ஒளவையார். (பி-ம். அவ்வையார்.) (பி-ம்.) 7. ‘கானக’, ‘புன்புல வைப்பிற் கானத் தானே’
(ப-ரை.) தோழி-, புல் என் காயா பூ கெழு பெருசினை -மழை பெய்வதற்கு முன் பொலிவழிந்திருந்த காயாவினதுமலர்கள் பொருந்திய பெரிய கிளை, மெல் மயில் எருத்தின்தோன்றும் - மழை பெய்தபின் மெல்லிய மயிலினதுகழுத்தைப் போலத் தோற்றும், கானம் வைப்பின் புல்புலத்தான் - காட்டிடத்தையுடைய புல்லிய நிலத்தின்கண்,சென்ற நாட்ட - எம்மைப் பிரிந்து சென்று தங்கிய நாட்டிடத்துஉள்ளனவாகிய, கொன்றை அம் பசுவீ - கொன்றையின்அழகிய செவ்வி மலர்கள், நம் போல் பசக்கும் காலை - நம்மைப் போலப் பசலை நிறத்தையடையும் கார்ப் பருவத்தில்,சிறுதலை பிணையின் தீர்ந்த - சிறிய தலையையுடையபெண் மானிடத்தினின்றும் நீங்கிய, நெறி கோடு இரலைமானையும் - நெறிந்த கொம்பையுடைய ஆண்மானையும்,நமர் - நம் தலைவர், காண்பர் கொல் - காண்பரோ; காணார்.
(முடிபு) புன்புலத்தான் கொன்றையம் பசுவீ பசக்குங் காலைப்பிணையிற்றீர்ந்த இரலை மானையும் நமர் காண்பர்கொல்?
(கருத்து) கார்காலம் வந்ததை அறிந்து தலைவர் விரைவில் வந்துவிடுவர்.
(வி-ரை.) பசத்தல் - பொன்னிற மடைதல்; என்றது கார்காலத்திற்கொன்றை வளம்பெற்று மலர்வதைக் குறித்தபடி. தாம் என்னைப்பிரிந்திருப்பது போலப் பிணையைப் பிரிந்திருக்கும் இரலை யென்றாள்.காண்பர் கொலென்றது காணாரென்ற நினைவிற்று. “கார்காலத்தில்ஆண்மானும் பெண்மானும் ஒருங்கு கூடி உகளுதலே இயல்பு; ஆதலின்அவர் அவ்விரண்டும் ஒன்றியிருப்பதையே காண்பாரன்றித் தனித்திருக்கும்இரலையைக் காணார்; அவ்வொன்றிய காட்சியைக் கண்டு தாமும் அங்ஙனம் ஒன்றுபட வேண்டு மென்னும் விருப்புடையராவர். ஆண்டுள்ள கொன்றை மரத்திலுள்ள மலர்கள் தம்மைப் பிரிந்தமையால் வன்பால் உண்டாயிருக்கும் பசலையை நினைவுறுத்தும். இவற்றால் அவர் விரைவில் மீள்வர். இது கருதி நான் ஆற்றியுள்ளேன்” என்று கூறினாள். ஆற்றாளெனக் கவன்ற தோழிக்கு ஆற்றுவலென்பது படக் கூறியது இது.
| “வன்பரற் றெள்ளறல் பருகிய விரலைதன் |
| இன்புறு துணையொடு மறுவந் துகளத் |
| தான்வந் தன்றே தளிதரு தண்கார்” (குறுந். 65:1-3) |
என்பது முதலியவற்றாற் கார்காலத்தில் ஆண்மான் தனித்திராதுபெண்மானோடு சேர்ந்திருக்குமென்பது தெளியப்படும்.
புல்லென் காயா வென்பதிலுள்ள அடை முன்னிருந்த நிலையைக்குறித்தது. கானவைப்பு - முல்லை நிலம். புன்புலம் - புன்செய்.
ஒப்புமைப் பகுதி 1-2. பசலை கொன்றைப் பூவிற்கு: “கொன்றை, ஊழுறுமலரிற் பாழ்பட முற்றிய, பசலை மேனி” (அகநா. 398:3-5); “மெல்லியாள்,தன்னுருவம் பூங்கொன்றைத் தார்கொள்ளத் தான்கொன்றைப், பொன்னுருவங் கொண்டு புலம்புற்றாள்” (ஆதியுலா, 131-2); “குழலுஞ் சுணங்குங்கொன்றை காட்ட” (திருவாரூர் மும். 1.)
கொன்றை கார்காலத்தில் மலர்தல்: குறுந். 21:3-4, ஒப்பு; ஐங். 462,497.
3.சிறுதலைப் பிணை: “சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை”(புறநா. 2:21.)
5. காயாமரம் கார்காலத்தில் மலர்தல்: “மணியெனப், பன்மலர்க காயாங் குறுஞ்சினை கஞலக், கார்தொடங் கின்றே” (நற். 242:3-5); “வானம் வாய்ப்பக் கவினிக் கானம், கமஞ்சூன் மாமழை கார்பயந் திறுத்தென, மணிமருள் பூவை யணிமல ரிடையிடைச், செம்புற மூதாய் பரத்தலின்”,“மணிமிடை பவளம் போல வணிமிகக் , காயாஞ் செம்மறாஅய்ப் பலவுடன், ஈயன் மூதா யீர்ம்புறம் வரிப்பப், புலனணி கொண்ட காரெதிர் காலை”, “காயா, அணிமிகு செம்ம லொளிப்பன மறையக், கார்கவின்கொண்ட காமர் காலை” (அகநா.134:1-4, 304:13-6, 374:13-5.)
1-5. கொன்றையும் காயாவும்: பொருந. 201; முல்லைப். 93-4;நற். 242:3-4, 371:1; ஐங். 412:1, 420:1-2; பெருங். 1.49:115-6.
5-6. . காயாஞ்சினை மயிலின் கழுத்திற்கு: “கருநனைக் காயாக் கணமயி லவிழ” (சிறுபாண். 165); ‘மயிலெருத் துறழணி - மயிலினதுகழுத்தை மாறுபடுகின்ற அணியப்பட்ட காயாம்பூவாற் செய்த கண்ணிகள்’ (கலி. 103:59,ந.); “விரவுப்பொறி மஞ்ஞை வெரீஇ யரவின், அணங்குடை யருந்தலை பைவிரிப் பவைபோற், காயா மென்சினை தோயநீடிப்,பஃறுடுப் பெடுத்த வலங்குகுலைக் காந்தள்” (அகநா. 108:12-5); “கருவுற்றகாயாக் கணமயிலென் றஞ்சி” (திணைமாலை. 107); “கலவமாமயிலெருத்திற் கடிமல ரவிழ்ந்தன காயா” (சீவக.1558.)
7. புன்புலம்: குறுந். 202:2.
(183)