(பகலில் வந்து தலைவியோடு அளவளாவிய தலைவனை நோக்கி,“எம் ஊருக்கு வந்து இரவில் தங்கிச் செல்வாயாக” என்று தோழி கூறியது.)
 179.   
கல்லென் கானத்துக் கடமா வாட்டி  
    
எல்லு மெல்லின்று ஞமலியு மிளைத்தன  
    
செல்ல லைஇய வுதுவெம் மூரே  
    
ஓங்குவரை யடுக்கத்துத் தீந்தேன் கிழித்த  
5
குவையுடைப் பசுங்கழை தின்ற கயவாய்ப்  
    
பேதை யானை சுவைத்த  
    
கூழை மூங்கிற் குவட்டிடை யதுவே.  

என்பது பகல் வருவானை இரவுக்குறி நேர்ந்தாள் போன்று வரைவுகடாயது.

குட்டுவன் கண்ணன்.

    (பி-ம்) 3. ‘சொல்லைஇய’; 5. ‘பசுங்கிளை’.

    (ப-ரை.) ஐய--, கல் என் கானத்து- கல்லென்னும்ஆரவாரத்தையுடைய காட்டின் கண், கடமா ஆட்டி -கடமாவை நீ அலைப்ப, எல்லும் எல்லின்று - பகற் பொழுதும்மங்கியது; ஞமலியும் இளைத்தன - நாய்களும் நின்னுடன்வேட்டையாடி இளைப்பை அடைந்தன; செல்லல் - போகற்க;ஓங்கு வரை அடுக்கத்து - உயர்ந்த மலைப்பக்கத்தில்,தீதேன் கிழித்த - இனிய தேனிறாலைக்கிழித்த, குவையுடைபசு கழை தின்ற கயம் வாய் - கூட்டமாகிய பசிய மூங்கில்களின்குருத்தைத் தின்ற ஆழ்ந்த வாயையுடைய, பேதை யானை - பேதைமையையுடைய யானை, சுவைத்த கூழை மூங்கில் - தின்றதனாற் கூழையாகிய மூங்கிலையுடைய, குவட்டிடையது - உச்சியின் இடையே உள்ளதாகிய, உது எம்ஊர் - அஃது எமது ஊராகும்.

    (முடிபு) ஐய, எல்லும் எல்லின்று; ஞமலியும் இளைத்தன; செல்லல்;குவட்டிடையதுவாகிய; உது எம் ஊர்.

    (கருத்து) இரவில் எம்முடைய ஊருக்கு வந்து தங்கிச் செல்வாயாக.

    (வி-ரை.) கல்லென்றல்: சிள்வீடு, விலங்கு முதலியவற்றால்உண்டாகும் ஆரவாரம். கடமா - ஒரு வகை விலங்கு. “கடமா தொலைச்சிய கானுறை வேங்கை” (நாலடி. 300.) எல்லின்று: 161, வி-ரை. ஞமலி,தலைவனோடு வந்தவை; தலைவன் நாயொடு வருதலை,

  
“முனைபாழ் படுக்குந் துன்னருந் துப்பிற் 
  
 பகைபுறங் கண்ட பல்வே லிளைஞரின் 
   
 உரவுச்சினஞ் செருக்கித் துன்னுதொறும் வெகுளும் 
  
 முளைவா ளெயிற்ற வள்ளுகிர் ஞமலி 
  
 திளையாக் கண்ண வளைகுபு நெரிதர”            (குறிஞ்சிப். 128-32) 

என்பதனால் உணரலாகும்.

    செல்லலென்றும், உதுவெம் மூரென்றும் கூறியதனால், நீ போகாமல்எம்முடன் வந்து இரவில் தங்கிச் செல்வாயாக வென்றாளாயிற்று. இதனால்இடையறாது உடனுறைய வேண்டுமென்னும் தம் விருப்பத்தை உணர்த்தி,அங்ஙனம் இருத்தற்கு ஏற்ற நிலை வரைந்துகொண்டு இல்லறம் நடத்தலேயென்பதை உய்த்துணர வைத்தாள்; வைத்தமையின், இது வரைவுகடாவியதாயிற்று.

    ஒப்புமைப் பகுதி 1. கல்லென் கானம்: “கல்லென் கடத்திடை”(மலைபடு. 415.)

     கானத்துக் கடமா ஆட்டல்: “வெட்சிக் கானத்து வேட்டுவ ராட்டக்,கட்சி காணாக் கடமா நல்லேறு” (புறநா. 202:1-2.)

    2. எல்லும் எல்லின்று: குறுந். 390:1; அகநா. 110:11.

     தலைவனுடன் நாய் வருதல்: அகநா. 118:5, 182:5, 388:14-5.

    3. உது வெம்மூர் :“அஃதெம்மூர்” (அகநா. 38:17.)

    4. ஓங்குவரை யடுக்கம்: (குறுந். 69:4); “நெடுமலையடுக்கம்” (அகநா. 92:1.)

    4-5. அடுக்கத்துக் கழை: “கழைவள ரடுக்கம்” (அகநா. 82:9.)

     தேனடையைக் கழை கிழித்தல்: “காம்பு கால்பொரக் கண்ணகன்மால்வரைப், பாம்பு நான்றெனப் பாய்பசுந் தேறலே” (கம்ப. நாட்டுப். 35.)

    5-6. யானை மூங்கிலை உண்ணுதல்: நற். 116:4-5; அகநா. 85:7-8; 148:13, 218:2-3, 328:13, 332:1-2; புறநா. 73:9; 80:7.

(179)