(தலைவன் பொருள்வயிற் பிரியக் கருதியிருப்பதையுணர்ந்து கூறிய தோழியை நோக்கி, “பாலை நிலத்து வழிகள் கடத்தற்கரியன வென்று எண்ணாமல் நம்மை அவர் பிரிந்து செல்வரேல், உலகத்தில் பொருள்தான் பெற்றகுரியது போலும்! அருள் யார் பாலுமின்றி ஒழிவது போலும்!”என்று தலைவி கூறியது.)
 174.   
பெயன்மழை துறந்த புலம்புறு கடத்துக் 
    
கவைமுட் கள்ளிக் காய்விடு கடுநொடி 
    
துதைமென் றூவித் துணைப்புற விரிக்கும் 
    
அத்த மரிய வென்னார் நத்துறந்து 
5
பொருள்வயிற் பிரிவா ராயினிவ் வுலகத்துப் 
    
பொருளே மன்ற பொருளே 
    
அருளே மன்ற வாருமில் லதுவே. 

என்பது பிரிவுணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது.

வெண்பூதி.

    (பி-ம்) 1.‘புலம்பறு’; 2.‘கவைமுடக்’. ‘கடிநொடி’;4. ‘வெண்ணார்’.

    (ப-ரை.) தோழி -, பெயல் மழை - பெய்தலையுடையமழை, துறந்த - பெய்யாது நீங்கிய, புலம்பு உறு கடத்து - தனிமைமிக்க பாலை நிலத்தில், கவை முள் கள்ளி - கவைத்தமுள்ளையுடைய கள்ளியினது, காய் விடு கடுநொடி - காய்வெடிக்கும் பொழுது விடும் கடிய ஒலியானது, துதை மெல்தூவி துணைபுறவு இரிக்கும் - நெருங்கிய மெல்லிய சிறகுகளையுடைய ஆணும் பெண்ணுமாகிய இரட்டைப் புறாக்களைநீங்கச் செய்யும், அத்தம் - அருவழிகள், அரிய என்னார் -கடத்தற்கரியன வென்று கருதாராகி, நம் துறந்து - நம்மைப்பிரிந்து, பொருள்வயின் பிரிவார் ஆயின் - பொருளைத்தேடும் பொருட்டு நம் தலைவர் பிரிவாராயின், இ உலகத்து -இந்த உலகத்தில், மன்ற - நிச்சயமாக, பொருளே பொருள் -செல்வமே உறுதிப் பொருளாவது; மன்ற--, அருளே - அருள்தான், ஆரும் இல்லது - தன்னை ஏற்றுக் கொள்வார்யாரும் இல்லாதது.

    (முடிபு) அத்தம் அரிய என்னார் நத்துறந்து பொருள் வயிற்பிரிவாராயின், பொருளே பொருள்; அருளே ஆரும் இல்லது.

    (கருத்து) அருளுடையாராயின் என்னைப் பிரிந்து செல்லல் தகாது.

    (வி-ரை.) மழை, பெய்தலைத் துறந்த வெனலும் பொருந்தும்;துறந்த: காரணப் பொருளில் வந்த பெயரெச்சம். புலம்பு - நீர் பெறாத வருத்தமுமாம் (அகநா. 4:5. உரை.) நத்துறந்து: இத்தகைய புணர்ச்சிமுடிபுகளை இரண்டாம் வேற்றுமைத் திரிபைத் தொகுத்து உணர்த்தும் சூத்திரத்தில் (தொல். தொகை. 15)் ‘அன்ன பிறவும்’ என்பதனுள் நச்சினார்க் கினியர் அமைப்பர்: ‘எக்கண்டு பெயருங் காலை யாழநின், கற்கெழு சிறு குடியெனவும், நப்புணர்வில்லா நயனில்லோர் நட்பெனவும் வருவழி எக்கண்டு, நப்புணர்வு என்னும் தொடக்கங் குறுகும் உயர்திணைப் பெயர்கள் மெல்லெழுத்துப் பெறுதற்கு உரியன, வல்லெழுத்துப் பெறுதல் கொள்க.’

    ‘அத்தம் கடத்தற்கரியனவாயிருப்பவும் அது கருதாமலும், நம்மைத் துறத்தல் அருளுக்கு மாறுபாடான செயலாக இருப்பவும் அது கருதாமலும் செல்லுதற்குக் காரணமான பொருள், பெறற்குரிய உறுதியுடையதுபோலும்!” என்றாள். ‘அருளுடையராயின் என்னை நீத்துச் செல்லார்; பொருளைப் பொருளாகக் கருதார்’ என்பது தலைவியின் நினைவு.பொருளே மன்ற பொருளே: ஏகாரங்களுள் முன்னது பிரிநிலை யேகாரம்; பின்னது தேற்றம்.

    ஒப்புமைப் பகுதி 1. புலம்புறு கடம்: “புள்ளும் வழங்காப் புலம்புகொளாரிடை”்(கலி. 4:6); “புலம்புவீற் றிருந்த நிலம்பகு வெஞ்சுரம்”் (அகநா. 335:8.)

    2. கவை முள்: புறநா. 98:8. கவைமுட் கள்ளி: புறநா. 322:2.

    கள்ளிக்காய் விடு கடுநொடி: “நொடிவிடு வன்ன காய்விடு கள்ளி”்(நற். 314:9) “கொள்ளுங் கடுங்கதி ரிற்கள்ளி தீச்சிலவேயுலறி. விள்ளும் வெடிபடும் பாலை”் (திருவேகம்ப. திருவந். 68. )

    நொடி: “அமைக்கண் விடுநொடி” (அகநா. 47:7.)

    2-3. கள்ளியும் புறவும்: குறுந். 154:4-6, ஒப்பு; நற். 314:9-11.

    4. நத் துறந்து: குறுந். 228:4; நற். 329:8, 343:8; அகநா. 85:3, 183:3, 185:3, 223:1, 298:20, 317:21.

    6-7. பொருளும் அருளும்: குறுந். 20:1-2, ஒப்பு, 395:1-3; அகநா. 53:14-6, 75:1-2, 305:9.

(174)