ஒளவையார். (பி-ம். அவ்வையார்.) (பி-ம்) 2. ‘குரல் செலீஇக்’; 6. ‘துணையிலாளர்’, ‘தெவனோ’.
(ப-ரை.) நெடுவரை மருங்கின் - உயர்ந்த மலையின் பக்கத்திலுள்ள, பாம்பு பட இடிக்கும் - பாம்புகள் இறந்து படும்படி இடிக்கின்ற, கடு விசை உருமின் - மிக்க வேகத்தையுடைய இடியேற்றினது, கழறு குரல் அளைஇ - இடிக்கும் முழக்கத்தோடு கலந்து, காலொடு வந்த - காற்றோடு வந்த, கம சூல் மா மழை - நிறைந்த நீராகிய சூலையுடைய பெரிய மழையே, நீ ஆர் அளி இலையோ - இயல்பாகவே நின்பால் நிறைந்த இரக்கத்தை நீ இப்பொழுது பெறவில்லையோ? பெரு இசை இமயமும் துளக்கும் பண்பினை - பெரிய புகழையுடைய இமயமலையையும் அசைக்கின்ற தன்மையினை உடையாய்; பெண்டிர் துணை இலர் - நின்னால் அலைக்கப்படும் மகளிர் துணைவரைப் பெற்றிலர்; அளியர் - ஆதலின் இரங்கத் தக்கார்; அங்ஙனம் இருப்ப, இஃது எவன் - இங்ஙனம் நீ பெய்து அலைத்தல் எதன் பொருட்டு?
(முடிபு) மாமழை, நீ அளியிலையோ? இமயமும் துளக்கும் பண்பினை; பெண்டிர் துணையிலர்; அளியர்; இஃது எவன்?
(கருத்து) இதுகாறும் தலைவர் வாராமையின் இப்பெருமழையினால் அவர் வரவு தடைப்படுமோ வென்று அஞ்சினேன்.
(வி-ரை.) தலைவன் பெருமழையினால் துன்புறுவானோ வென்றும் வாரானோ வென்றும் அஞ்சிய தலைமகள் தான் அங்ஙனம் அஞ்சியதை இதனால் தலைவனுக்கு உணர்த்தினாள். இங்ஙனம் அஞ்சுதற்குரிய ஒழுகலாற்றை விடுத்து வரைந்துகொண்டு எப்பொழுதும் உடனுறைவதே நன்றென்பது எச்சப்பொருளாதலின், இது வரைவு கடாவியதாகும்.
மழையின் அச்சத்தன்மையை மிகுவித்துக் கூறுவாளாய் அதனைச் சார்ந்த இடியின் கொடுமையையும் உடன் கூறினாள். நடுக்கின்றி நிலைபெறுவதாகிய இமயமும் (புறநா. 2) நின்னால் துளங்குமெனின் பற்றுக் கோடில்லாத யாங்கள் எவ்வளவினேமென்றாள். இமயமும்: உம்மை உயர்வு சிறப்பு.
இடிமுழக்கம், பெருங்காற்று முதலியவற்றோடு வந்த மழையினால் தலைவனுக்கு வரும் ஏதங்குறித்து அஞ்சுதலையன்றித் தம் மெல்லியல் பாலும் பெண்டிர் அஞ்சுவராதலின் ‘அளியர்’ என்றாள். பெண்டிரென்று பொதுவகையாற் கூறினும் கருதியது தன்னையே என்க.
துணையிலரளியரென்றமையின், துணையுளராயின் அஞ்சாரென்பதாம். இஃதென்றது அளியின்மையை.
(மேற்கோளாட்சி) 3. கம என்னும் உரிச்சொல் நிறைவுப் பொருளில் வந்தது (தொல். உரி. 58, இளம். 59, சே. தெய்வச்.)
5-6. ‘மலையைத் துளக்கும் ஆற்றலையுடையாய், காமப்பிணி கூர்ந்தோரை அலைப்பது நினக்குத் தகுவதன்று’ என இளிவந்து வாடைக்குக் கூறினமையின், இது தன்கட்டோன்றிய பிணிபற்றி இளிவரவு பிறந்தது (தொல். மெய்ப். 6, பேர்.; இ.வி.578.)
ஒப்புமைப் பகுதி 1-2. பாம்புபட இடிக்கும் உருமு: குறுந். 190;4-5, 268; 3-4, 391;3-4; “நாகத், தணங்குடை யருந்தலை யுடலி வலனேர், பார்கலி நல்லேறு திரிதரும்”, ஈர்ங்குர லுருமி னார்கலி நல்லேறு, பாம்பு கவினழிக்கும்”, “கேழ்கிளருத்தி யரவுத்தலை பனிப்பப், படுமழை யுருமினுரற்று குரல்”, “திருமணி யரவுத்தேர்ந் துழல, உருமுச்சிவந் தெறியுமோங்குவரை யாறே” (நற். 37:8-10, 114:9-10, 129:7-8, 255:10-11); “உருமுச்சிவந்தெறிந்த வுரனழி பாம்பின்”, “பாம்பின், பைபட விடிக்குங் கடுங்குர லேற்றொடு” (அகநா. 92:11, 323:10-11); “இடியே றுண்ட நாகம் போல” (பெருங். 2. 10:112.)
3. காலொடு வந்த மழை: “காலொடு பட்ட மாரி” (நற். 2:9); “காற்றுடைக் கனைபெயல்” (கலி. 45:4.)
கமஞ்சூன் மாமழை: முருகு. 7.
3-4. மழைக்கு அளித்தன்மையுண்மையைக் கூறுதல்: குறுந். 216: 5-6.
1-5. மழை பாம்பை வருத்தி மலையைத் துளக்குதல்: “யாங்குச்செய் வாங்கொ றோழி யோங்குகழைக், காம்புடை விடரகஞ் சிலம்பப் பாம்புடன், றோங்குவரை மிளிர வாட்டி வீங்குசெலற், கடுங்குரலேற்றொடு கனைதுளி தலைஇப், பெயலா னாதே வானம்”, “முழங்குகடன் முகந்த கமஞ்சூன் மாமழை, மாதிர நனந்தலை புதையப் பாஅய், ஓங்குவரை மிளிர வாட்டிப் பாம்பெறிபு” (நற். 51:1-5, 347:1-3.)
மழை மலையைத் துளக்குதல்: “பெருமலை மிளிர்ப்பன்ன காற்றுடைக் கனைபெயல்” (கலி. 45:4.)
(158)