(வரைபொருட்குப் பிரிந்த தலைவன் நீட்டித்தானாக, ஆற்றாமையை யடைந்த தலைவியை நோக்கித் தோழி, “அவர் நின்னை வரைந்து கொள்வர்; நீ ஆற்றியிருப்பாயாக” என, “அவர் வரவேண்டிய பருவத்து வந்தாரிலர்; இனி வரைந்து கொள்வது யாங்ஙனம்?” என்று கவன்று கூறியது.)
 160.   
நெப்பி னன்ன செந்தலை யன்றில்  
    
இறவி னன்ன கொடுவாய்ப் பெடையோடு  
    
தடவி னோங்குசினைக் கட்சியிற் பிரிந்தோர்  
    
கையற நரலு நள்ளென் யாமத்துப்  
5
பெருந்தண் வாடையும் வாரார்  
    
இஃதோ தோழிநங் காதலர் வரைவே.  

என்பது வரைவு நீட்டிப்ப ஆற்றாளாகிய தலைமகளை நோக்கித் தோழி, வரைவரென ஆற்றுவிப்புழித் தலைமகள் கூறியது.

மதுரை மருதன் இளநாகன்.

    (பி-ம்) 2.‘இரவின்’, ‘அரவின்’; 3. ‘னோங்குசினக்’; 6. ‘வரவே’.

    (ப-ரை.) தோழி-, நெருப்பின் அன்ன செ தலை அன்றில் - நெருப்பைப் போன்ற சிவந்த தலையையுடைய ஆண் அன்றில், இறவின் அன்ன கொடு வாய் பெடையொடு - இறாமீனை ஒத்த வளைந்த அலகையுடைய பெண் அன்றிலோடு, தடவின் ஓங்கு சினை கட்சியில் - தடா மரத்தினது உயர்ந்த கிளையின் கண்ணுள்ள கூட்டினிடத்தேயிருந்து, நரலும் - ஒலிக்கின்ற,. நள்ளென்யாமத்து - செறிந்த இடையிரவையுடைய, பெரு தண் வாடையும் - பெரிய தண்மையையுடைய வாடைக் காற்று வீசும் கூதிர்க் காலத்திலும், வாரார் - தலைவர் வந்தாரிலர்; நம் காதலர் வரைவு - நம் தலைவர் என்னை மணந்து கொள்வது, இஃதோ - இதுதானோ?

    (முடிபு) தோழி, வாடையும் வாரார்; காதலர் வரைவு இஃதோ?

    (கருத்து) தலைவர் இன்னும் வந்திலர்; வரைவரெனக் கருதுதல் எங்ஙனம்?

    (வி-ரை.) செந்தலையென்றது செஞ்சூட்டை: தலை: ஆகுபெயர்; “பூந்தலை யன்றில்” (ஐந். ஐம். 41) என்பதற்குப் பழைய உரையாசிரியர், ‘செம்பூப் போலுஞ் சூட்டினையுடைய பெடை யன்றில்’ என்றெழுதியது காண்க. தடவென்பது ஒரு மரம்; இதன் இலையைத் தைத்து உண்கலமாகக் கொள்ளும் வழக்குக் காளத்தி முதலிய இடங்களிற் காணப்படுகிறது; “தடவும் பிடவுந் தாழச் சாய்த்து” (பெருங்.1.51:43.) ஆண் அன்றில் பெடையோடு மகிழ்ந்து நரலுதல் கேட்டு, ‘இப்பறவை பெற்ற பேறு யாம் பெற்றிலமே!” எனத் தனித்தார் இரங்குவராதலின், ‘பிரிந்தோர் கையற நரலும்’ என்றாள்.

    வாடையும்: உம்மை உயர்வுசிறப்பு; தலைவர் வரைவு இன்றியமை யாததாகிய இக்காலத்தும் அவர் வந்திலர்; இனி வருவரென்று துணிதல் யாங்ஙனமென்றாள் தலைவி. ‘தலைவர் வருதலையே கண்டோமில்லை; இனி வந்து வரைவரென நீ கூறுவது எங்ஙனம் நிகழும்?’ என்று தோழியை நோக்கிக் கூறினாள். இஃதோ - இந்நிலையோ.

    ஒப்புமைப் பகுதி 1. செந்தலையன்றில்: “சேவ லோடுறை செந்தலையன்றிலின், நாவி னால்வலி யெஞ்ச நடுங்குவாள்” (கம்ப. சூர்ப்ப. 76.)

நெருப்பின் அன்ன செந்தலையன்றில்: “எரியகைந் தன்ன செந்தலை யன்றில்” (தொல். களவு. 21, ந. மேற்.)

    1-2. அன்றிலின் கொடுவாய்: “ஏங்குவயி ரிசைய கொடுவாயன்றில்” (குறிஞ்சிப். 219); “கொடுவாய்ப் புணரன்றில்” (கைந்நிலை. 57)

    4. நள்ளென்யாமம்: குறுந். 6:1, ஒப்பு; நெடுநல். 186; நற். 22:11, 145:10, 178:8, 199:3, 287:9, 333:12; ஐங். 324:3; அகநா. 103:12, 129:2, 142:20, 170:12, 279:6.

    1-4. அன்றில் யாமத்து நரலுதல்: (குறுந். 177: 1-4, 301:1-4); “பெடைபுண ரன்றி லியங்குகுர லளைஇக், கங்குலுங் கையறவு தந்தன்று”, “இன்னும், தமியேன் கேட்குவென் கொல்லோ, பரியரைப் பெண்ணை யன்றிற் குரலே”, “ஒலியவிந் தடங்கி யாம நள்ளென... மன்றப் பெண்ணை வாங்குமடற் குடம்பைத், துணைபுண ரன்றி லுயவுக் குரல் கேட்டொறும், துஞ்சாக் கண்ண டுயரடச் சாஅய், நம்வயின் வருந்து நன்னுத லென்ப”, “மையிரும் பனைமிசைப் பைதல வுயவும், அன்றிலுமென்புற நரலும்” (நற். 152: 7-8, 218:9-11, 303:1-7, 335:7-8); “கழுதுகண் படுக்கும் பானாட் கங்குல், எம்மினு முயவுதி செந்தலை யன்றில்” (தொல். களவு. 16, ந. மேற். “இருள்வீ”.)

    5. பெருந்தண்வாடை:குறுந். 35:5, ஒப்பு.

(160)