(தலைவி தமரைப் பிரிந்து தலைவனுடன் சென்றதைத் தோழியால்அறிந்த செவிலி, ‘‘நம் மகளும் அவள் அன்பனும் பாலையைக் கடந்து சென்று இதற்குள் மணம் புரிந்து கொண்டிருப்பர்; அதனால் அவர்களுடைய நட்பு உலகறிய உறுதி பெற்றதாகும்’’ என்று நற்றாய்க்குக் கூறியது.)
 15.    
பறைபடப் பணில மார்ப்ப விறைகொள்பு  
    
தொன்மூ தாலத்துப் பொதியிற் றோன்றிய  
    
நாலூர்க் கோசர் நன்மொழி போல  
    
வாயா கின்றே தோழி யாய்கழற்  
5
சேயிலை வெள்வேல் விடலையொடு  
    
தொகுவளை முன்கை மடந்தை நட்பே. 

என்பது உடன்போயின பின்றைத் தோழி செவிலிக்கு அறத்தொடுநின்றாள்; நிற்பச் செவிலித் தாய் நற்றாய்க்கு அறத்தொடு நின்றது.

    (உடன் போயின பின்றை- தலைவி தன் தமரைப் பிரிந்து தலைவனுடன் போன பின்பு, அறத்தொடு நிற்றல்- தலைவி இன்ன தலைவனுடன் நட்புப் பூண்டு சென்றாள் என்ற உண்மையைக் கூறி அத் தலைவியின் கற்பிற்குச் சார்பாக நிற்றல், நற்றாய் -தலைவியை ஈன்ற தாய்.)

ஒளவையார்.

    (பி-ம்.) 3. ‘நல்லூர்க்’ 6. ‘தொடுவளை முன்கை நம்’

    (ப-ரை.) தோழி-, ஆய்கழல்-அழகிய வீரக் கழலை யும், செ இலை-செம்மையாகிய இலையை உடைய, வெள்வேல்- வெள்ளிய வேலையும் கொண்ட, விடலையொடு- தலைவனோடு, தொகுவளை முன்கை-பலவாகத்தொக்க வளைகளைப் பூண்ட முன் கைகளை உடைய, மடந்தை நட்பு- நின்மகள் செய்த நட்பானது, தொல் முது ஆலத்து பொதியில்-மிகப்பழைய ஆல மரத்தடியின் கண் உள்ள பொதுவிடத்தில், இறைகொள்பு தோன்றிய-தங்குதலைக் கொண்டு தோன்றிய, நாலூர் கோசர் நன்மொழி போல- நான்கு ஊரில் உள்ள கோசரது நன்மையை உடைய மொழி உண்மையாவதைப் போல, பறை பட- முரசு முழங்கவும், பணிலம் ஆர்ப்ப- சங்கு ஒலிக்கவும், மணம் செய்தலால், வாய் ஆகின்று-உண்மை ஆகியது.

    (முடிபு) விடலையொடு மடந்தை நட்பு வாயாகின்று.

    (கருத்து) தலைவி தன் தலைவனுடன் சென்றனள்.

    (வி-ரை.) பறையும் சங்கும் மங்கல நாளில் முழங்குவன: ‘‘மத்தளம் கொட்ட வரிசங்க நின்றூத, முத்துடைத் தாம நிரை தாழ்ந்த பந்தற் கீழ், மைத்துன னம்பி மதுசூதன் வந்தென்னைக், கைத்தலம் பற்றக்கனாகண்டேன்றோழிநான்’’ (திவ். நாச்சியார்.6:6)என்பதிலும் மணத்தில் இவ்விரண்டும் கூறப்படுதல் காண்க; பறை என்றது இங்கே தோற்கருவிகளைக் குறித்து நின்றது; ‘‘பல்லா ரறியப் பறையறைந்து நாட்கேட்டுக், கல்யாணஞ் செய்து” (நாலடி.86) என்புழிப்போல. பொதியில்- பொது இல் - அம்பலம் (முருகு. 226, ந.) பலர்கூடியிருத்தற் கேற்ற கிளைப்பரப்பும் நிழலும் உடைமையின் ஆல மரத்தின் அடியிலே அவை கூடுதல் பண்டை வழக்கம் என்று தெரிகின்றது: ‘‘வெல்போரிராம னருமறைக் கவித்த, பல்வீ ழாலம் போல’’ (அகநா. 70:15-6) என்பதனாலும் அதன் உரையாலும் இதனை அறியலாகும். கோசர்: மோகூர்ப் பழையனுடைய நியாய சபையில்இருந்த ஒரு வகை வீரர்; இவர் நான்கு பிரிவினர்கள் என்று தெரிகின்றது (மதுரைக். 508-9,ந.); நாலூர் -ஓர் ஊருமாம்; விடலை-பாலைத் திணைக்குரிய தலைவன் பெயர்.

    கொடுப்போர் இன்றியும் கரணம் நிகழ்வது உண்டாதலின், உடன்போக்கின்பின் இருவரும் மணம் புரிந்து கொள்வதனால் மடந்தையினதுநட்பானது உலகறிய உண்மையாகும் என்றாள் செவிலி.

     (மேற்கோளாட்சி) மு. தலைவி தலைவனுடன் சென்றமை அறிந்து தோழியோடுபொருந்திக் கற்பின் ஆக்கத்து நிற்றற்கண் செவிலிக்குக் கூற்று நிகழும்(தொல். களவு. 25,இளம்.); ‘இதனுள் விடலையொடு மடந்தை நட்பு, பறைபடப் பணில மார்ப்ப இறைகொண்டு நாலூர்க் கோசர் நன்மொழி போல வாயாயிற்றெனச் செவிலி நற்றாய்க்குக் கூறினமையானும், விடலைஎனப் பாலை நிலத்திற்குரிய தலைவன் பெயர் கூறினமையானும் கொடுப்போர் இன்றியும் கரணம் நிகழ்ந்தவாறு’ (தொல்.கற்பு .2,இளம், ந.இ.வி.528); உடன்போயினபின் செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நின்றது (தொல்.களவு. 24, ந.); செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நின்றது (நம்பி.185.)

    ஒப்புமைப் பகுதி3. கோசர: குறுந். 73:4; புறநா, 169:9, அடிக். 2-3.ஆலம் பொதியிற் கோசர்; ‘‘துனைகா லன்ன புனைதேர்க் கோசர், தொன்மூ தாலத்தரும்பணைப் பொதியில்’’ (அகநா. 251:7-8); ‘‘வலம்புரி கோசரவைக்களத் தானும்’’ (புறநா. 283:6.)

    4. ஆகின்று: குறுந், 166:4, 248:3, 258:2 271:5, 394:7. 3-4. கோசர்மொழி உண்மையாதல்: ‘‘ வாய்மொழி நிலைஇய சேண்விளங்கு நல்லிசை, வளங்கெழு கோசர்’’(அகநா.205:8-9.)

    5. சேயிலை வெள்வேல்: ‘‘சேயிலை வெள்வேல், மதியுடம்பட்ட மையணற் காளை’’ (அகநா.221:5-6.) இலைவேல்: ‘‘திருந்திலை நெடுே்வல்’’(புறநா.180:13.) 4-5. கழல்விடலை: ‘‘வில்லோன் காலன கழலே’’(குறுந்.7:1) 6. தொகுவளை: ‘‘தொக்க வளையுமுடைத் தொன்மைக் கோலம்’’(திருவா.கோத்தும்பி) வளைமுன்கை: குறுந்.56:3.4-6.விடலை யொடு நட்பு வாயாதல்: குறுந் .3.

(15)