(தன் குறையைத் தோழி மறுத்தாளாக, “தலைவியும் இரங்கிக்குறைநயந்திலள்; தோழியும் உடம்படவில்லை; ஆதலின் இனி மடலேறுவேன்” என்பதுபடத் தலைவன் தன் நெஞ்சை நோக்கிக் கூறியது.)
  182.   
விழுத்தலைப் பெண்ணை விளையன் மாமடல் 
    
மணியணி பெருந்தார் மரபிற் பூட்டி 
    
வெள்ளென் பணிந்துபிற ரெள்ளத் தோன்றி 
    
ஒருநாண் மருங்கிற் பெருநா ணீக்கித் 
5
தெருவி னியலவுந் தருவது கொல்லோ 
    
கலிழ்ந்தவி ரசைநடைப் பேதை 
    
மெலிந்தில ணாம்விடற் கமைந்த தூதே. 

என்பது தோழியாற் குறைமறுக்கப்பட்ட தலைமகன் தன் நெஞ்சிற்குஉரைத்தது.

மடல் பாடிய மாதங்கீரன்.

    (பி-ம்.) 2. ‘மார்பிற்’; 5. ‘னியல்பு தருவது’; 6. ‘கலிங்கவிர், ‘கலிந்தவிர்,‘கலிழ்கவின்’; 7. ‘மெலிந்திலளாம்’.

    (ப-ரை.) நெஞ்சே, கலிழ்ந்து அவிர் அசை நடை பேதை-அழகு ஒழுகி விளங்கும் அசைந்த நடையையுடைய தலைவி,மெலிந்திலள் - நம்மாட்டு நெஞ்சம் நெகிழ்ந்திலள், நாம்விடற்கு அமைந்த தூது - நாம் அத் தலைவியினிடத்துவிடுதற்கு அமைந்த தூது, விழுதலை பெண்ணை - சிறந்தஉச்சியையுடைய பனையின் கண், விளையல் மாமடல் -முதிர்தலையுடைய பெரிய மடலாற் செய்த குதிரைக்கு, மணிஅணி பெரு தார் - மணிகள் அணிந்த பெரிய மாலையை,மரபின் பூட்டி - முறைமையோடு அணிந்து, வெள் என்புஅணிந்து - நாம் வெள்ளிய என்பை அணிந்துகொண்டு,பிறர் எள்ள தோன்றி - பிறர் இகழும்படி அம்மடல் மாவின்மேல் தோன்றி, ஒரு நாள் மருங்கில் - ஒரு நாளில், பெருநாண்நீக்கி - பெரிய நாணத்தை விட்டு விட்டு, தெருவின் இயலவும்தருவது கொல் - தெருவின் கண் செல்லவும் தருவதோ?

    (முடிபு) பேதை மெலிந்திலள்; தூது, மா மடலில் தார் பூட்டிஎன்பணிந்து எள்ளத் தோன்றி நாண் நீக்கித் தெருவின் இயலவுந் தருவதுகொல்?

    (கருத்து) நான் இனி மடலேறுவேன்.

    (வி-ரை.) கருக்குடையதாக வேண்டுதலின் விளையல் மாமடலென்றான். மாமடலென்பதை மடன்மா வென்று மாற்றிப் பொருள்கொள்ளுதலும் ஒன்று. மணியை மடல்மாவுக்குப் பூட்டுவர். பேதையென்றான், தன் நெஞ்சத்திலுள்ள காமத்தை அறியாமையின். தூதென்றதுதோழியை; ‘பெட்ட வாயில்’ என்று அவளைக் குறிக்கும் வழக்காறுகாண்க. அமைந்த தூது என்றான், தலைவியினிடத்துச் சென்று தன் குறைகூறத்தக்க உரிமையுடையாளிவளே யென்பதை முன்னர்த் தலைவியின்நோக்கக் குறிப்பால் உணர்ந்தவனாதலின்.

    நெஞ்சை நோக்கிக் கூறினானேனும் கருதியது தோழி அறிய வேண்டு மென்பதே.

    இயலவும்: உம்மை இழிவு சிறப்பு.

    கொல்: ஐயம்; ஓ, ஏ: அசைநிலைகள்.

    மடலேறுதலைப் பற்றிப் பாடிய சிறப்பால் இச்செய்யுளை இயற்றியஆசிரியர் ‘மடல் பாடிய’ என்ற சிறப்பைப் பெற்றார்.

    (மேற்கோளாட்சி) மு.தோழி சேட்படுத்த விடத்துத் தலைவன் மடன்மாஏறுவலெனத் தன் நெஞ்சொடு கிளந்தது (தொல்.களவு. 11, ந.)

    ஒப்புமைப் பகுதி 1-2. மடன்மாவிற்கு மணி யணிதல்: குறுந்.172:3, ஒப்பு.

    3. மடலேறுவார் என்பை அணிதல்: “மங்கையர்தங் கண்ணான்மயங்கினார் வெள்ளெலும்பும், துங்க வெருக்குந் தொடுத்தணிந் - தங்கமெலாம், வெந்தாறு சாம்பன் மிகவணிந்து வீதிதொறும், வந்தேறி யூர்வர்மடல்” (கிளவித் தெளிவு); “என்பணி வேன்மடன் மேல்வருவேன்”,“தொடையே யெருக்கென்பு நீயணிந் தாலென்னை” (தஞ்சை.103-4);“கொம்மைப் பணைமுலை கூட்டும் பரிசு கொடியிடையார், தம்மைப்பெறாதவர் தாலப் புரவியு மாலையென்பும் .. இம்மைக்கு நாடி”(அம்பிகாபதி கோவை. 119.)

    மடலேறுவாரைப் பிறர் எள்ளுதல்: “வறிதாகப் பிறரென்னைநகுபவும்”, “காணுந ரெள்ளக் கலங்கித் தலைவந்து” (கலி. 138:4, 139:20.)

    4. மடலேறுவார் நாணை நீக்குதல்: குறுந். 173:3, ஒப்பு.

    1-5. மடலேறித் தெருவில் வருதல்: குறுந். 17:1-3, ஒப்பு.

    6.(பி-ம்.) கலிழ்கவின்: மதுரைக். 413; ஐங். 106:4, 174:4;அகநா. 41:15, 96:12; பெருங். 2.5:170.

    அசைநடைப் பேதை: “அசையியற் கொடிச்சி” (குறுந். 214:3);“அசைநடைக் கொடிச்சியை” (ஐங்.258:2); “அசையியற்கு” (குறள். 1098)

(182)