மாங்குடி மருதன். (பி-ம்) 1.‘கனைக் கோட்டு’; 2. ‘துணர்த்தேங்’;3.‘தொன்றுமுது’.
(ப-ரை.) தோழி-, மனையோள் மடமையின் புலக்கும் அனையேம் - தலைவி தன் அறியாமையாற் புலப்பதற்குக் காரணமாகிய அத் தன்மையேமாக, மகிழ்நற்கு - தலைவன் திறத்து, யாம் ஆயினம் எனின் - நாம் ஆயினோமாயின், கணை கோடு வாளை - திரண்ட கொம்பையுடைய வாளை மீனினது, கம சூல் மடம் நாகு - நிறைந்த கருப்பத்தையுடைய மடப்ப மிக்க பெண்ணானது, துணர் தேக் கொக்கின் - கொத்தையுடைய தேமாவினது, தீ பழம் - உதிர்ந்த இனிய பழத்தை, கதூஉம் - கவ்வுதற்கிடமாகிய, தொன்றுமுதிர் வேளிர் - மிகப் பழைய வேளிருக்குரிய, குன்றூர் குணாது - குன்றூருக்குக் கிழக்கின் கண்ணுள்ளதாகிய, தண் பெரு பவ்வம் - தண்ணிய பெரிய கடல், அணங்குக - எம்மை வருத்துவதாக.
(முடிபு) தோழி, மனையோள் புலக்கும் அனையேம் மகிழ்நற்கு யாம் ஆயினம் எனின், பவ்வம் அணங்குக.
(கருத்து) தலைவி அறியாமையால் எம்மைக் குறைகூறுகின்றாள்.
(வி-ரை.) கோடு - பக்கமுமாம். துணரென்றது மலர்க் கொத்துக்கே யன்றிக் காய்க்கொத்து பழக்கொத்து ஆகியவற்றிற்கும் வரும்; “பைம்பாகற் பழந்துணரிய, செஞ்சுளைய கனிமாந்தி” (பொருந. 191-2) என்பதன் உரையைப் பார்க்க. தேக்கொக்கு - தேமாவென்னும் சாதி. நீரளவுந் தாழ்ந்த பழக்கொத்திலுள்ள கனியை வாளை கவ்வு மென்பதும் பொருந்தும். தொன்றுமுதிர் வேளிர் - மிகப் பழங்காலமுதல் இந்நாட்டில் இருந்து பழமையுற்ற வேளிர்.
பவ்வம் அணங்குகவென்றது யாம் செய்த குற்றத்திற்குரிய தண்டமாகக் கடல் எம்மை வருத்துக வென்றபடி; கடல் தன்பாலுள்ள தெய்வத்தால் எம்மை வருத்துகவெனலும் ஒன்று.
மனையினிடத்தே இருப்பவளுக்குப் புறத்தே நிகழும் செய்தி அறிதற் கியலாதென்னும் நினைவினளாதலின் மனையோளென்றாள். மடமை -அறியாமை. புலத்தல்: ‘இவள் என் கொழுநனை வலிதின் நயப்பித்துக் கொண்டு புறம்போகாவாறு செய்தனள்’ என்று பழி கூறி வெறுத்தல்.
ஆயினமெனினென்றது ஆகாமையை உணர்த்தி நின்றது.
‘வாளைநாகு தான் இருந்தவிடத்தே யிருந்து முயற்சி சிறிதுமின்றி எளிதில் கொக்கின் பழத்தைப் பெற்றதுபோல, யாம் முயலாமே தலைவன் வலிய வந்து எம்மை நயப்ப யாம் அவனோடு உறைந்தேம்; ஆதலின் யாம் குறை கூறற்குரியேமல்லேம்’ என்று காதற்பரத்தை கூறினாள்.
(மேற்கோளாட்சி) 1. நாகென்பது இளமைக்கு வரும் (தொல்.மரபு. 26, பேர்.)
ஒப்புமைப் பகுதி. கணைக்கோட்டு வாளை: நற். 340:4; அகநா. 126:8; புறநா. 249:2. 2. தேக்கொக்கு: குறுந். 26:6, ஒப்பு. 1-2. வாளை மாம் பழத்தை உண்ணுதல்: குறுந். 8:1-2, ஒப்பு. தொன்றுமுதிர் வேளிர் குன்றூர்: நற். 280:8.
(164)