(தலைவன் நெடுங்காலம் வரையாது இருந்தமையின் வருந்திய தன்னை இடித்துரைத்த தோழியை நோக்கி முன்னிலைப் புறமொழியாக, “என்னை இடித்துரைப்போர் காமத்தின் தன்மையையும் தலைவர் உடனுறைவதன் இன்றியமையாமையையும் உணர்ந்திலர்” என்று தலைவி கூறியது.)
 152.   
யாவது மறிகிலர் கழறு வோரே  
    
தாயின் முட்டை போலவுட் கிடந்து 
    
சாயி னல்லது பிறிதெவ னுடைத்தோ 
    
யாமைப் பார்ப்பி னன்ன 
5
காமங் காதலர் கையற விடினே. 

என்பது வரைவு நீட்டித்தவழி (பி-ம். நீட்டிய வழி ) ஆற்றாளாகிய தலைமகள், “நீ ஆற்றுகின்றிலை” என்று நெருங்கிய தோழிக்குச் சொல்லியது.

     (நெருங்கிய - இடித்துரைத்த.)

கிளி மங்கலங் கிழார் (பி-ம். கிழிமங்கலங்கிழார், கழிமங்கலங்கிழார், கிள்ளிமங்கலங்கிழார்.)

     (ப-ரை.) யாமை பார்ப்பின் அன்ன காமம் - தாய்முகம் நோக்கி வளருந் தன்மையையுடைய ஆமையின் பார்ப்பைப் போலத் தலைவரைப் பல்காற் காண்டலால் வளருந்தன்மையையுடைய காமமானது, காதலர் கையற விடின் - அவர் நாம் செயலறும்படி நம்மைப் பிரிந்து கைவிட்டால், தாய் இல் முட்டை போல - தாயில்லாத முட்டை கிடந்தபடியே அழிவது போல, உள் கிடந்து சாயின் அல்லது - உள்ளத் துள்ளே கிடந்து மெலியினன்றி, பிறிது எவன் உடைத்து - வேறு என்ன உறுதியை உடையது? கழறுவோர் - என்னை இடித்துரைப்போர், யாவதும் - இதனைச் சிறிதேனும், அறிகிலர் - அறிந்திலர்.

     (முடிபு) காமம், காதலர் விடின், சாயினல்லது பிறிதெவனுடைத்து? கழறுவோர் யாவதும் அறிகிலர்.

     (கருத்து) தலைவர் விரைவில் வரைகிலரேல் காமம் பயனற்றுக் கெடும்.

     (வி-ரை.) விரைவில் வரைந்து கொள்ளுதற்குரிய முயற்சியைத் தலைவன் செய்யும்படி அவனைத் தூண்டாமல் தன்னைக் கடிந்த அயன்மை பற்றித் தோழியை வேறுபடுத்திப் படர்க்கையாற் கூறினாள்; முன்னிலைக் கண் உள்ள தோழிக்குப் படர்க்கையாற் குறிப்பாக உணர்த்தினமையின் இது முன்னிலைப் புறமொழி.

    கழறுதல் - இடித்துரைத்தல்.

     தாயில்லாத முட்டை அத்தாயால் இடப்பட்டும் அடுத்தடுத்துப் பாதுகாத்தலை யொழிந்தமையின் குஞ்சாகும் பயனைப் பெறாதது போல, தலைவனால் உண்டான காமம் அவன் வரைந்து கொண்டு இடையீடின்றி உடனுறையும் நிலை பெறாமையின் இல்லறப் பயனைப் பெறாதென உவமையை விரித்துக் கொள்க. உட்கிடந்து சாய்தலை உவமைக்குங் கூட்டிக் கருவானது வெளிவராமல் முட்டைக்குள்ளே கிடந்து அழிதலையுங் கொள்க.

  
“தீம்பெரும் பொய்கை யாமை யிளம்பார்ப்புத் 
  
 தாய்முக நோக்கி வளர்ந்திசி னாஅங் 
  
 கதுவே யையநின் மார்பே் 
  
 அறிந்தனை யொழுகுமதி யறனுமா ரதுவே”     (ஐங். 44) 

என்புழியும் யாமைப் பார்ப்பைக் காமத்துக்கு உவமை கூறியிருத்தல் காண்க. பார்ப்பின் அன்ன: இன், வேண்டாவழிச் சாரியை.

    மேற்கோளாட்சி4-5.பார்ப்பென்னும் இளமைப் பெயர் தவழ்வனவற்றிற்கும் உரியது (தொல். மரபு. 26, இளம், 5, பேர்.)

     மு. தலைவி முன்னிலைப் புறமொழி மொழிந்தது (இ.வி. 513.)

     ஒப்புமைப் பகுதி 1. கழறுவோர் காமத்தின் தன்மையை அறியார்: குறுந். 260: 1-2.

     4. யாமைப் பார்ப்பு: அகநா. 160: 5-7.

(152)