பேரெயின் முறுவலார். (பி-ம்.) 4. ‘காழ்கொளினே’.
(ப-ரை.) காமம் காழ்க்கொளின் - காம நோயானது முதிர்வுற்றால், மடலும் - பனை மடலையும், மா என -குதிரை எனக் கொண்டு, ஊர்ப - ஆடவர் அதனை ஊர்வர்; குவி முகிழ் எருக்கங் கண்ணியும் - குவிந்த அரும்பை உடைய எருக்கம் பூ மாலையையும், பூ என - அடையாள மாலையைப் போல, சூடுப - தலையில் அணிந்து கொள்வர்; மறுகின் ஆர்க்கவும் படுப - வீதியில் பிறர் தம்மைக் கண்டு ஆரவாரிக்கவும் படுவர்; பிறிதும் ஆகுப - தம் கருத்து முற்றாதாயின் சாதலுக்குரிய வரைபாய்தல் முதலிய வேறு செயலை உடையரும் ஆவர்.
(முடிபு) காமம் காழ்கொளின் மடலும் ஊர்ப; கண்ணியுஞ் சூடுப; ஆர்க்கவும் படுப; பிறிதும் ஆகுப.
(கருத்து) நான் மடலூர எண்ணியுள்ளேன.்
(வி-ரை.)தனது உட்கோளை உலகின் மேல் வைத்து, காமம் முற்றப் பெற்றார் இவை செய்வர் என்றமையால் ‘யானும் அது செய்வேன்’என்பது குறிப்பால் புலப்படும்.
காமம் மிக்க தலைவன் பனைமடலால் குதிரையைப் போல ஓர் உருவம் அமைத்து அதன் கழுத்தில் மணி, மாலை முதலியவற்றைப் பூட்டித் தன் உருவத்தையும் தலைவியின் உருவத்தையும் ஒரு படத்தில் எழுதிக் கையில் ஏந்தி அதன்மேல் யாவரும் அறிய ஊர்ந்து வருதலை மடல் ஏறுதல் என்பர்; அங்ஙனம் அவன் வருவதைக் கண்ட ஊரினர் படமுதலியவற்றால், ‘இன்னவளுக்கும் இவனுக்கும் நட்பு உண்டு’என்பதை அறிந்து அதனை வெளிப்படக் கூறிப் பழிப்பர்; அது கேட்டுத் தமர் மணம் புரிவிப்பர் (கலி .141) மடல் ஏறும் தலைவன் நீறு, எருக்க மாலை, ஆவிரம்பூமாலை முதலியவற்றை அணிந்து வருதல் வழக்கம் என்று தெரிகின்றது. மடலேற்றைக் குறித்த வேறு பல செய்திகளைத் திவ்யப் பிரபந்தத்தில் உள்ள பெரிய திருமடல், சிறிய திருமடல் என்பவற்றின் வியாக்கியானங்களால் உணரலாம்.
மா- குதிரை. மடல் - பனைமடல், மடலும்; உம்மை, இழிவு சிறப்பு. ‘குவிமுகிழ்’என்றது முதலுக்கேற்ற அடை. கண்ணி தலையில் புனைவதாதலின் சூடுப என்றான். கண்ணியும்: உம்மை, இழிவு சிறப்பு. மறுகின்கண் யாவரும் அறிய வருதலின், ‘மறுகின் ஆர்க்கவும் படுப’ என்றான். ஆர்ப்பவர்: மடல் ஏறிய கோலத்தைக் கண்ட ஊரினர், ‘இவன் மடலேறும்படி செய்தவள் இத்தலைவி’என்றும் பிறவாறும் பலர் கூறுதலை ஆர்த்தல் என்றான்; இதனை,
| ‘பொன்னே ராவிரைப் புதுமலர் மிடைந்த |
| பன்னூன் மாலைப் பனைபடு கலிமாப் |
| பூண்மணி கறங்க வேறி நாணட் |
| டழிபட ருண்ணோய் வழிவழி சிறப்ப |
| இன்னள் செய்த திதுவென முன்னின் |
| றவள்பழி நுவலு மிவ்வூர்’ (குறுந். 173) |
என்பதில் காண்க. ஆர்க்கவும்: உம்மை, இறந்தது தழீஇயது. பிறிதும் என்றது காமம் முற்றியவர் செய்வனவற்றுள் மடல் ஏறுவதற்கு இனமாகிய வேறு செயல்களை உடைய நிலையை. அவை வரைபாய்தல் முதலியன;
| ‘‘ஆராக் காம மடூஉநின் றலைப்ப |
| இறுவரை வீழ்நர்’’ (அகநா. 322:3-4). |
| ‘விரையூர் குழலியர் தந்தசிந் தாகுல வெள்ளநிறைக |
| கரையூர் பொழுதிளங் காளையர் தாங்கிழி கைப்பிடித்துத |
| தரையூர் தொறும்பெண்ணை மாமட லூர்வர் தவிர்ந்துபின்னும் |
| வரையூர்வர் தஞ்சையர் கோன்வாணன் மாறையில் வாணுதலே’ |
| (தஞ்சை.102) |
என்பவற்றால் இதனை அறியலாகும்.
காமம் காழ்க்கொளினென்பதற்குக் காமமாகிய கனி பரலை உடையதானால் என்று கொண்டு, பரல் என்பதற்குப் பரல் போன்ற தடையென்று உருவக ஆற்றால் பொருள் செய்து காமம் நிறைவேறாமல் தடைப்படுமாயின் என்று உரைகோடலும் ஒன்று; ‘காமத்துக் காழில் கனி’(குறள்,1191) என்ற இடத்துப் பரிமேலழகர் எழுதிய, ‘காமநுகர்ச்சி என்னும், பரலில்லாத கனியை’ என்ற பதவுரையையும், ‘தடையின்றி நுகரப்படுதலின் காழில் கனியென்று கூறினாள்’என்ற விசேட உரையையும் காண்க.
மேற்கோளாட்சி1. மடல் என்பது புறக்காழுடையனவாகிய தாவரங்களுக்கு வரும் (தொல்.மரபு. 86, பேர்.)
4. ‘பிறிதுமாகுப காமங்காழ்க் கொளினேயென்புழி யானும் அது செய்வேனெனப் பொருள் கொள்ளுதல் குறிப்பு’(இ.கொ.89)
மு. பாங்கிக்குத் தலைவன் மடலேறுதலை உலகின்மேல் வைத்து உரைத்தது (இறை. 9; நம்பி.145; இ.வி. 509); தலைவன் மடலேறுதல் (தொல். களவு. 11, இளம், ந,); ‘கலக்கம் என்பது சொல்லைத் தகாதன சொல்லுதல். இன்னும் இதனானே, தலைமகற்காயின் அதனினூங்கு வருவதோர் கலக்கமும் உளதாம் என்றது; அவை மடலூர்தலே, வரைபாய்தலே யென்றற்றொடக்கத்தன..... இதனுள் சாதல் எல்லையாகக் கூறியவாறு கண்டு கொள்க’(தொல். மெய்ப்.22, பேர்.) ; ‘மடலேறுவ னென்றது’(தமிழ்நெறி. 17); மடற்றிறங்கூறல் (களவியற்.34); குறிப் பெச்சம் வந்தது (நன்.359, மயிலை.)
ஒப்புமைப் பகுதி 1. மடல் மா; ‘‘மடன்மா கூறு மிடனுமா ருண்டே’’(தொல். களவு.11); ‘‘மாவென மதித்து மடலூர்ந் தாங்கு’’(நற். 342:1); ‘‘படரும் பனையீன்ற மாவுஞ் சுடரிழை, நல்கியா ணல்கி யவை’’, ‘‘மாமேலே னென்று மடல்புணையா நீந்துவேன்’’, ‘‘மாவென் றுணர்மின் மடலன்று’’, ‘‘மடன்மாமேல், மன்றம் படர்வித் தவள்’’(கலி.138:12-3, 139:15, 140:3, 141:9-10.)
2. குவிமுகிழ் எருக்கு: ‘‘குவியிண ரெருக்கின் றதர்பூங் கண்ணி’’(அகநா. 301:11); ‘‘குவியிணர்ப், புல்லிலை யெருக்கம்’(புறநா. 106:1- 2); ‘குவிமுகி ழெருக்கிற் கோத்த மாலையன்’(மணி. 3:105); ‘‘குனிகா யெருக்கின் குவிமுகிழ் விண்டலொடு’’(குணநாற்பது.)
1-2. மடலேறுவார் எருக்கங்கண்ணியை அணிதல்: ‘‘மடலே காமந் தந்த தலரே, மிடைபூ வெருக்கி னலர்தந் தன்றே’’(நற். 152: 1-2); ‘‘எருக்கின், பிணையலங் கண்ணி மிலைந்து மணியார்ப்ப, ஓங்கிரும் பெண்ணை மடலூர்ந்து’’(கலித். 139: 8-10); ‘ஈசன சாந்து மெருக்கு மணிந்தோர் கிழிபிடித்துப், பாய்சின மாவென வேறுவர் சீறூர்ப் பனைமடலே’’(திருச்சிற். 74); ‘‘எருக்கங் கண்ணியுஞ் சூடி விருப்புடை, இடப் பான் மடந்தை நொடிப் போழ்து தணப்பினும், மடலூர் குறிப்புத் தோன்ற’ (திருவாரூர் நான்மணி. 24:12-4). 1-3 மடலேறுவார் எருக்கங்கண்ணி சூடி மறுகில் வருதல்; ‘எருக்கொடு பிணித்தியாத்து, மல்லலூர் மறுகின்க ணிவட்பாடு மிஃகொத்தன்’ (கலி.138: 9-10); ‘மங்கையர்தங் கண்ணான் மயங்கினார் வெள்ளெலும்பும், துங்க வெருக்குந் தொடுத்தணிந் - தங்கமெலாம், வெந்தேறு சாம்பன் மிகவணிந்து வீதிதொறும், வந்தேறி யூர்வர் மடல்’(கிளவித் தெளிவு.)
மடலேறி மறுகில் வருதல்: (குறுந். 14:4-6, 173:2-6, 182:1-5); ‘‘பல்லார்நக் கெள்ளப் படுமடன் மாவேறி, மல்லலூ ராங்கட் படுமே’’, “வருந்தமா வூர்ந்து மறுகின்கட் பாட” (கலித். 61:22-3, 141:22); “மடன்மாமேல், நின்றேன் மறுகிடையே நேர்ந்து” (திணைமா.16.)
4. பிறிது: குறுந் 298:8. காமம் காழ்க்கொளல்;“நிறையு முண்டோ காமங் காழ்க்கொளின்” (மணி. 5:20); “காமத் தியற்கை காழ்ப்பட லுணர்ந்து” (பெருங். 1.36:7); “காமம் காழ்கொளீஇ” (சீவக.1941). 1-4. காம நோய் மிகுவதனால்: மடலூர்தல்: “மற்றிந்நோய், பொறுக்கலாம் வரைத்தன்றிப் பெரிதாயிற் பொலங்குழாய், மறுத்திவ்வூர் மன்றத்து மடலேறி, நிறுக்குவென் போல்வல்யா னீபடு பழியே“, “ஓங்கிரும் பெண்ணை மடலூர்ந்தென் னெவ்வநோய், தாங்குத றேற்றார் விடும்பைக் குயிர்ப்பாக, வீங்கிழை மாதர் திறத்தொன்று நீங்காது, பாடுவேன் பாய்மா நிறுத்து” (கலி. 58:20-23, 139:10-13); “காம முழந்து வருந்தினார்க் கேம, மடலல்ல தில்லை வலி” , “காமுற்றா ரேறு மடல்” (குறள், 1131, 1133.)
பின்வருவன இச் செய்யுளை அடியொற்றி வந்தவை:
| “மாவென் றுரைத்து மடலேறுப மன்று தோறும் |
| பூவென் றெருக்கி னிணர்சூடுப புன்மை கொண்டே |
| பேயென் றெழுந்து பிறரார்ப்பவு நிற்ப காம |
| நோய்நன் கெழுந்து நனிகாழ்க்கொள்வ தாயி னக்கால்”் (வளையாபதி.) |
| “படலே றியமதின் மூன்றுடைப் பஞ்சவன் பாழிவென்ற |
| அடலே றயின்மன்னன் றெம்முனை போன்மெலிந் தாடவர்கள |
| கடலே றியகழி காமம் பெருகிற் கரும்பனையின் |
| மடலே றுவர்மற்றுஞ் செய்யா தனவில்லை மாநிலத்தே”் |
| (பாண்டிக்கோவை.) |
| “பொருநெடுந் தானைப்புல் லார்தம்மைப் பூலந்தைப் போர்தொலைத்த |
| செருநெடுஞ் செஞ்சுடர் வேனெடு மாறன்றென் னாடனையாய் |
| அருநெடுங் காமம் பெருகுவ தாய்விடி னாடவர்கள |
| கருநெடும் பெண்ணைச்செங் கேழ்மட லூரக் கருதுவரே” |
| (பாண்டிக்கோவை.) |
(17)