சிறைக்குடி யாந்தையார். (பி-ம்) 2.‘பசுங்கொடைப்’; 3.‘பெரும்புலவர்’; 5.‘சாயிறையணைத் தோள்’;6.‘மணத்தொறும்’.
(ப-ரை.) நெஞ்சே, தலைவி, நல் மா மேனி - நல்ல மாமையையுடைய மேனி, மாரி பித்திகத்து - மாரிக்காலத்தில் மலரும் பிச்சியினது, நீர் வார் கொழு முகை - நீர் ஒழுகும்கொழுவிய அரும்புகளில், இரு பனை பசுகுடை - பெரிய பசிய பனங் குடையில், பல உடன் பொதிந்து - பலவற்றை ஒருங்கே வைத்து மூடி, பெரு பெயல் விடியல் - பெருமழை பெய்தலையுடைய விடியற் காலத்தே, விரித்துவிட்டன்ன -விரித்துவிட்டாற் போன்ற, நறு தண்ணியள் - நறுமையையும் தண்மையையும் உடையவள்; புனல் புணை அன்ன -நீரில் விடும் தெப்பத்தைப் போன்ற, சாய் இறை பணை தோள் - வளைந்த சந்தினையுடைய பருத்த அவள் தோள்களை, மணத்தலும் - பொருந்துதலும், தணத்தலும் - பிரிதலும், இலம் -; பிரியின் - பிரிவேமாயின், வாழ்தல் - உயிர் வாழ்தல், அதனினும் - அதனைக் காட்டிலும், இலம் - இல்லேம்.
(முடிபு) மேனி நறுந்தண்ணியள்; தோள் மணத்தலும் தணத்தலும் இலம்; பிரியின் வாழ்தல் அதனினும் இலம்.
(கருத்து) தலைவியைப் பிரிதல் அரிது.
(வி-ரை.) மாரிக்காலத்தில் அரும்பியதாதலின் நீர்வார் கொழுமுகை யாயிற்று. பித்திகம் மாரிக்காலத்தில் அரும்பி மலர்வதென்பது: குறுந். 94, வி-ரை. குடை உட்குழிவாகப் பனையோலையால் அமைக்கப்பட்டதொரு கருவி.
மேனியியல்பையும் தோளியல்பையும் கூறினான், அவற்றாற் கவரப்பட்டுப் பிரியமாட்டாமையின். புணை - பேய்க்கரும்பாற் செய்த தெப்பம் (கலி. 56:20, ந.) சாயிறை -வளைந்த சந்து (அகநா. 32: 18, உரை) மெல்லிய சந்தெனலுமாம்.
எப்பொழுதும் தோளோடு ஒன்றுபட்டு இருத்தலின், புதிதாக மணத்தலும் பின்பு தணத்தலும் இலமென்றான்; அதனினுமென்ற சுட்டு, தணத்தலும் இலமென்பதிலுள்ள இன்மையைச் சுட்டியது.
ஒப்புமைப் பகுதி . 1. ஒப்புமைப் பகுதி மாரிப்பித்திகம் : குறுந். 94:1, ஒப்பு. மு. குறுந். 222:5. 1-2. மலர்களைப் பனங்குடையிற் பெய்தல்: “அவல் வகுத்த பசுங்குடையாற், புதன்முல்லைப் பூப்பறிக் குந்து” (புறநா. 352: 3-4.) பெரும்பெயல் : குறுந். 165:4,ஒப்பு. நறுந்தண்ணியள்: குறுந். 70:2,ஒப்பு. நன்மாமேனி: குறுந். 185:8, 1-4. தலைவியின் மேனி மணத்திற்கு மலர்: குறுந். 62: 1-4, ஒப்பு. 5. புனற்புணையன்ன தோள்: “எந் தோள்புரை புணையே” (ஐங். 78:4); “முழங்குநீர்ப் புணையென வமைந்தநின் றடமென்றோள்” (கலி. 56:20.) இறைப்பணைத்தோள்: குறுந். 279:8. 7. பிரியின் வாழாமை : குறுந். 32:6, ஒப்பு. வாழ்தல் அதனினு மிலம்: “யானுயிர் வாழ்த லதனினு மரிதே” (அகநா. 98:30.) அதனினும் இலம்: புறநா. 192:13.
(168)