(தலைவியின்பால் விருப்புற்ற தன்னைப் பாங்கன் இடித்துரைத்தபோது தலைவன் பாங்கனை நோக்கி, "நீ இடித்துரைத்தலால் பயனொன்று மில்லை" என்று கூறியது.)
 156.   
பார்ப்பன மகனே பார்ப்பன மகனே 
    
செம்பூ முருக்கி னன்னார் களைந்து 
    
தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்துப்  
    
படிவ வுண்டிப் பார்ப்பன மகனே 
5
எழுதாக் கற்பி னின்சொ லுள்ளும் 
    
பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின் 
    
மருந்து முண்டோ மயலோ விதுவே. 

என்பது கழறிய பாங்கற்குக் கிழவன் அழிந்து கூறியது.

பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணன்.

     (பி-ம்.) 3. ‘தாழ்மண்டிலத்துப்’; 4. ‘படிம’; 5. ‘னின்செயலுள்ளும்’.

     (ப-ரை.) பார்ப்பன மகனே பார்ப்பன மகனே---, செ பூ முருக்கின் - செம்மையாகிய பூவையுடைய புரச மரத்தினது, நல் நார் களைந்து - நல்ல பட்டையை நீக்கி விட்டு, தண்டொடு பிடித்த - அதன் தண்டோடு ஏந்திய, தாழ் கமண்டலத்து - தாழ்கின்ற கரகத்தையும், படிவம் உண்டி - விரதவுணவையுமுடைய, பார்ப்பன மகனே-, எழுதா கற்பின் - வேதத்தையறிந்த, நின் சொல்லுள்ளும் - நின்னுடைய அறிவுரைகளுள், பிரிந்தோர் புணர்க்கும் - பிரிந்த தலைவியரையும் தலைவர்களையும் சேரச் செய்யும், பண்பின் - தன்மையையுடைய, மருந்தும் உண்டோ - பரிகாரமும் இருக்கின்றதோ? இது - இங்ஙனம் நீ கழறுதல், மயல் - மயக்கத்தால் வந்ததாகும்.

     (முடிபு) பார்ப்பன மகனே, பார்ப்பன மகனே, பார்ப்பன மகனே, நின் சொல்லுள்ளும் மருந்துமுண்டோ? இது மயல்.

     (கருத்து) நீ என்னை இடித்துரைத்தலால் வரும் பயன் யாதும் இல்லை.

     (வி-ரை.) இது பார்ப்பனப் பாங்கன் காமநிலை யுரைத்துத் தேர்நிலை யுரைத்த போது (தொல். கற்பு. 36) தலைவன் கூறியது. முருக்கென்றதுபுரச மரத்தை; இது பலாசென்றும் கூறப்படும். தாழ் கமண்டலம் - உறியிலே தாழ்ந்த கமண்டலம்; "உறித் தாழ்ந்த கரகமும்’ (கலி. 9:2.) எழுதாக் கற்பு - எழுதாக் கிளவியைக் கற்ற கல்வி; அதாவது வேத முணர்தல். மருந்து - பரிகாரம்; "மருந்தில் கூற்றம்" (புறநா. 3:12.) மருந்துமுண்டோ வென்ற உம்மை பயனற்ற இடித்துரையே யன்றிப் பரிகாரமும் உண்டோவென்னும் பொருட்பயன் உடையது. ‘நாம் இடித்துரைத்தால் இவன் கொண்ட காமம் நீங்கும்' என்று பாங்கன் எண்ணிய எண்ணத்தை மயலென்றான். உண்டோ: ஓகாரம் எதிர்மறைப் பொருளது; மயலோ: ஓ அசை நிலை.

    பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின் மருந்தும் உண்டோவென்றது என்னையும் தலைவியையும் சேர்த்து வைக்கும் முயற்சியே பயன்படுவதென்னும் குறிப்பையுடையது; எனவே நீ கழறுவதொழிந்து அது செய்க என்றானாயிற்று.

    (மேற்கோளாட்சி) 1. முறைமை சுட்டா மகனென்னும் பெயர் ஏகாரம் பெற்று விளியேற்றது (தொல். விளி. 18, தெய்வச். ); உயர்திணைப் பெயர் ஏகார விளி யுருபு பெற்று வந்தது (நன். 304, மயிலை.)

    4. முறைமை சுட்டா மகனென்பது விளிவேற்றுமைக்கண் ஏகாரம் பெற்றுவந்தது (தொல். விளி. 12, ந.; இ.வி.207.)

    3-4. அந்தணர்க்குக் கரகமும் முக்கோலும் உரியவை (தொல். மரபு. 70, பேர்.)

    ஒப்புமைப் பகுதி 2. நாரென்பது பட்டைக்கு வருதல்: குறுந். 112:4, 274:5.

    4. படிவவுண்டிப் பார்ப்பன மகன்: "படிவப் பார்ப்பான்" (முல்லைப். 37.)

    6. பிரிந்தோர்ப் புணர்த்தல்: குறுந். 146:2.

(156)