ஒக்கூர் மாசாத்தியார். (பி-ம்.) 3. ‘புகுவிடன்’, ‘குழீஇப்’; 4. ‘கிளிப்பயிர்ந்’, ‘கிளைப்பயிர்ந்’.
(ப-ரை.) ஐய---, மனை உறை கோழி குறுகால் பேடை -இல்லின்கண் உறைகின்ற கோழியினது குறிய காலையுடைய பேடையானது, வேலி வெருகு இனம் - வேலிக்கு அயலில் உள்ள காட்டுப் பூனையின் கூட்டம், மாலை உற்றென - மாலைக் காலத்தில் உற்றதாக, புகும் இடம் அறியாது - அதற்கு அஞ்சிப் பாதுகாப்பாகப் புகுதற்குரிய இடத்தை அறியாமல், தொகுபு உடன் குழீஇய - சேர்ந்து ஒருங்கே கூடும் பொருட்டு, பைதல் பிள்ளை கிளை - துன்பத்தையுடைய குஞ்சுகளாகிய இனத்தை, பயிர்ந்தா அங்கு - அழைத்துக் கூவினாற் போல, இன்னாது இசைக்கும் அம்பலொடு - இன்னாததாகிப் பரத்தையராற் கூறப்படும் பழி மொழியோடு, எம் தெரு - எம்முடைய தெருவிற்கு, வாரல் - வருதலை ஒழிவாயாக; வாழியர் - நீ வாழ்வாயாக!
(முடிபு) ஐய, அம்பலொடு எம் தெரு வாரல்; வாழியர்!
(கருத்து) எம் தெருவிற்கு வரின் பரத்தையர் பழி கூறுவர்.
(வி-ரை.) காட்டுப் பூனைகள் வேலியின் கண்ணே மறைந்து வாழ்வன வாதலின், “வேலி வெருகினம்” என்றாள்; ‘படப்பை வேலியும் புதலும் பற்றி விடக்கிற்கு வேற்றுயிர் கொள்ளும் வெருகு” (தொல். மரபு. 68, பேர்.)
தன்னாற் பாதுகாக்கப்பட்ட பிள்ளையை வெருகு கவருமோ வென்னும் அச்சத்தினால் கோழிப் பேடை கூவியது போலத் தம்பால் இருந்து வந்த தலைவனைத் தலைவி கவர்ந்து தன்பால் இருத்திக் கொள்வாளோ வென்னும் அச்சத்தினால் பரத்தையர் பழிமொழி கூறினரென்று உவமையை விரித்துக் கொள்க.
அம்பல் - தலைவன் பரத்தையரோடு அளவளாவினா னென்று ஊரினர் கூறும் பழிமொழி யெனலுமாம்;
| “..... ..... ...... ....... நெருநை |
| ஆடினை யென்ப புனலே யலரே |
| மறைத்த லொல்லுமோ மகிழ்ந |
| புதைத்த லொல்லுமோ ஞாயிற்ற தொளியே” (ஐங்.:2-5) |
“இங்ஙனம் ஊரினர் நின்னைப் பற்றிக் கூறும் பழிமொழிகளோடு இங்கே வரின் தலைவி நின்னை ஏற்றுக் கொள்ளாள்; ஆதலின் வாரற்க” என்று தோழி கூறியதாக இப்பொருளுக்கேற்பச் செய்யுட் பொருளை முடித்துக் கொள்க.
தலைவனிடத்துப் பணிந்தொழுகும் நிலையினளாகிய தோழி ‘வாரல்’ என்று வாயில் மறுத்தாளாதலின் அத்துணிவுக்கு மாற்றாக ‘வாழியர்’ என வாழ்த்தினாள்.
ஏகாரம் - அசை நிலை.
மேற்கோளாட்சி 1. பிள்ளை யென்னும் இளமைப் பெயர் கிளியின் மேல் வருமென்பதற்குப் பேராசிரியர், “பைதற் பிள்ளைக் கிளிபயிர்ந் தாஅங்கு” என்ற ஓரடியைக் காட்டினர் (தொல். மரபு. 4, உரை); அவ்வடி இவ்வடியின் பாடபேதம் போலும்.
மு. 1 ‘நீத்த கிழவனை நிகழுமாறு படீஇக் காத்த தன்மையிற் கண்ணின்று பெயர்க்குங்கால் தோழிக்குக் கூற்று நிகழ்ந்தது(தொல். கற்பு. 9, இளம்.); ‘இதனுள் அம்பலொடு வாரலெனவே, பன்னாள் நீத்தமையுங் கண்ணின்று பெயர்த்தமையுங் கூறிற்று. கோழி போலத் தாயர் மகளிரைத் தழீஇக் கொண்டா ரென்றலிற் புறம்போயும் பயமின்றெனக் காத்த தன்மை கூறிற்று’. (தொல். கற்பு. 9, ந..)
ஒப்புமைப் பகுதி 1. மனையுறைகோழி: “மனைவா ழளகு”, “மனையுறை கோழியோடு” (பெரும்பாண். 256, 299); “மனையளகு” (திருவள்ளுவ. 5.)
2. வேலிவெருகு: “ஈர்முள் வேலிப் புலவுநாறு முன்றில், எழுதியன்ன கொடிபடு வெருகின், பூளை யன்ன பொங்குமயிர்ப் பிள்ளை” (அகநா. 297:12-4.)
1-2. வெருகு மாலைக் காலத்திற் கோழியைக் கவர்தல்: “குவியடி வெருகின் பைங்க ணேற்றை, ஊனசைப் பிணவி னுயங்கு பசிகளை இயர், தளிர்புரை கொடிற்றிற் செறிமயி ரெருத்திற், கதிர்த்த சென்னிக் கவிர்ப்பூ வன்ன, நெற்றிச் சேவ லற்றம் பார்க்கும், புல்லென் மாலையும்” (அகநா. 367:8-12.)
4. பிள்ளை: குறுந். 46:5, 92:4.
1-4. வெருகினை யஞ்சி, கோழிப் பேடை ஒலித்தல்: “ஊர்முது வேலிப் பார்நடை வெருகின், இருட்பகை வெரீஇய நாகிளம் பேடை, உயிர்நடுக் குற்றுப் புலாவிட் டரற்ற” (புறநா. 326:1-3.)
(139)
1. | பரத்தையிற் பிரிந்து தலைவியைக் கைவிட்ட தலைவனைத் தானொழுகும் இல்லறத்தே படுத்தல் வேண்டிப் புறத்தொழுக்கிற் பயனின்மை கூறிக்காத்த தன்மையினாலே கண்ணோட்டமின்றி நீக்குதல் (ந.) |