(தாய் முதலியோருடைய பாதுகாப்பின்கண் தலைவி இருத்தலால் தலைவன் அவளைக்கண்டு அளவளாவுதல் அரிதாயிற்றாக, அதனால் உண்டான துன்பத்தைக் குறிப்பிப்பாளாகி, மரந்தையூர் சிறந்ததாயினும் தனிமையினால் வருத்தந் தருவதாகின்றதென்று தோழி கூறியது.)
 166.   
தண்கடற் படுதிரை பெயர்த்தலின் வெண்பறை  
    
நாரை நிரைபெயர்ந் தயிரை யாரும்  
    
ஊரோ நன்றுமன் மரந்தை  
    
ஒருதனி வைகிற் புலம்பா கின்றே.  

என்பது காப்பு மிகுதிக்கண் தோழி தலைமகட்கு உரைத்தது.

கூடலூர் கிழார்.

    (பி-ம்) 1.‘நிறைபோத்’, ‘நிரைபெயர்த்’, ‘நிரைபோத்’; 3.‘மாந்தை’, ‘மாநகை’.

    (ப-ரை.) தண் கடல் படு திரை பெயர்த்தலின் - குளிர்ந்த கடற்கண்ணே உண்டாகும் அலைகள் மீன்களைப் பெயரச் செய்வதனால், வெள் பறை நாரை நிரை - வெள்ளிய சிறகுகளையுடைய நாரையின் வரிசை, பெயர்ந்து அயிரை ஆரும் - நீங்கி அயிரை மீனை உண்ணுதற் கிடமாகிய, ஊர் மரந்தை - ஊராகியமரந்தை, நன்றுமன் - தலைவனோடு இருக்குங்கால் மிக நன்மையையுடையது; ஒரு தனி வைகின் - தலைவனைப் பிரிந்து தனியே தங்குவேமாயின், புலம்பு ஆகின்று - வருத்தத்தைத் தருவதற்குக் காரணமாகின்றது.

    (முடிபு) மரந்தை நன்றுமன்; தனிவைகிற் புலம்பாகின்று.

    (கருத்து) தலைவனைப் பிரிந்திருத்தல் துன்பத்துக்குக் காரணமாகின்றது.

    (வி-ரை.) திரை மீனைப் பெயர்த்தாலும் நாரை அம்மீன் உள்ள இடத்தே சென்று அதனை ஆர்ந்தது போல, தாயர்முதலியோர் இற்செறித்துக் காப்பிடை வைப்பினும் தலைவன் தலைவியிருக்குமிடத்து வந்து கண்டு இன்புறல் வேண்டுமென்பது குறிப்பு.

    மரந்தை இயற்கை யழகால் நன்மையையுடையது; ஆயினும் தலைவன் இல்லாத் தனிமையால் புலம்புடையதாயிற்றென்று கூறலும் பொருந்தும். மரந்தை கடற்றுறைப்பட்டினமாதலின் கடலில் நிகழும் நிகழ்ச்சியை அதற்கு அடையாக்கினாள். ஒருதனி - மிக்கதனிமை. தமக்கினிய சுற்றத்தார் சூழவிருப்பினும் தலைவனில் வழித் தனிமைத் துன்பம் தோற்றும்; இது புலம்பித் தோன்றலென்னும் மெய்ப்பாடு (தொல். மெய்ப். 18, பேர்.) புலம்பு - தனிமையால் வரும் வருத்தம்.

    ஓ. ஏ: அசை நிலைகள். நன்று - முன்பு நன்றாக இருந்தது; மன் - அதுகழிந்ததே யெனலும் பொருந்தும்.

    ஒப்புமைப் பகுதி 1. பறை: குறுந். 125:5, 172:1.

    2. நாரை அயிரைமீனை உண்ணுதல்: (குறுந். 128: 1-3, ஒப்பு.); “தடந்தா ணாரை யிரிய வயிரைக், கொழுமீ னார்கைய” (பதிற். 29: 4-5) 3.மரந்தை: குறுந். 34:6, ஒப்பு.4.ஒரு தனி: மணி. 3:31, 4:9, 96, 8:27, 15:76, 16:33, 18:56, 20:94. ஆகின்று: குறுந். 15:4, ஒப்பு: 105:6. 3-4.தலைவரோடு கூடின் ஊர் நன்று, இன்றெனின் நன்றன்று: “இனிதே காணுநர்க் காண்புழி வாழ்தல், கண்ணுறு விழுமங் கைபோ லுதவி, நம்முறு துயரங் களையாராயினும், இன்னா தன்றே யவரில் லூரே” (நற். 216:2-5); “தமரையில்லார்க்கு, நகரமுங் காடுபோன் றாங்கு” (பழ.3.)

(166)