(பொருளீட்டும் பொருட்டுத் தன்னைப் பிரிந்து சென்ற தலைவனை நினைந்து, “என்னைப் பிரிந்து நெடுந்தூரத்தில்தங்கும் வன்மையை அவர் எங்ஙனம் பெற்றார்?” என்று தலைவி தோழியை நோக்கிக் கூறியது.)
 154.   
யாங்கறிந் தனர்கொ றோழி பாம்பின் 
    
உரிநிமிர்ந் தன்ன வுருப்பவி ரமையத் 
    
திரைவேட் டெழுந்த சேவ லுள்ளிப் 
    
பொறிமயி ரெருத்திற் குறுநடைப் பேடை 
5
பொரிகாற் கள்ளி விரிகா யங்கவட்டுத் 
    
தயங்க விருந்து புலம்பக் கூஉம் 
    
அருஞ்சுர வைப்பிற் கானம் 
    
பிரிந்துசே ணுறைதல் வல்லு வோரே. 

என்பது பொருள்வயிற் பிரிந்த தலைமகனை நினைந்து தலைமகள் தோழிக்கு உரைத்தது.

மதுரைச் சீத்தலைச் சாத்தன்.

     (பி-ம்.)3.‘லுன்னிப்’; 5. ‘பொரிக்காற்’.

     (ப-ரை.) தோழி-, பாம்பின் உரி நிமிர்ந்தன்ன - பாம்பினது உரி மேலெழுந்தாற் போன்ற, உருப்பு அவிர் அமையத்து - கானல் விளங்குகின்ற நண்பகற் காலத்தில், இரை வேட்டு எழுந்த சேவல் உள்ளி - இரையை விரும்பி மேலெழுந்து பறந்து சென்ற ஆண் பறவையை நினைந்து, பொறி மயிர் எருத்தின் - புள்ளிகளையுடைய மயிர் பொருந்திய கழுத்தையும், குறுநடை - குறுக அடியிடும் நடையினையும் உடைய, பேடை - பெண்புறாவானது, பொரி கால் கள்ளி - பொரிந்த அடியையுடைய கள்ளியினது, விரி காய் அம் கவட்டு - வெடித்த காயையுடைய அழகிய கிளையில், தயங்க இருந்து - விளங்கும்படி இருந்து, புலம்ப கூஉம் - தனிமை தோன்றும்படி கூவுகின்ற, அரு சுரம் வைப்பின் கானம் - கடத்தற்கரிய வழியையுடைய இடமாகிய பாலை நிலத்தை, பிரிந்து - கடந்து, சேண் உறைதல் வல்லுவோர் - நெடுந்தூரத்தில் தங்குதலில் வன்மையையுடைய தலைவர், யாங்கு அறிந்தனர் - அவ்வன்மையை எவ்வாறு தெரிந்து கொண்டனர்?

     (முடிபு) தோழி, கானம் பிரிந்து உறைதல் வல்லுவோர் யாங்கு அறிந்தனர்?

     (கருத்து) தலைவர் என்னைப் பிரிந்து எங்ஙனம் ஆற்றியிருக்கின்றனர்?

     (வி-ரை.) யான் அத்தகைய வன்மையை அறிந்திலனேயென்னும் கருத்தால் அவர் எங்ஙனம் அறிந்தனரென்றாள். கானலின் தோற்றத்திற்குப் பாம்பின் சட்டை உவமை. விரிகாய் - வெடிக்கும் காய்.

     அப்பாலை நிலத்தைக் கடக்கும் போது அங்குள்ள காட்சிகள் தலைவன் தலைவியரிடையே இருக்க வேண்டிய அன்பை நினைப்பூட்டுவன வாதலின் அவற்றைப் பார்த்த பின்பும் மேலே செல்லுதற்குப் பெருவன்மை வேண்டுமென்பாள் உறைதல் வல்லுவோரென்றாள்.

     பிரிந்த சேவலை நினைந்து பேடை கூவுதலைக் கண்டு தம்மை நினைந்து யானும் வருந்துதலைத் தலைவர் உணர்தல் கூடுமென்பது தலைவி கருத்து.

     கொல், ஏ: அசை நிலைகள்.

     மேற்கோளாட்சி மு. தலைவன் பிரிந்துழித் தோழிகூற்றினைப் பின்னுங்கேட்டற்குத் தலைவி விரும்பியது; 'இது வல்லுவோ ரென்னும் பெயர் கூறித் தோழி கொடுமை கூறியவழி அவளையே பிரிதல் வன்மை யாங்கறிந்தனரெனத் தலைவி வினவுதலின் அது பின்னுங் கேட்டற்கு அவாவியதாம்' (தொல். கற்பு. 6, ந.)

     ஒப்புமைப் பகுதி 2. உருப்பு: குறிஞ்சிப் 45; நற்.43:1, 99:2; அகநா.11:2, பு.வெ.255.

     4. புறா, பொறிகளை யுடையது: "பொறிவரிப் புறவின் செங்காற் சேவல்" (அகநா.47:11); புறநா.43:6.

     4-6. புறா கள்ளியில் இருத்தல்: (குறுந். 174: 1-3); "நுண்பொறிப் புறவின் செங்காற் சேவல், வெண்சிறைப் பெடையொடு விளையாட்டு விரும்பி, வன்பர லார்ந்த வயிற்ற வாகிக், கண்பொரி கள்ளிக் கவர்சினையேறிக், கூப்பிடு குரலிசை சேட்புலத் திசைப்பவும்" (பெருங். 1.52: 46-50.)

     7. அருஞ்சுர வைப்பு: குறுந். 77:5, ஒப்பு.

(154)