இளங்கீரந்தையார். (பி-ம்.) 1. ‘சீறாஅர்ச்’; 4. ‘குறுந்தோ’, ‘டலரும்’, ‘டலமரும்’; 5. ‘காரெனத் தேறாயாயின்’.
(ப-ரை.) செல்வம் சிறாஅர் - செல்வத்தையுடைய சிறு பிள்ளைகளுடைய, சிறு அடி பொலிந்த - சிறிய அடியின்கண் விளங்கிய, தவளை வாய - தவளையின் வாயைப் போன்ற வாயையுடைய, பொலம் செய் கிண்கிணி காசின் அன்ன - பொன்னாற் செய்யப்பட்ட கிண்கிணிக் காசைப் போன்ற, போது ஈன்கொன்றை -பேரரும்பை வெளிப்படுத்தும் கொன்றை மரம், குருந்தோடு - குருந்த மரத்தோடு, அலம் வரும் - சுழலும், பெருதண் காலையும் - மிக்க தண்மையையுடைய பருவத்தையும், கார் அன்று என்றி ஆயின் - கார் காலமன்றென்று நீ கூறுவாயாயின், இது கனவோ - இங்ஙனம் தோற்றுவது கனவோ? யான் வினவுவல் - யான் கேட்பேன்; கூறுவாயாக.
(முடிபு) கொன்றை அலம்வரும் காலையும் காரன்றென்றியாயின் கனவோ? யான் வினவுவல்.
(கருத்து) தலைவர் இக்கார் காலத்தும் மீண்டும் வந்திலர்.
(வி-ரை.) பொன்னாற் செய்யப்பட்ட கிண்கிணி யென்னும் ஆபரணத்தை யணியும் பொருள் மிகுதியை யுடையராதலின் ‘செல்வச் சிறாஅர்’ என்றாள். பொலிந்த கிண்கிணி, வாய கிண்கிணியென இயையும். கிண்கிணி பொன்னாற் செய்யப்படுதலின் ‘பொலஞ்செய் கிண்கிணி’ என்றாள். கிண்கிணி கொன்றைப் போதிற்கு உவமை; போது - மலரும் பருவத்தரும்பு. கொன்றையும் குருந்தும் கார்காலத்தே மலர்வன; “குருந்தலை வான்படலை சூடிச் சுரும்பார்ப்ப, ஆயன் புகுதரும் போழ்தினான்” ( ஐந்.எழு.28) என்பது காண்க. காற்றடித்தலால் கொன்றை குருந்தோடு அலம் வந்தது; அலமருதல் அலம்வருதலெனவும் வழங்கும்; ‘வெறியோ டலம்வரும் யாய்” ( ஐந் ஐம்.20);. “அலம்வ ருஞ் சுட ருடுக்களு மமரரும் பிறரும், வலம்வ ரும்படி யிருப்பது கயிலை மால்வரையே” ( கந்த. திருக்கைலாசப். 12.) காலையும்: உம்மை உயர்வு சிறப்பு. என்றி - என்கின்றாய்; “இன்றை யளவைச் சென்றைக் கென்றி” ( குறுந்.383:3) என்று பின்னும் வருதல் காண்க. கனவோ: ஓகாரம் வினா. மற்று, ஏ: அசைநிலைகள்.
மேற்கோளாட்சி மு. இகுளை வம்பென்பதைத் தலைவி மறுத்தது. (நம்பி. 170.)
ஒப்புமைப் பகுதி 2. பொலஞ்செய் கிண்கிணி: கலி. 96:17.
தவளைவாய கிண்கிணி: “தேரைவாய்க் கிண்கிணி” (கலி. 86:9); (பெருங். 1.46:246; 53:166; 3.9:167; 5.9:90); (சீவக. 243, 2481, 3126.)
1-2. சீறடிக் கிண்கிணி: “கிண்கிணி களைந்தகா லொண்கழ றொட்டு” (புறநா. 77:1)
சிறார் காலில் கிண்கிணி யணிதல்: “அரிபெய் கிண்கிணியார்ப்பத் தெருவிற், றேர்நடை பயிற்றுந் தேமொழிப் புதல்வன்”, “பெருஞ்செங் கிண்கிணிப், பாலார் துவர்வாய்ப் பைம்பூட் புதல்வன்” (நற். 250: 2-3, 269: 1-2); “அரிபொலி கிண்கிணி யார்ப்போவா தடிதட்ப ........ ........ ................ போல வருமென்னுயிர்”, “காலவை, சுடுபொன் வளைஇய வீரமை சுற்றொடு, பொடியழற் புறந்தந்த செய்வுறு கிண்கிணி” (கலி.8:6-10, 85:1-2.)
2-3. கொன்றை மலருக்குப் பொன்: “நன்னெடுங் காந்தட் போதினறைவிரி கடுக்கை மென்பூத், துன்னிய கோபத்தோடுந் தோன்றிய தோற்றந் தும்பி, இன்னிசை முரல்வ நோக்கி யிருநில மலர்க்கை யேந்திப், பொன்னொடுங் காசை யீட்டிக் கொடுப்பதே போன்றதன்றே” (கம்ப. கார்காலப். 31.)
4-5. குருந்து கார்காலத்தில் மலர்தல்:“குரவுந் தளவுங் குருந்துங் கோடலும், அரவுகொண்டரும்ப.... கார்வளம் பழுனிக் கவினிய கானத்து”(பெருங். 1. 49:98-101);“குருந்தோடு முல்லை குலைத்தனகாண்”(திணைமா. 112); கைந்நிலை,25, 29. கொன்றையும் குருந்தும்: “குருந்துங் கொன்றையும் வருந்த வணக்கி”, “கொன்றையுங் குருந்தும்” (பெருங்.1. 51:42, 2. 12:18-9); “கொன்றாய் குருந்தே கொடிமுல்லாய் வாடினீர்” (திணைமா. 81) 3-5. கொன்றை கார்காலத்து மலர்தல்: குறுந். 21:3-4 ஒப்பு.
(148)