(வேந்தனது வினைமேற் செல்லாநின்ற தலைவன் தன் பாகனைநோக்கி, “இன்று விரைந்து சென்று வினைமுடித்து, நாளைத் தலைவிபால்மீண்டு வருவேமாக” என்று கூறியது.)
 189.   
இன்றே சென்று வருவது நாளைக் 
    
குன்றிழி யருவியின் வெண்டேர் முடுக 
    
இளம்பிறை யன்ன விளங்குசுடர் நேமி 
    
விசும்புவீழ் கொள்ளியிற் பைம்பயிர் துமிப்பக் 
5
காலியற் செலவின் மாலை யெய்திச் 
    
சின்னிரை வால்வளைக் குறுமகள் 
    
பன்மா ணாக மணந்துவக் குவமே. 

என்பது வினை தலைவைக்கப்பட்ட விடத்துத.் (பி-ம். பட்டிடத்துத்)தலைமகன் பாகற்கு உரைத்தது

    (தலை வைக்கப்பட்ட விடத்து - செய்ய வேண்டுமென்று சுமத்தப்பட்ட காலத்தில்.)

மதுரை ஈழத்துப் பூதன்றேவன்.

    (பி-ம்) 4. ‘விசும்பு வீசு’, ‘துமியக்’; 5. ‘காலையிற் செலீஇ ’; 7. ‘மடைந்துவக் கும்மே’, ‘மடைந்து சார்குதுமே’.

    (ப-ரை.) பாக, இன்றே சென்று - இன்றைக்கே வினையின் பொருட்டுப் புறப்பட்டுப் போய், நாளை வருவது -நாளை மீண்டு வருவேமாக. குன்று இழி அருவியின் - குன்றினின்று வீழும் அருவியைப் போல, வெள் தேர் முடுக -யானைத் தந்தத்தாற் செய்த வெள்ளிய தேர் விரைந்துசெல்ல, இள பிறை அன்ன - இளம்பிறையைப் போன்ற,விளங்கு சுடர் நேமி - விளங்குகின்ற ஒளியையுடையஅத்தேரினது சக்கரம், விசும்பு வீழ் கொள்ளியின் - வானத்தினின்றும், வீழ்கின்ற கொள்ளியைப் போல, பசு பயிர்துமிப்ப-பசிய பயிர்களைத் துணிப்ப, கால் இயல் செலவின் - காற்றைப் போன்ற இயல்பையுடைய வேகத்தினால், மாலைஎய்தி-மாலைக் காலத்தில் தலைவியிருக்கு மிடத்தையடைந்து,சில் நிரை வால் வளை குறுமகள் - சிலவாகிய வரிசையையுடைய வெள்ளிய வளைகளை யணிந்த அவளது, பல்மாண் ஆகம் - பலவாக மாட்சிமைப் பட்ட மேனியை,மணந்து உவக்குவம் - மணந்து உவப்போம்.

    (முடிபு) இன்றே சென்று நாளை வருவது. தேர் முடுக, நேமிதுமிப்ப,மாலை எய்திக் குறுமகள் ஆகம் மணந்து உவக்குவம்.

    (கருத்து) இன்று சென்று வினைமுடித்து விட்டுத் தலைவியின்பால்நாளை மாலையில் வந்து எய்துவோமாக.

    (வி-ரை.) வேந்தனால் ஏவப்பட்டு வினைமேற் செல்லும் தலைவன்இது கூறினான்.

    இன்றே: ஏகாரம் பிரிநிலை. வருவது - வருவேமாக; வியங்கோட்பொருளில் வந்தது; “கொள்ளப் படாது மறப்ப தறிவிலென் கூற்றுக்களே”(திருச்சிற். 87) என்பதில் மறப்பதென்பது வியங்கோளாக வந்ததைக்காண்க. யானையின் தந்தம் வெண்ணிறமுடையதாதலின் அதனாற் செய்ததேரை ‘வெண்டேர்’ என்றான்; “வெண்காலமளி” (சிலப். 6:170) என்றவிடத்து, ‘வெண்கால்-மருப்புக்கால்’என அடியார்க்கு நல்லார் எழுதினர்.

    நேமி போகும்போது மண்ணிற் புதைந்த பகுதி போக எஞ்சியபகுதியே வெளியில் தெரியுமாதலின் அப்பகுதிக்குப் பிறை உவமையாயிற்று. விசும்பினின்றும் வீழும் கொள்ளியினாற் பயிர் துமிதலைப் போலநேமியால் துமிந்தது; “இழையணி நெடுந்தே ராழி யுறுப்ப, நுண்கொடிமின்னிற் பைம்பயிர் துமிய” (அகநா. 254: 13-4) என்பதனோடு இதனைஒப்பு நோக்குக.

    சின்னிரை வளையென்ற அடை தலைவி பெதும்பைப் பருவங்கடந்த மங்கைப் பருவத்தின ளென்பதைக் குறித்தது (பதிற். 57:6, உரை);பல்வளைகள் அணிந்திருப்பினும் தன் உடன் மெலிவினால் அவற்றைஇழந்து சில்வளை யுடையளா யிருப்பாளென்னும் கருத்தினாற் கூறினன்எனினுமாம் (அகநா. 19:15, உரை.) வால் வளை - சங்கினாற் செய்தவளை. பன் மாணாகம் - காட்சியினிமை, ஊற்றினிமை, நன்மணம்முதலிய பல மாட்சிமைப்பட்ட உடம்பு. ஆகத்தைப் பன்மாண் மணந்துவக்கும் எனக் கூட்டிப் பன்மாண் என்பதற்குப் பலபடியாக வென்றுபொருளுரைத்தலும் ஒன்று.

    (மேற்கோளாட்சி) மு. தலைவன் பிரிவலெனக் கூறியது (தொல். அகத். 41,ந.) 1-2. வேந்துறு தொழிலுக்கு இழிந்த எல்லை கூறார் (தொல். கற்பு. 48,ந.); மு. நெட்டாறு சேறலின்றி அணிமைக்கட் பிரியும் பிரிவு வந்தது(தொல். களவு. 17,இளம்.); நீடே னென்று தலைவன் நீங்கியது(நம்பி. 170.)

     ஒப்புமைப் பகுதி 1. தேருக்கு அருவி: “நல்லெழி னெடுந்தே ரியவுந்தன்ன,கல்யா றொலிக்கும் விடர்முழங் கிரங்கிசை” (மலைபடு. 323-4); “கற்பாலருவியி னொலிக்கு நற்றேர்” (அகநா. 184:17.)

    வெண்டேர்: குறுந். 205:3.

    அருவி வேகத்திற்கு : “கடுவரை நீரிற் கடுத்துவரக் கண்டும்” (பு. வெ. 11.)

    3-4. பயிர் முதலியவை துமியத் தேர் வருதல்: குறுந். 227: 1-3, ஒப்பு.

    5. காலியற் செலவு : “காலுறழ் கடுந்திண்டேர்”, “வளியினிகன்மிகுந் தேரும்” (கலி 33:31, 50:15); “காலென மருள வேறி நூலியற், கண்ணோக் கொழிக்கும் பண்ணமை நெடுந்தேர்”, “துனைகாலன்ன புனைதேர்”, “வான்வழங் கியற்கை வளிபூட் டினையோ” (அகநா. 234: 7-8, 251:7, 384:9); ‘‘காலிய னெடுந்தேர்” (தமிழ்நெறி. மேற்.)

    6. சின்னிரை வளை : “சில்வளை” (பதிற். 40:21, 57:6, 78:3.)

    குறுமகள் : குறுந். 89:7, ஒப்பு.

(189)