட்ட தலைமகள் ‘எம்பெருமான் நின்னிற் பிரியேன், பிரியினுமாற்றே னென்கின்றானால் பிரிவென்பதும் ஒன்று உண்டுபோலும்! கேட்ட தகைமையால் அது தங் காதலரைக் காணாதுங் கேளாதுங் கையினகன்று மெய்யினீங்குவது’ எனக் கலங்கி... மனமுருகிப் பசந்து காட்டினாள்” (இறை. 2, உரை) என்பதைப் பார்க்க.

     மேற்கோளாட்சி மு. தெளிவகப்படுத்தியது (தொல். களவு. 10, ந.); தீராத் தேற்றம். (இ.வி. 497.)

     ஒப்புமைப் பகுதி 1. மெல்லியலரிவை :குறுந்.89:7,ஒப்பு.

(137)