(தலைவன் சான்றோரைத் தலைவியின் தமர்பால் மணம் பேசி வர விடுப்ப, தன்தமர் மறுப்பாரோ என்று அஞ்சிய தலைவியை நோக்கி, “தலைவன் வரைவை நமர் ஏற்றுக்கொண்டனர்; நீ கவலை ஒழிவாயாக” என்று தோழி கூறியது.)
 146.    
அம்ம வாழி தோழி நம்மூர்ப 
    
பிரிந்தோர்ப் புணர்ப்போ ரிருந்தனர் கொல்லோ 
    
தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவலர் 
    
நன்றுநன் றென்னு மாக்களோ 
5
டின்றுபெரி தென்னு மாங்கண தவையே. 

என்பது தலைமகன் தமர் வரைவொடு வந்து சொல்லாடுகின்றுழி வரைவு மறுப்பவோ எனக்கவன்ற தலைமகட்குத் தோழி சொல்லியது.

    (தலைமகள் தமர் வரைவு மறுத்தல்: இறை.29, உரை.)

வெள்ளிவீதியார்.

     (பி-ம்.) 2. ‘புணர்பவ’, ‘புணர்ப்பவ’.

     (ப-ரை.) தோழி-, அம்ம - கேட்பாயாக: ஆங்கணது அவை -அவ்விடத்திலுள்ளதாகிய நம்மைச் சார்ந்த குழுவிலுள்ளார், தண்டுடைகையர் - தண்டைப் பிடித்த கையினரும், வெள் தலை சிதவலர் - நரையையுடைய தலைக்கண் துகிலையுடையவருமாகிய, நன்று நன்று என்னும் மாக்களோடு - நன்று நன்று என்று கூறும் தலைவன் தமரோடு, இன்று பெரிது என்னும் - இந்நாள் நீங்கள் வரப் பெற்றமையால் பெருமையுடையதென்று முகமன் கூறுவர்; ஆதலின், நம் ஊர் - நமது ஊரின்கண், பிரிந்தோர் புணர்ப்போர் இருந்தனர் - பிரிந்தவர்களைச் சேர்த்து வைப்போர் இருந்தனர்.

     (முடிபு) அவை மாக்களோடு இன்று பெரிதென்னும்; பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர்.

     (கருத்து) தலைவன் வரைவை நமர் ஏற்றுக் கொண்டனர்.

     (வி-ரை.) வாழி: அசை நிலை. பிரிந்திருக்கும் தலைவியும் தலைவனும் வரைவினால் ஒன்றுபடுவராதலின் அதற்குடம்பட்டோரை, ‘பிரிந்தோர்ப் புணர்ப்போர்’ என்றாள். தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவல ரென்றது, தலைவன் விடுத்த சான்றோரது முதுமைப் பருவத்தை விளக்கி நின்றது; பெரியோரை மணம்பேச விடுத்தல் மரபு; “கற்றார் மற்றுங்கட்டுரை வல்லார் கவியென்னும், நற்றேர் மேலார் நால்வரை விட்டாற் கவர்சென்றார்” (சீவக. 1054.) சிதவல் - சிதறிய துணி; “சிதவற் றுணியொடு” (மணி.3:106); இங்கே தலையிலணியும் துகிலுக்கு ஆயிற்று. அவை யென்றது தந்தையையும், தன்னையரையும்; ‘தலைமகன் பார்ப்பாரை முன்னிட்டு அருங்கலங்களோடு வரைவு வேண்டி விட்ட விடத்துத் தந்தையும், தன்னையரும் மறுத்தார்’ (இறை. 28, உரை); இந்த அவை மன்றென்றும் கூறப்படும் (குறள். 1138.) கொல், ஓ, ஏ: அசை நிலைகள்.

     மேற்கோளாட்சி மு. தமர் வரைவு மறுப்பரோவெனக் கவன்றாட்குத் தோழி கூறியது (தொல். களவு, 23.ந.)

     ஒப்புமைப் பகுதி 1. அம்மவாழி தோழி: குறுந். 77:1, ஒப்பு.

     2. பிரிந்தோர்ப் புணர்ப்போர்: ‘‘பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்’’ (குறுந். 156:6.)

     3. தண்டுடைக் கையர்: “தொடித்தலை விழுத்தண் டூன்றி நடுக்குற், றிருமிடை மிடைந்த சிலசொற், பெருமூ தாளரேம்” (புறநா. 243:12-4; மணி.14:30.)

     5. ஆங்கண்: மதுரைக். 327; குறிஞ்சிப்.4, 192; மலைபடு.350, 438.

     அவை: “மன்றங் கறங்க மணப்பறை யாயின” (நாலடி. 23.)

     3-5. நரைமூதாளர் மன்றத் திருத்தல்: “கொழுங்குடி போகிய பெரும்பாழ் மன்றத்து, நரைமூ தாளர்” (அகநா. 377: 6-7);“பாழ்படு பொதியில், நரைமூ தாளர்” (புறநா. 2:13-4.)

(146)