(ஆசிரியர் பெயர் காணப்படவில்லை.) (பி-ம்) 2. ‘நேர்சினை’; 3. ‘ருள்ளாது’, ‘ருள்ளத்’, ‘என் குவம்’.
(ப-ரை.) தோழி, இது என் மொழிகு - இதனைஎன்னென்று சொல்வேன்? நோன் சினை இருந்த - வலியமரக்கிளையில் இருந்த, இரு தோடு புள் இனம் - பெரியதொகுதியை உடைய பறவைக் கூட்டங்கள், தாம்புணர்ந்தமையின் - தாம் துணைகளோடு சேர்ந்தமையால்,பிரிந்தோர் உள்ளா - துணைவரைப் பிரிந்தாருடையதுன்பத்தை எண்ணாதனவாய், தீகுரல் அகவ கேட்டும் -இனிய குரலால் அழைப்பக் கேட்ட பின்பும், நீங்கிய -நம்மைப் பிரிந்த, ஏதிலாளர் - அயற்றன்மையை உடையதலைவர், இவண் வரின் - இங்கே மீண்டு வந்தால், போதின்பொம்மல் ஓதியும் புனையல் - மலர்களால் பொங்குதலைஉடைய கூந்தலையும் அலங்கரித்தலை யொழிக, எம்மும்தொடா அல்- எம்மையும் தொடுதலை யொழிக, என்குவெம் - என்று கூறுவம்; அது - அங்ஙனம் செய்தலை,உது காண் - உவ்விடத்துப் பார்ப்பாயாக.
(முடிபு) இதுவென் மொழிகு? கேட்டும் நீங்கிய ஏதிலாளர்வரின்,‘‘ஓதியும் புனையல், தொடாஅல்” என்குவம்; அது உதுக்காண்.
(கருத்து) நம்மைப் பிரிந்த தலைவர் வரின், அவரை ஏற்றுக்கொள்ளேன்.
(வி-ரை.) உதுக்காண் :இத்தொடரின் இலக்கண முடிபை இந்நூல்81-ஆம் செய்யுள் விசேட வுரையிற் காண்க. புள்ளினம் அகவுதலை, ‘உதுக்காண்’ என்று சுட்டியதாகப் பொருள் செய்தலும் அமையும். ’இதுவென் மொழிகோ’ என்பது, ‘இங்ஙனம் நம்மைப் பிரிந்து சென்ற தலைவர்செயலை, அறத்தின் பாற்பட்டது என்றோ அருளின் பாற்பட்டது என்றோஎன்னென்று சொல்லுவேன்?’ என்றவாறு. என்னென்றது வினாவுதல்கருதாது தலைவியது கவற்சியை விளக்கியது (திருச்சிற்.24, உரை.) பிரிந்தோருள்ளா வென்றது, தாம் புணர்ந்துடன் கூடிய மகிழ்ச்சியால்அகவும் குரல் பிரிந்தாருக்குத் துன்பத்தைத் தருமென அவர் நிலையைநினையாவா யென்றபடி. பிரிந்தோர் துன்புறுதலாவது, ‘இவை பெற்றபேறு யாம் பெற்றிலமே!’ என இரங்குதல். புணர்ந்த மகிழ்ச்சியால்அகவுவதாதலின் தீங்குரலாயிற்று. கேட்டும் : உம்மை, இழிவு சிறப்பு.
ஏதிலாளர் - ஏதின்மையை யுடையவர்; நம்பால் அன்புடையராயின்பிரியாரென்னும் நினைவிற்று. தலைவன் தன் ஆதரம் புலப்படத்தலைவியின் கூந்தலைப் புனைதல் மரபு;
| “போழ்திடைப் படாஅமன் முயங்கியு மமையாரென் |
| தாழ்கதுப் பணிகுவர் காதலர்” (கலி.4:10-11.) |
பிரிந்த தலைவன் மீண்டுவந்தவுடன் தலைவியின் கூந்தலை அணிந்து தன் அன்பை வெளிப்படுத்தும் மரபு,
| “இனிதுசெய் தனையா லெந்தை வாழிய |
| பனிவார் கண்ணள் பலபுலந் துறையும் |
| ஆய்தொடி யரிவை கூந்தல் |
| போதுகுர லணிய வேய்தந் தோயே” (அகநா. 104:14-7) |
என்பதனால் உணரப்படும்.
தலைவன் வந்தவுடன் முதலில் ஓதியைப் புனைந்து பின்பு மேனியைத் தொடப் புகுவானென்பது தலைவியின் நினைவு; இம்முறை,
| “பிடிக்கை யன்ன பின்னகந் தீண்டித் |
| தொடிக்கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ |
| நாணொடு மிடைந்த கற்பின் வாணுதல் |
| அந்தீங் கிளவிக் குறுமகள் |
| மென்றோள் பெறனசைஇச் சென்றவென் னெஞ்சே” (9:22-6)் |
என்ற அகநானூற்றுச் செய்யுளாலும் தெரிய வருகின்றது.
ஏதிலாளரென்று பன்மையாற் கூறியவள் பின் புனையல், தொடாஅலென ஒருமையாற் கூறினான் தன் உள்ளத்தெழுந்த செறல் பற்றி;“எனைத்துணைய ராயினு மென்னாந் தினைத்துணையும், தேரான் பிறனில்புகல்” (குறள். 144) என்புழிப் போல. சங்கர நமச்சிவாயர் இக்குறளைச்‘செறலிற் பலர்பால் ஒருமைப் பாலாயிற்று’ என்பதற்கு உதாரணமாகக்காட்டினார்; நன்.379, உரை.
‘புனையல், தொடாஅ லென்குவம்’ என்ற தலைவி,
| “எழுதுங்காற் கோல்காணாக் கண்ணேபோற் கொண்கன் |
| பழிகாணேன் கண்ட விடத்து” (குறள். 1285) |
என்றபடி தலைவனைக் கா ணாத விடத்தே புலந்திருத்தலும் கண்ட விடத்தே புலவி தீர்ந்து எதிர்கொள்ளலும் மகளிர் இயல்பாதலின் (கலி.67:77) அது கருதி, “இது பொருளற்ற கூற்று; அவர் வரின் இவள் ஊடல் தானேநீங்கும்” எனத் தோழி எண்ணுதல் கூடுமென்னும் நினைவினளாதலின்ஆக்கப் பொருள் தரும் மன்னைக் கூட்டி, ‘என்குவெம் மன்னே’ என்றாள். ஏ : ஈற்றசை. ஓதியும் : உம், எதிரது தழீஇயது; எம்மும் : உம் இறந்தது தழீஇயது.
(மேற்கோளாட்சி)மு. தலைவன் பிரிந்த வழித் தலைவி காய்ந்து கூறியது(தொல். கற்பு. 6, ந.); ஊடலென்னும் உரிப்பொருள் வந்தது (நம்பி. 251.)
ஒப்புமைப் பகுதி 1. உதுக் காண் : குறுந். 81:4, ஒப்பு.; ஐங். 101, 453;கலி. 108:39; புறநா. 307:3.
2. தோட்டுப் புள்ளினம் : குறுந். 34:4-5, வி-ரை.
2-4. புணர்ந்த பறவையின் ஒலி பிரிந்தாருக்குத் துன்பத்தைஉண்டாக்குதல் : (குறுந்.160:1-4); “அழுந்துபடு விழுப்புண் வழும்புவாய்புலரா, எவ்வ நெஞ்சத் தெஃகெறிந் தாங்குப், பிரிவில புலம்பி நுவலுங்குயிலினும்”, “புணர்குயில் விளித்தொறு, நம் வயினினையு நெஞ்சமொடுகைம்மிகக், கேட்டொறுங் கலுழுமால்”, “செங்கணிருங்குயி லெதிர்குரல்பயிற்றும், இன்ப வேனிலும் வந்தன்று” (நற். 97:1-3, 157:5-7, 224:5-6.)
பறவைகள் புணர்ந்து அகவுங் காலத்தில் தலைவர் பிரிதல் :“அடைகரை மாஅத் தல்குசினை பொலியத், தளிர்கவி னெய்திய தண்ணறும் பொதும்பிற், சேவலொடு கெழீஇய செங்க ணிருங்குயில், புகன்றெதி ராலும் பூமலி காலையும், அகன்றோர் மன்றநம் மறந்திசினோர்”, “பூங்கணிருங் குயில் ... ... அகற லோம்புமி னறிவுடை யீரெனக், கையறத் துறப்போர்க் கழறுவ போல, மெய்யுற விருந்து மேவர நுவல, இன்னா தாகிய காலைப் பொருள்வயிற், பிரித லாடவர்க் கியல்பெனின்” (நற். 118:1-5, 243:4-10; “விரிகாஞ்சித் தாதாடி யிருங்குயில் விளிப்பவும், பிரிவஞ்சா தவர் தீமை” (கலி. 34:8-9.)
5. தலைவனை ஏதிலனென்றல்: “ஏதி லாளர்க்குப் பசந்தவென்கண்ணே”, “ஏதிலாளனை” (ஐங். 34:4, 232:2.)
6. பொம்ம லோதி : குறுந். 379:6; நற்.252:12; அகநா. 214:9,221:3, 311:7, 353:23; பெருங். 1.55:119; சீவக. 1674, 2364.
தலைவன் தலைவியின் ஓதியைப் புனைதல் : குறுந். 82:1, 192:6.
7. எம்மும் தொடாஅல்: “தொடல்விடு நற்கலையே” (திருச்சிற். 358)
(191)