(தலைமகன் இரவில் வந்து தலைவியோடு அளவளாவி வருங்காலத்தில் ஆற்றின் ஏதம் அஞ்சி வேறுபட்ட தலைவியை நோக்கி, “நீவேறுபட்டாயால்!” என்ற தோழிக்கு, “யான் வேறுபட்டமையைத்தலைவனுக்குச் சொல்லிப் பரிகாரம் தேடுவாயாக” என்று தலைவி கூறியது.)
 185.   
நுதல்பசப் பிவர்ந்து திதலை வாடி 
    
நெடுமென் பணைத்தோள் சாஅய்த் தொடிநெகிழ்ந் 
    
தின்ன ளாகுத னும்மி னாகுமெனச் 
    
சொல்லி னெவனாந் தோழி பல்வரிப் 
5   
பாம்புபை யவிந்தது போலக் கூம்பிக் 
    
கொண்டலிற் றொலைந்த வொண்செங் காந்தள் 
    
கன்மிசைக் கவியு நாடற்கென் 
    
நன்மா மேனி யழிபடர் நிலையே. 

என்பது தலைமகன் இரவுக்குறி வந்து ஒழுகாநின்ற காலத்து வேறுபட்டதலைமகளை, “வேறுபட்டாயால்” என்றாட்குக் கிழத்தி உரைத்தது.

    (என்றாட்கு - என்ற தோழிக்கு.)

மதுரை அறுவை வாணிகன் இளவேட்டன் (பி-ம். வேட்டன்,இளவேட்டனார்.)

    (பி-ம்.) 2. ‘நெகிழ்த்து’; 3. ‘னும் மிற்றாகுமென’; 8. ‘னமர் மேனி’.

    (ப-ரை.) தோழி -, பல் வரி பாம்பு - பல பத்திக்கீற்றுக்களையுடைய பாம்பினது, பை அவிந்ததுபோலகூம்பி - படம் ஒடுங்கியதைப் போலக் குவிந்து, கொண்டலின்தொலைந்த - கீழ் காற்றால் வீழ்த்தப்பட்ட, ஒள் செ காந்தள் -ஒள்ளிய செவ்விய காந்தள் மலர், கல் மிசை - பாறையின்மேல், கவியும் - கவிந்து கிடக்கும், நாடற்கு - நாட்டையுடையதலைவனுக்கு, என் நல் மா மேனி - எனது நல்ல மாமையையுடைய மேனியினது, அழி படர் நிலை - மிக்க துயரை உடைய நிலையை, நுதல் பசப்பு இவர்ந்து - நெற்றி பசலைபரந்து, திதலை வாடி - தேமல் ஒளியிழந்து, நெடு மெல்பணை தோள் - நெடிய மெல்லிய பருத்த தோள்கள்,சாஅய் மெலிந்து, தொடி நெகிழ்ந்து - வளைகள் நெகிழப்பெற்று, இன்னள் ஆகுதல் - இத்தகைய வேறுபாட்டையுடையளாகுதல், நும்மின் ஆகும் என - உம்மால் ஆகியதென,சொல்லின் எவனாம் - விளங்கச் சொன்னால் என்ன குற்றம்உளதாகும்?

    (முடிபு) தோழி, நாடற்கு என் மேனி நிலையை இன்ளகுதல்நும்மினாகுமெனச் சொல்லின் எவனாம்?

    (கருத்து) தலைவன் இராவந் தொழுகுவதனால் நான் வேறுபட்டமையை அவனுக்கு நீ அறிவிப்பாயாக.

    (வி-ரை.) “இரவிலே தலைவன் வந்து அளவளாவும் பொழுதுஅதனால் மனமகிழ்ந்து இருத்தற்கு மாறாக நீ இங்ஙனம் வேறுபட்டாயே!”என்ற தோழியை நோக்கி, “இங்ஙனம் என்னிடம் கூறுவதினும் என்நிலையைத் தலைவனிடம் கூறுதல் நலம்” என்று தலைவி கூறினாள்.

    தோழி அங்ஙனம் கூறின் தலைவன் தலைவியின் வேறுபாட்டிற்குக்காரணம் யாதென்று ஆராயப்புகுந்து, தான் இராவருதலால் ஆற்றின்கண்ஏதம் நிகழுமோ வெனத் தலைவி அஞ்சி வேறு பட்டாளென்பதனைஅறிவான்; அறிந்து இவ் வொழுகலாற்றை நீத்து வரைந்து கொண்டுஇடையறாது உடனிருத்தலே நலமென்று கருதி வரைவு மேற்கொள்வான்.இதுவே இங்ஙனம் கூறியதற்குப் பயன்.

    திதலை-தேமல். பணைத்தோள்-மூங்கிலைப் போன்ற தோளெனலுமாம். தோள் மெலிந்தமையின் தொடி நெகிழ்ந்தது. இவர்ந்து வாடிமுதலிய எச்ச வினைகள் சினைக்கும் முதலுக்குமுள்ள ஒற்றுமை பற்றி ஆகுத லென்னும் வினைமுதல் வினையோடு முடிந்தன. நும்மினாகும் என்றால், “யாம் யாதுஞ் செய் திலமே! இவளை நாடொறும் காண்டற் பொருட்டன்றே நீண்ட நெறியைக் கடந்து வருகின்றேம்” என்று ஆராயப்புகுவான்; ஆதலின் அங்ஙனம் கூறும்படி சொன்னாள்.

    “நெஞ்சங் கடுத்தது காட்டும் முகம்” (குறள், 706) ஆதலின், தன்வேறுபாடுகளைக் கூறப் புக்கவள் முதலில் நுதல் வேறுபாட்டைஉரைத்தாள்.

    ஒப்புமைப் பகுதி1. நுதல் பசத்தல் : குறுந். 87:4, ஒப்பு.

    2. நெடு மென்பணைத் தோள் : குறுந். 268:6.

    தோள் மெலிதல் : குறுந். 87:5, ஒப்பு.

    தொடி நெகிழ்தல் : குறுந். 50:4-5, ஒப்பு.

    தோள் மெலிதலும் தொடி நெகிழ்தலும்;குறுந். 239.1; குறள், 1236.

    1-2. நுதல் பசத்தலும் தோள் நெகிழ்தலும் : குறுந். 87:4-5,ஒப்பு.

    3. இன்னளாகுதல் : குறுந். 98:1, 296:7-8.

    4. சொல்லின் எவன்: “சொல்லி னெவனோ பாண” (அகநா. 50:10.)

    4-5. பல்வரிப் பாம்பு : குறுந். 119:1, 190: 3-4.

    5-6. காந்தளுக்குப் பாம்பு : குறுந். 239: 3-5, ஒப்பு.

    மு. தலைவி தன் வேறுபாட்டைத் தலைவனுக்கு அறிவிக்கவிரும்புதல் : குறுந். 98: 1-3, ஒப்பு.

(185)