(தன்னை இடித்துரைத்த பாங்கனை நோக்கி, “சிற்றூரிடத்திற் செல்பவர் யாரும் தலைவியின் கண்வலையிற் படுவர்; என் நெஞ்சம் அதிற்பட்டது”என்று கூறியது.)
  184.   
அறிகரி பொய்த்த லான்றோர்க் கில்லை  
    
குறுக லோம்புமின் சிறுகுடிச் செலவே 
    
இதற்கிது மாண்ட தென்னா ததற்பட் 
    
டாண்டொழிந் தன்றே மாண்டகை நெஞ்சம் 
5
மயிற்க ணன்ன மாண்முடிப் பாவை  
    
நுண்வலைப் பரதவர் மடமகள் 
    
கண்வலைப் படூஉங் கான லானே. 

என்பது கழறிய பாங்கற்குக் கிழவன் உரைத்தது.

ஆரிய வரசன் யாழ்ப் பிரமதத்தன்.

    (பி-ம்.) 3. ‘அதர்ப்பட்டு’; 4. ‘ஒழித்தன்றென்’. ‘தன்றே நாண்டகை’. ‘தன்றென் மாண்டகை’; 5. ‘மாமுடிப்’; 7. ‘காணலானே’.

    (ப-ரை.) மயில் கண் அன்ன - மயிலினது பீலிக்கண்ணைப் போன்ற, மாண்முடி பாவை - மாட்சிமைப்பட்ட முடியையுடைய பாவை போல்வாளாகிய, நுண்வலைபரதவர் மடமகள் - நுண்ணிய வலையையுடைய நெய்தனிலமாக்களுடைய மடமையையுடைய மகளது, கண் வலை படூஉம் கானலான் - கண்வலையின் கண் ஆண்டுச் செல்வார் அகப்படுகின்ற கடற்கரைச் சோலையினிடத்து, மாண்தகைநெஞ்சம் - எனது மாட்சிமைப்பட்ட தகுதியையுடையநெஞ்சம், இதற்கு இது மாண்டது - இப்பொருளுக்குஇப்பொருள் ஏற்ற மாட்சியை யுடையது, என்னாது -என்று ஆராயாமல், அதன் பட்டு - அக்கண் வலையின்கண்ணே பட்டு, ஆண்டு ஒழிந்தன்று -அக்கானலினிடத்தேதங்கியது, ஆன்றோர்க்கு - அறிவான் அமைந்தவர்கட்கு,அறிகரி பொய்த்தல் இல்லை - தாம் கண்டறிந்ததொன்றைமறைத்துப் பொய்க்கரி கூறும் இயல்பு இல்லை; ஆதலின்யாம் கண்டறிந்த இதனை உண்மையாகக் கொள்க; சிறுகுடிசெலவு - அச்சிற்றூரினிடத்துச் செல்லுதலை, குறுகல்ஓம்புமின் - அடைதலைப் பரிகரிமின்.

    (முடிபு) கானலான் நெஞ்சம் ஒழிந்தன்று; அறிகரி பொய்த்தல்ஆன்றோர்க் கில்லை; குறுகல் ஓம்புமின்.

    (கருத்து) நீவிர் ஆண்டுச் சென்றால் இங்ஙனம் கழறீர்.

    (வி-ரை.) அறிகரி பொய்த்தல் - தாம் அறிந்ததோருண்மையானநிகழ்ச்சியை மறைத்துப் பொய்க்கரி கூறுதல்; அறிகரி - நெஞ்சறிந்த கரி;“தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்த பின், தன்னெஞ்சே தன்னைச்சுடும்” (குறள், 293) என்பது இங்கே அறிதற்குரியது. ஆன்றோரென்றதுதன்னையும் உளப்படுத்தி; இங்ஙனங் கூறுதல் தற்புகழ்ச்சியன்று; பட்டாங்குகூறியது (திருச்சிற். 27, உரை; சீவக. 1364, உரை.) அதற்பட்டு: அன்,சாரியை; “என்னிதற் படலே” (அகநா. 95:15) என்று வருதலுங் காண்க.ஆன்றோ னாதலின் மாண்டகை நெஞ்ச முடைய னாயினான். நாண்டகைநெஞ்ச மென்ற பாடத்திற்கு நாணத்தை நீத்த நெஞ்சமென்று பொருள்கொள்க. நுண்வலை யென்றது நுண்ணிய நூலாலான வலையை;“நுண்ஞாண் வலையில்” (ஐந். எழு. 66.) வலையை யுடையார் மகளென்றமையின் அவள் கண்ணையும் வலையாக உருவகித்தான். கண்வலையென்றதற் கேற்ப நெஞ்சத்தை மீனாகக் கொள்க (திருச்சிற். 74.)

    “பரதவர் மடமகள் கண்வலையில் என் நெஞ்சம் பட்டு ஆண்டேதங்கிவிட்டது; இந்நிலை எனக்கு மட்டும் அமைந்ததன்று; யாராயினும்அவ்வலையிலே படுவர்; இது யான் அறிந்த உண்மை; ஆதலின் அங்கேஒருவரும் செல்லற்க; செல்லின் துன்புறுவீர்” என்னும் கருத்துப்படத்தலைவன் கூறினான். இதனால், “நீர் கண்டனிராயிற் கழறலிர்”(அகநா. 130:2) என்ற எச்சப் பொருள் தோன்றியது.

    (மேற்கோளாட்சி)மு. முல்லையுங் குறிஞ்சியும் ஒழிந்தவற்றுடன் திணைதொறும்மரீஇய பெயருடையோரிலும் திணைநிலைப் பெயராகிய தலைமக்களாகவழங்குவாரும் உளர்; ‘இது கழறிய பாங்கற்குக் கூறியது’ (தொல். அகத். 22,ந.)

    ஒப்புமைப் பகுதி 1. அறிகரி பொய்த்தல்: நற். 196.9; சிலப். 15:78.

     கரி பொய்த்தல்: கலி. 34 : 10.

    அறிகரி: அகநா. 256: 28.

    2. குறுந். 206:5.

    சிறுகுடி: குறுந். 95:3, 100:3, 108:1, 145:1, 228:3; 284:8, 322:3,332:5, 355:6, 373:7.

    6. நுண்வலை: “நூனல நுண்வலை” (திணைமாலை. 32.)

    6-7. மடமகள் கண்வலை: ‘‘காய்சின வேலன்ன மின்னியல் கண்ணின் வலைகலந்து, வீசின போதுள்ள மீனிழந்தார்’’ (திருச்சிற். 74.)

(184)