(தலைவன் வரையாமல் நெடுங்காலம் வந்து அளவளாவுதலால் வருந்திய தலைவி தோழியை நோக்கி, “இனி அவரை வாரற்கவென்று கூறுவாயாக” என, தோழி தலைவியை, “அங்ஙனம் கூறுதற்குக் காரணம் யாது?” என வினவ, “அவர் வரும் வழியின் ஏதமறிந்து எனக்கு ஆற்றாமை உண்டாகின்றது” என்று தலைவி கூறியது.)
 153.   
குன்றக் கூகை குழறினு முன்றிற் 
    
பலவி னிருஞ்சினைக் கலைபாய்ந் துகளினும் 
    
அஞ்சும னளித்தெ னெஞ்ச மினியே 
    
ஆரிருட் கங்கு லவர்வயிற் 
5
சார னீளிடைச் செலவா னாதே. 

என்பது வரையாது நெடுங்காலம் வந்தொழுகுகின்றுழி, “நாம் அவரை வேறுபடுத்தற்குக் காரணம் என்னை? ‘‘என்ற தோழிக்கு, “அவர் வரவு நமக்கு ஆற்றாமைக்குக் காரணமாம்” எனத் தலைமகள் கூறியது.

     (வேறு படுத்தல் - இங்ஙனம் வருதலைத் தவிர்வாயாக வென்று கூறிப் பிரித்தல்.)

கபிலர்

     (பி-ம்.) 4. ‘லவர்வரிற்’; 5. ‘சீரானீளிடைச்’.

     (ப-ரை.) என் நெஞ்சம்-, குன்றம் கூகை குழறினும் - குன்றிலுள்ள பேராந்தை ஒலித்தாலும், முன்றில் - முற்றத்திலுள்ள, பலவின் இரு சினை - பலாமரத்தினது பெரிய கிளையினிடத்து, கலை பாய்ந்து உகளினும் - ஆண் குரங்கு தாவித் துள்ளினாலும், அஞ்சும் - அச்சத்தை முன்பு அடையும்; மன் - அது கழிந்தது; இனி - இப்பொழுது, அரு இருள் கங்குல் - செல்லுதற்கரிய இருளையுடைய இரவில், அவர் வயின் - அவரிடத்தே, சாரல் நீள் இடை - மலைச்சாரற் கண்ணுள்ள நெடுவழியில், செலவு ஆனாது - செல்லுதலை நீங்காது; அளித்து - அஃது இரங்குதற்குரியது.

     (முடிபு) என் நெஞ்சம் அஞ்சுமன்; இனி அவர்வயின் செலவு ஆனாது; அளித்து.

     (கருத்து) தலைவர் இரவில் வருதலின், ஆற்றின் ஏதம் அஞ்சி வருந்துகின்றேன்,

     (வி-ரை.) குழறுதல் - பொருளற்ற ஒலியைச் செய்தல்; கூகை ஒலித்தலைக் குழறலென்றல் மரபு. தலைவர் வருங்காலத்தும் மீண்டு செல்லுங் காலத்தும் அவருக்கு ஏதேனும் இடையூறு உண்டாகுமோவென அஞ்சி அவரையே நினைந்திருத்தலின் தன் நெஞ்சத்தை அவர்வயின் நீளிடைச் செல்வதென்றாள். ஆரிருட்கங்குலென்றாள், புறத்தே செல்லுதற் குரிய காலமன்றென்பது கருதி. சாரலென்றாள், புலி முதலிய கொடிய விலங்குகள் உண்மையை நினைந்து. நீளிடையாதலும் ஆற்றாமையை மிகுவித்தற்குக் காரணமாயிற்று.

     மேற்கோளாட்சி 1. குன்றக் கூகை யென்பதில் அக்குச் சாரியையின் அகரம் நிற்ப ஏனைய கெட்டன (தொல். புணர். 26, ந.); உருபு தொக வந்தது ( தொல். வேற்றுமை மயங். 21, சே, ந, கல்.); ஏழாம் வேற்றுமைத் தொகை ( தொல். எச்ச. 17, இளம், 16, தெய்வச்; நன்.362, மயிலை, 363, சங்.)

     மு. தலைமகள் ஆறுபார்த்துற்ற அச்சக்கிளவி (நம்பி. 164.)

     ஒப்புமைப் பகுதி 3. இனி: குறுந். 84:2, ஒப்பு.

     1-3. கூகை குழறினால் மகளிர் அஞ்சுதல்: “பராஅரை வேம்பின் படுசினை யிருந்த. குராஅற் கூகையு மிராஅ விசைக்கும், ஆனா நோயட வருந்தி” (நற். 218: 7-9); “வெருவர, மன்ற மராஅத்த கூகை குழறினும், நெஞ்சழிந் தரணஞ் சேரும்” (அகநா. 158: 12-4); “மாடத் தகத்தி லாடு வினைக் காவினுட், கொம்பர் மீமிசைக் கூகைவந் துலாஅய், வித்தகக் கைவினைச் சத்தி யேறி, உட்குத்தக வுரைத்தலுங் கட்கின் பாவை, நெஞ்சந் துட்கென நெடுவிடை நின்ற, காற்றெறி வாழையி னாற்ற நடுங்கி”, “இரவுக் குறிவயின், வெருவக் குழறிய விழிகட் கூகைக், கடுங்குர லறியாள் கதுமென நடுங்கினள்” (பெருங். 3. 14:151-6, 22:150-52.)

    ஆண்குரங்கு பாய மகளிர் அஞ்சுதல்:“கருமுக முசுக்கலை கதுமெனத் தோன்ற, இன்னதென் றுணரா ணன்னுத னடுங்கி”, “முகத்தே வந்தோர் முசுக்கலை தோன்ற, அகத்தே நடுங்கி யழற்பட வெய்துயிர்த்து” (பெருங். 2.16:109-10, 19:167-8.)

     3-5. தலைவனோடு நெஞ்சு அவன் செல்லும் வழியிற் செல்லுதல்: “சாரல் விலங்குமலை யாரா றுள்ளுதொறும், நிலம்பரந் தொழுகுமென் னிறையி னெஞ்சே” (நற். 154:10-12); “நன்னர் நெஞ்சம், என்னொடு நின்னொடுஞ் சூழாது கைம்மிக், கிறும்புபட் டிருளிய விட்டருஞ் சிலம்பிற், குறுஞ்சுனைக் குவளை வண்டுபடச் சூடிக், கானநாடன் வரூஉம்யானைக், கயிற்றுப் புறத்தன்ன கன்மிசைச் சிறுநெறி, மாரி வானந் தலைஇ நீர்வார், பிட்டருங் கண்ண படுகுழி யியவின், இருளிடை மிதிப்புழி நோக்கியவர், தளரடி தாங்கிய சென்ற தின்றே”(அகநா. 128:6-15)

(153)