(தோழியினிடம் இரந்து நின்றும் உடம்பாடு பெறாத தலைவன் தலைவிபாற் சென்ற தன் நெஞ்சை நோக்கி, “ஒருமுறை விரும்பி அறிவிழந்தாய்; மீண்டும் விழைகின்றாய்!” என்று கூறியது.)
 165.    
மகிழ்ந்ததன் றலையு நறவுண் டாங்கு 
     
விழைந்ததன் றலையு நீவெய் துற்றனை 
     
அருங்கரை நின்ற வுப்பொய் சகடம் 
     
பெரும்பெய றலையவீந் தாங்கிவள் 
5
இரும்பல் கூந்த லியலணி கண்டே. 

என்பது பின்னின்ற தலைமகன், மறுக்கப்பட்டுப் பெயர்த்துங் கூடலுறு (பி-ம். பெயர்ந்ததுங் கூடலு) நெஞ்சிற்குச் சொல்லியது.

    (பின்னிற்றல் - வழிபடுதல்.)

பரணர்.

    (பி-ம்) 2.‘விழைத்ததன்’; 4.‘பெரும்புயற்றலை’, ‘பெரும்பெயற் றலையவிந் தாங்’, ‘றலையவீஇந் தாங்’.

    (ப-ரை.) நெஞ்சே, அரு கரை நின்ற - ஏறுதற்கரிய கரையில் நின்ற, உப்பு ஒய் சகடம் - உப்பைச் செலுத்துகின்ற வண்டி, பெருபெயல் தலைய - பெரிய மழை பொழிந்ததனால், வீந்தாங்கு - அழிந்ததுபோல, இவள் இரு பல் கூந்தல் - இவளது கரிய பலவாகிய கூந்தலின், இயல் அணி கண்டு - இயற்கை அழகைக் கண்டு, மறுக்கப்பட்டோமென்று அன்பு ஒழியாயாய்க் காமத்தால் நாண் அழிந்து, மகிழ்ந்ததன் தலையும் - கள்ளுண்டு அறிவிழந்து களித்ததன் மேலும், நற உண்டாங்கு - கள்ளை உண்டாற்போல், நீ-, விழைந்ததன் தலையும் - ஒருமுறை விரும்பியதன் பின்னும், வெய்து உற்றனை - விருப்பத்தை அடைந்தாய்.

    (முடிபு) சகடம் வீந்தாங்கு இவள் கூந்தல் அணிகண்டு நறவுண்டாங்கு நீ வெய்துற்றனை.

    (கருத்து) நீ தலைவியோடு அளவளாவ விரும்பல் மயக்கத்தின் பாற்பட்டது.

    (வி-ரை.) தலைவியைப் பாங்கிவாயிலாக அடைய விரும்பிய தலைவன் அவள்பாற் பணிந்து குறையிரந்தும் அவள் உடம்படாத காலத்து, விருப்பம் மிக்க தன்நெஞ்சை நோக்கிக் கூறியது இது.

    மகிழ்தல் - கள்ளுண்டார் அறிவிழந்து நின்று களித்தல் (குறள், 1281, பரிமேல்.) ஒருமுறை கள்ளுண்டு மீட்டும் உண்ணும் வேட்கையைக் காமமுடையார் நிலைக்கு உவமை கூறும் வழக்கு,

  
“களித்தொறுங் கள்ளுண்டல் வேட்டற்றாற் காமம் 
  
 வெளிப்படுந் தோறு மினிது”                      (குறள், 1145) 

என்பதிலும் காணப்படும்.

    வெய்துறுதல் - விருப்புறுதல் (குறுந். 363:6); வெம்மை விருப்பமாதல் போல அதன் வேறு வாய்பாடாகிய வெய்தும் விருப்பமாயிற்று; வெய்துறல் - வெப்பத்தையடைதலெனலுமாம் (பெருங். 1. 35:51.)

    உப்பொய் சகடமென்பதை, சகடம் ஒய்த உப்பென்று மாறிக் கூட்டுக; “குடுமிய வாகபிறர் குன்றுகெழு நாடே” (புறநா. 58:32) என்றவிடத்து, நாடுகெழுகுன்றெனக் கூட்டிப் பொருள் செய்தல்போல. ஒய்தல் - செலுத்துதல் (பதிற். 87:4, உரை; புறநா. 70:17, உரை.)

    ‘பெரும்பெயற் றலையவிந்தாங்கு’ என்ற பாடத்துக்குப் பெரிய மழையினிடத்து அழிந்தது போலவெனப் பொருள் கொள்க. இவளென்று தலைவியைச் சுட்டினான், நெஞ்சிற்கணியளாக விருத்தல் பற்றி (புறநா. 72:2, உரை.) ஐந்து பிரிவாக உள்ளதாதலின் பல்கூந்தலென்றான். வெய்தாம் அக்காமவிடாய் தீர்த்தற்குக் கூந்தலின் நிழல் உதவுதலின் கூந்தலணிகண்டு நெஞ்சு விரும்பியது.

    உப்பொய் சகடமானது பெருமழையால் அழிந்தது போல நீ நாணும் உரனும் அழிந்தாயெனவும், ஒருமுறை கள்ளுண்டான் நாணும் அறிவும் அற்று மயங்கினும் அதை உணராது மீண்டும் உண்டுமகிழ்ந்தது போல ஒருமுறை தலைவியை விரும்பி இத்தோழிபாற் பணிந்து குறையிரந்து நாணழிந்து நின்றும் அமையாமல் மீண்டும் விரும்பினை யெனவும் உவமைகளை விரித்துக் கொள்க.

    ஒப்புமைப் பகுதி 1. மகிழ்ந்ததன் றலையும் நறவுண்ணுதல்: “களித்தார்க்குக், கள்ளற்றே”(குறள், 1288.) 1-2. காமம் உற்றாருக்குக் கள்ளுண்போர் உவமை: “உட்கொண் டரற்று முறுபிணி தலைஇக், கட்கொண் டாங்குக் களிநோய் கனற்ற”, “நறவிளை தேற லுறுபிணி போலப், பிறதிற் றீராப் பெற்றி நோக்கி”(பெருங். 1.35:50-51, 2.16:63-4.)

    3. உப்பொய் சகடம்: “ நோன்பகட் டுமண ரொழுகை” (சிறுபாண்.55); “பெருங்கயிற் றொழுகை மருங்கிற் காப்பச், சில்பத வுணவின் கொள்ளை சாற்றி” (பெரும்பாண். 63-4); “உப்பின் கொள்ளை சாற்றி, நெடுநெறி யொழுகை நிலவுமண னீந்தி” (நற். 183:2-3); “உப்பொயுமண ரருந்துறை போக்கும், ஒழுகை” (அகநா. 30:5-6); “உமணர், உப்பொயொழுகை” (புறநா. 116:7-8.)

    4. பெரும் பெயல் : குறுந். 13:2, 133:3, 168:3; முல்லை. 6.

    பெயல் தலைய: “தலைப்பெய றலைஇய” (முருகு. 9.)

    3-4. உப்பு மழையால் அழிதல்: “கடல்விளை யமுதம் பெயற் கேற்றாஅங், குருகி யுகுதல்” (நற். 88: 4-5); “உப்பியல் பாவை யுறையுற் றதுபோல, உக்கு விடுமென் னுயிர்” (கலி. 138: 16-7); “நெடுவெள்ளுப்பி னிரம்பாக் குப்பை பெரும்பெயற் குருகி யாஅங்கு”, “மிகுபெயல், உப்புச்சிறை நில்லா வெள்ளம் போல, நாணுவரை நில்லாக் காம நண்ணி” (அகநா. 206: 14-5, 208:18-21); “உப்பின் பெருங்குப்பை நீர்படியினில் லாகும்” (திரி. 83); “கடும்புன னெருங்க வுடைந்துநிலை யாற்றா, உப்புச் சிறைபோ லுண்ணெகிழ்ந் துருகி” (பெருங். 3, 20:120-21); “ஒளிநலவுப்புக் குன்ற மூர்புனற் குடைந்த தேபோல்” (சீவக. 813.)

    5. இரும்பல் கூந்தல்: குறுந். 19:5, ஒப்பு; ஐங். 231:2, 281:3; அகநா. 142:18; புறநா. 120:17.

(165)