(தலைவன் தன்பால் பரத்தைமை இல்லையென்று தலைவியினிடம் கூறித் தெளிவிக்குங் காலத்து, தலைவி, “எம் உயிர் நீங்குவதாக!” என்று கூறியது.)
  169.    
சுரஞ்செல் யானைக் கல்லுறு கோட்டிற் 
     
றெற்றென விறீஇயரோ வைய மற்றியாம் 
     
நும்மொடு நக்க வால்வெள் ளெயிறே 
     
பாணர், பசுமீன் சொரிந்த மண்டை போல  
5
எமக்கும் பெரும்புல வாகி  
     
நும்மும் பெறேஎ மிறீஇயரெம் முயிரே. 

என்பது (1) கற்புக்காலத்துத் தெளிவிடை விலங்கியது.

     (களவுக் காலத்தும் வரைவு நீட்டித்துத் தலைவன் சூளுற்ற வழி அதற்கு நொந்து தெளிவிடை விலங்கல் (தொல். களவு. 20, ந.) உண்மையின், இங்கே அதனின் வேறுபடுத்தக் கற்புக் காலத் தென்பதமைக்கப்பட்டது. தெளிவு - தலைவன் தான் யாதொரு குற்றமும் செய்யாமையை ஏதுவானும் சூளினானும் தலைவி தெளியச் சொல்லுதல். விலங்கியது - தலைவி மாறு பட்டது. இதனை அகப்பொருட் பெருந்திணைக் குரிய துறை யாக்குவர் அகப்பொருள் விளக்கமுடையார் (நம்பி. 243.)

     (2) இனி, தோழி வரைவு நீட்டித்தவழி வரைவுகடாயதூ உமாம்.

வெள்ளி வீதியார்.

    (பி-ம்) 1.‘சுரஞ் செல்லியானைக்’: 2.‘மற்றியான்’; 5.‘எமக்குப்’.

     (ப-ரை.) ஐய-, யாம் நும்மொடு நக்க வால்வெள் எயிறு -யாம் நும்மோடு மகிழ்ந்து சிரித்த தூய வெள்ளிய பற்கள், சுரம் செல்யானை -பாலை நிலத்திற் செல்லும் யானையினது, கல் உறு கோட்டின் - மலையைக் குத்திய கொம்பைப் போல, தெற்றென -விரைவாக, இறீஇயர் - முறிவனவாக; எம் உயிர் - எமது உயிர், பாணர் பசுமீன் சொரிந்த மண்டைபோல -பாணர் தாம் பிடித்த பச்சை மீனைப் பெய்த மண்டையைப் போல, எமக்கும் பெரு புலவாகி - எமக்கும் பெரிய வெறுப்பைத் தருவதாகி, நும்மும் பெறேஎம் - உம்மையும் யாம் பெறேமாய், இறீஇயர் - அழிக.

     (முடிபு) ஐய, யாம் நக்க எயிறு இறீஇயர்; எம் உயிர் எமக்கும் புலவாகி நும்மும் பெறேஎம் இறீஇயர்.

     (கருத்து) இனி, நும்மோடு அளவளாவுதலினும் இறத்தல் நன்று.

     (வி-ரை.) தலைவன், “யாம் முன்னொருகால் அன்போடு மகிழ்ந்து பயின்று நகையாடினேமன்றே!” என்று பழமையை நினைவுறுத்தினானாகஅது கேட்ட தலைவி, “அங்ஙனம் நும்மோடு நகை செய்த எம் பற்கள் இறுவனவாக” என்று சினந்து கூறினாள்.

    வால்வெள் ளெயிறு -மிக வெண்மையான எயிறெனலுமாம்; ஒரு பொருட் பன்மொழி. பாணர் மீன் பிடித்துத் தமக்குரிய மண்டையிலே இட்டு வைத்தல் மரபு. மண்டை -வாயகன்ற மண்பாத்திரம்; வாணாயென வழங்கும். ‘அம்மண்டை மீன் நாற்றத்தைப் பெற்று வேறொன்றற்குப் பயன்படாதது போல எம் உயிர் எமக்கே வெறுப்புத் தருவதாயிற்று; நுமக்கும் இனிப் பயன்படேம்; இது கழிக’ என்றாள். பெறேஎமென்ற முற்றுவினை இங்கே வினையெச்சப் பொருளில் வந்தது.

    தலைவனது பரத்தைமையால் மிக்க சினம் கொண்டவளாதலின் தலைவி இங்ஙனம் கூறினாள்.

    இரண்டாவது கருத்து: ‘நீ இன்னும் வரைந்து கொள்ளாமல் இருக்கின்றாய்; தலைவி நின்னால் நலனுணப்பட்டாள்; நின்னையும் பெறாள் போலும்; இனி உயிர்கழிக’ என்று தோழி கூறியதாகக் கொள்க. இங்ஙனம் வன்மை தோன்றக் கூறின் தலைவன் விரைவில் மணந்து கொள்வானென்பது தோழியின் கருத்து.

    (மேற்கோளாட்சி) 3. தன் மடத்தால் நகை தோன்றியது, “நீயிர் கூறியஅதனையே மெய்யெனக் கொண்டு மகிழ்ந்து நக்கன மென்றமையின்’ (தொல். மெய்ப். 5, பேர். ); நகுநயமறைத்த லென்பது தலைவிமாட்டு நிகழும் மெய்ப்பாடு; இதன்கண் ‘நகை கூறிற்றாலெனின், அங்ஙனம் மறைக்கப்பட்ட நகை தலைமகன் அறிந்தது மெய்ப்பாடாமாகலான் அவ்வாறு கூறினானென்பது’ (தொல். மெய்ப். 13, பேர்.)

    மு. இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்த காலத்துத் தலைவனது தீங்கு உணராது அவனை நன்றாக உணர்ந்த அறிவினது மடப்பங்கூறித் தம் காதற் சிறப்புரைத்தவிடத்துத் தோழி கூறியது; ‘இஃது அவனோடு நகுதற்குத் தோன்றிய உணர்வு இன்றியமையாமை கூறித் தம் காதற்சிறப்புரைத்தது’ (தொல். களவு. 23, ந.)

    ஒப்புமைப் பகுதி 1. சுரஞ் செல் யானை : அகநா. 65: 16-7; திணை மொழி. ஐம். 1.

    3. தலைவனொடு நகுதல்: குறுந். 320:4-5

    4. பாணரும் மீனும் : பெரும்பாண். 283-7; ஐங். 47:1-3, 48:1-3, 49:1-2, 111:1-3; அகநா. 216:1-2. மண்டையில் மீன் சொரிதல் : “மண்டை, இருங்கெடிற்று மிசையொடு பூங்கள் வைகுந்து” (புறநா. 384:8-9.) பாணர் மண்டை: புறநா. 103:9, 115:2, 125:1-3, 179:2, 235:10, 261:2, 398:21.

(169)