(தலைவனும் தலைவியும் இல்லறம் நடத்தும் மனைக்குச் சென்று வந்த செவிலி நற்றாயினிடத்தில், “தலைவி தலைவன் உவக்கும்படி அட்டு உண்பிக்கின்றாள்” என்று கூறியது.)
 167.   
முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல் 
    
கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக் 
    
குவளை யுண்கண் குய்ப்புகை கமழத் 
    
தான் றுழந் தட்ட தீம்புளிப் பாகர் 
5
இனிதெனக் கணவ னுண்டலின் 
    
நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே. 

என்பது கடிநகர்ச் சென்ற (பி-ம். கடிநகர் சென்ற ) செவிலித்தாய் நற்றாய்க் குரைத்தது.

    (கடிநகர் - தலைவனும் தலைவியும் மணம்புரிந்து கொண்டு இல்லறம் நடத்தும் மனை. சென்ற - சென்று மீண்ட.)

கூடலூர் கிழார்.

    (பி-ம்) 2.‘கழாஅதுரீஇ’: 3.‘குய்புகை’, ‘கழுமத்’.

    (ப-ரை.) தோழி-, முளி தயிர் பிசைந்த - முற்றிய தயிரைப் பிசைந்த, காந்தள் மெல் விரல் - காந்தள் மலரைப் போன்ற மெல்லியவிரலை, கழுவுறு கலிங்கம் - துடைத்துக் கொண்ட ஆடையை, கழாஅது உடீஇ - துவையாமல் உடுத்துக் கொண்டு, குவளை உண்கண் - குவளை மலரைப் போன்ற மையுண்ட கண்களில், குய் புகை கமழ - தாளிப்பினது புகை மணப்ப, தான் துழந்து அட்ட - தானே துழாவிச் சமைத்த, தீ புளி பாகர் - இனிய புளிப்பையுடைய குழம்பை, கணவன்- தன் தலைவன், இனிது என உண்டலின் - இனிதென்று உண்பதனால், ஒள்நுதல் முகன் - தலைவியின் முகமானது, நுண்ணிதின் மகிழ்ந்தன்று - நுண்ணிதாக மகிழ்ந்தது.

    (முடிபு) தான் அட்ட பாகரைக் கணவன் இனிதென உண்டலின் ஒண்ணுதல் முகன் மகிழ்ந்தன்று.

    (கருத்து) தலைவி தன் தலைவனுக்கு வேண்டியவற்றை அவன் மகிழும்படி செய்துவருகின்றாள்.

    (வி-ரை.) முளிதயிர் - நன்றாக முற்றிய தயிர்; முளிதல் - காய்தல்; நன்றாகக் காய்ந்த பாலால் உண்டாகிய தயிரென்று கொள்க; இதனை, “பாறைபடுதயிர்” (சீவக. 426) என்பர்.

    இறுகிய தயிராதலின் தலைவி புளிக்குழம்பு செய்யும் பொருட்டுத் தன் மெல்விரலால் துழாவித் தாளிதம் செய்தாள். விரைவில் அமைக்க வேண்டுமென்னும் விருப்பினளாதலின் தயிர் பிசைந்த கையைத் துடைத்த ஆடையைத் துவைத்தலை மறந்தாள்; கையை ஆடையிற்றுடைத்தது செல்வ மிகுதியால் வந்த இயல்பு. “ஏனது சுவைப்பினு நீகை தொட்டது, வானோரமுதம் புரையுமா லெமக்கென” (தொல். கற்பு.5) விரும்புபவ னாதலின் இனிதென உண்டான்.

    தலைவி கொண்ட அகமகிழ்ச்சியை முகம் காட்டியது. இயல்பாகவே பொலிவுபெற்ற நுதல் மகிழ்ச்சியாற் பின்னும் பொலிவுடையதாயிற்று. அம்மகிழ்ச்சியை மிகுதியாக வெளிப்படுத்தாமையின் நுண்ணிதின் மகிழ்ந் தன்றென்றான். அங்ஙனம் வெளிப்படுத்தின் அது தருக்கின்பாற்படும்.

    இதனால் தலைவி தற்கொண்டானைப் பேணுந் தகை சிறந்தா ளென்பதைச் செவிலி உணர்த்தினாளாயிற்று.

    (மேற்கோளாட்சி) 5-6. கற்பினுள், நகுநயமறைத்தலென்னும் மெய்ப்பாடு வந்தது (தொல். மெய்ப். 19, பேர்.)

    மு. அடிசிற்றொழிலின்கண் மகிழ்ச்சியாகிய தலைவியின் மாண்பை அகம்புகல் மரபின் வாயில்கள் தம்முள் தாம் கூறியது(தொல். கற்பு. 11, இளம், ந.); ‘இது பார்ப்பானையும் பார்ப்பனியையுந் தலைவராகக் கூறியது. கடிமனைச் சென்ற செவிலி கூற்று. வாயில் நேர்வித்தலுமாம்’ (தொல். அகத். 24, ந.); உலகியல் வழக்கே வந்தது (தொல். அகத். 53, ந.; இ.வி. 378); செவிலி நற்றாய்க்குத் தலைமகள் நன்மனைவாழ்க்கைத் தன்மை உணர்த்தியது (நம்பி. 203.)

    (கு-பு.) இப்பாட்டிற் கூறப்படும் உணவு வகையினால் நச்சினார்ககினியர் ‘பார்ப்பானையும் பார்ப்பனியையும் தலைவராகக் கூறியது’எனக் கொண்டனர் போலும்; பெரும்பாணாற்றுப் படையில் அந்தணர் மனையிற் பாணர்பெறும் உணவைப்பற்றிக் கூறியிருக்கும் பகுதி (304-10) இங்கே ஆராய்தற்குரியது.

    ஒப்புமைப் பகுதி. முளிதயிர் : அகநா. 394:2; கம்ப. கிட்கிந்தை. 21. காந்தள் மெல்விரல்: பொருந. 33.

    1-2. தயிர் முதலியவற்றை ஆடையில் துடைத்துக்கொள்ளல்: “நெய்யுங் குய்யு மாடி மையொடு, மாசுபட்டன்றே கலிங்கமுந் தோளும்” (நற். 380:1-2.)

    3-4. ‘கிளரிழை யரிவை நெய்துழந் தட்ட, விளரூ னம்புகை யெறிந்த நெற்றிச், சிறுநுண் பல்வியர் பொறித்த, குறுநடை” (நற். 41: 7-10.)

(167)