(பொருளீட்டும் பொருட்டுத் தலைவன் பிரிந்திருந்த காலத்தில்தனிமையை யாற்றாத தலைவி தோழியை நோக்கி, “நடுயாமத்தில் யான்துயிலின்றிப் படும் துன்பத்தைத் தலைவர் அறிவாரோ?” என்று கூறியது.)
  190.    
நெறியிருங் கதுப்பொடு பெருந்தோ ணீவிச்  
     
செறிவளை நெகிழச் செய்பொருட் ககன்றோர் 
    
அறிவர்கொல் வாழி தோழி பொறிவரி 
    
வெஞ்சின வரவின் பைந்தலை துமிய 
5
உரவுரு முரறு மரையிரு ணடுநாள் 
     
நல்லே றியங்குதோ றியம்பும் 
     
பல்லான் றொழுவத் தொருமணிக் குரலே. 

என்பது பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

பூதம்புல்லன் (பி-ம். பூதம்புலவன்.)

    (பி-ம்) 5. ‘நரையுரு’, ‘மாவுரு’, ‘வரவரு’; 7. ‘எழுமணிக்’.

    (ப-ரை.) தோழி, நெறி இரு கதுப்பொடு - நெறிப்பைஉடைய கரிய கூந்தலோடு, பெரு தோள் நீவி - பெரியதோள்களைத் தடவி என்னைத் தேற்றி, செறி வளைநெகிழ-இறுகச் செறித்த வளைகள் நெகிழும்படி, செய்பொருட்குஅகன்றோர்-தாம் ஈட்டும் பொருளின் பொருட்டு என்னைப்பிரிந்து சென்ற தலைவர், பொறிவரி வெஞ்சினம் அரவின்-புள்ளிகளையும், பத்திக்கீற்றுக்களையும் மிக்க சினத்தையுமுடைய பாம்புகளின், பசு தலை துமிய - பசிய தலைகள்துணியும்படி, உரம் உரும் உரறும் - வலியையுடைய இடியேறு முழங்குகின்ற, அரை இருள் நடு நாள் -பாதியிரவின் கண், பல் ஆன் தொழுவத்து - பல பசுக்கள் உள்ள தொழுவத்தில், நல் ஏறு இயங்குதோறு இயம்பும் - நல்ல ஆனேறுசெல்லுந் தோறும் ஒலிக்கின்ற, ஒருமணிகுரல் - ஒற்றைமணியின் குரலை, அறிவர் கொல் - அறிவாரோ?

    (முடிபு) தோழி, அகன்றோர் நடுநாள் ஏறு இயங்கு தோறியம்பும்மணிக்குரலை அறிவர்கொல்?

    (கருத்து) இங்கே நான் படும் துன்பத்தைத் தலைவர் அறியார்போலும்!

    (வி-ரை.) கதுப்பும் தோளும் நீவித் தலையளி செய்தது பின்புபிரியும் பொருட்டு. செறிவளை - முன்பு செறிந்திருந்த வளை. அறிவர்கொல் என்றது அறிந்தாற் பிரிந்திராரென்னும் நினைவிற்று. கொல்: ஐயம்.வாழி: அசைநிலை. உரம் - மலையையும் பிளக்கும் ஆற்றல்; “வரையுதிர்க்கும், நரை யுருமினேறு” (மதுரைக். 62-3.) ஆவினங்களுக்கு இன்பத்தருதலின் நல்லேறாயிற்று. இயங்கு தோறு - அசையுந்தோறு மெனினுமாம்.ஒரு மணி ஏற்றின் கழுத்திலுள்ளது. பல பசுக்கள் கட்டிய தொழுவத்திற்கேட்கும் ஒரு மணிக்குரல், அவை அந்நல் லேற்றோடு இன்புற்றிருக்கும்நிலையை நினைவுறுத்தி, “இவை பெற்றபேறு யாம் பெற்றிலேமே!”என இரங்குதற்குக் காரணமாயிற்று. அக்குரலை நள்ளிரவில் தான்கேட்பதாகக் குறிப்பித்தாள்; இதனால் அவள் நள்ளிரவிலும் துஞ்சாமைபெறப்படும்.

    (ஒப்பு) நெறியிருங் கதுப்பு : 1. “நெறிபடு கூந்தல்” (குறுந். 199:4);“நெறியிருங் கதுப்பினென் பேதை” “நெறியிருங் கதுப்பிற் கோதையும்புனைக” (அகநா. 35:17, 269:2.)

    கதுப்பு நீவுதல்: (குறுந். 379:6); “பாறுமயிர் நீவி” (அகநா. 300:7)“ஓதியு நுதலு நீவி” (தொல். மெய்ப். 15, பேர். மேற்.)

    கதுப்பும் தோளும் : “நெறியிருங் கதுப்பு நீண்ட தோளும்”(நற். 387:1.)

    5. அரையிரு ணடுநாள்: “அரைநாட்கங்குல்”, “அரைநாள்யாமத்து”,“அரைநாள்” (அகநா. 112:4, 198:4, 311:4.)

    மு. நற். 68:8.

    4-5. பாம்பின் தலை கெட இடி இடித்தல் : குறுந். 158:1-2. ஒப்புமைப் பகுதி பதிற். 51:25-8; அகநா. 92:11, 323:10-1; புறநா. 17:38-9, 37:1-4, 58:6-7, 126:19, 366:3; நாலடி. 164; கார். 20; களவழி. 13, 138;திணைமொழி. 28.

    உரவுரும் உரறுவதால் அரவின் பைந்தலை துமிதல்: “பானாள்,உத்தியரவின் பைத்தலை துமிய, உரவுரு முரறும்” (அகநா. 202:9-11.)

    6-7. ஏற்றின் மணி: குறுந். 275:3-4. தலைவி யாமத்தில் ஆன்மணி யோசையைக் கேட்டுத் துன்புறல் : குறுந் 86:4-6, ஒப்பு.

(190)