அரிசில் கிழார் (பி-ம். அரிசிற் கிழார், அழிசிற் கிழார்.) (பி-ம்.) 2. ‘இட்டுவர்ச்சுனையபகுவாய்த் தட்டைப்’; 5. ‘மன்னனெந்’,‘மன்னெந்’.
(ப-ரை.) தோழி, மட்டம் பெய்த - கள்ளைப் பெய்த,மணி கலத்து அன்ன - நீலக்குப்பிகளைப் போன்ற, இட்டுவாய் சுனைய - சிறிய வாயையுடைய சுனையின்கண்உள்ளனவாகிய, பகு வாய் தேரை - பிளந்த வாயையுடையதேரைகள், தட்டை பறையின் கறங்கும் நாடன் - கிளிகடிகருவியாகிய தட்டைப் பறையைப் போல ஒலிக்கும்நாட்டையுடைய தலைவன், தொல்லை திங்கள் நெடு வெள்நிலவின் - களவுக் காலமாகிய பழைய திங்களில் நெடியவெண்ணிலாவின்கண், நெடு தோள் - என் நீண்ட தோள்களை,மணந்தனன்- தழுவினான்; அதனால், இன்றும் - இக்காலத்தும், முல்லை முகை நாறும் - அவன் மேனியினது முல்லையினது மொட்டறா மலரின் மணத்தை என் தோள்கள்வீசா நிற்கும்.
(முடிபு) நாடன், தொல்லைத் திங்கள் நிலவில் தோளை மணந்தனன்;இன்றும் முல்லை முகை நாறும்.
(கருத்து) தலைவன் களவுக் காலத்துச் செய்த இன்னருள் இன்றளவும் மாறாது என்னைப் பாதுகாத்தது.
(வி-ரை.) மட்டம்-கள் (பதிற். 42:12); மட்டென்பது கள்ளின்பெயர்; அஃது அம்முச்சாரியை பெற்று இங்ஙனம் வந்தது. கள்ளைக்குப்பிகளில் ஊற்றி வைத்தல் பழைய வழக்கம்;
| “சோலைக் கமுகின் சூல்வயிற் றன்ன |
| நீலப் பைங்குடம்” (பெரும்பாண். 381-2), |
| “கள்ளி னிரும்பைக் கலம்” (மதுரைக்.228) |
என்பவற்றையும் அவற்றின் உரைகளையும் பாரக்க.
கள் வைத்த கலம் சுனைக்கு உவமை. இட்டுவாய்- இட்டிய வாய்; சிறிய வாய் (மதுரைக். 48.)
தட்டைப் பறையென்றது தட்டையையே; தட்டை மகளிர் தினைப்புனத்திற் கிளி முதலியவற்றைக் கடிவதற்குரிய கருவிகளுள் ஒன்று;மூங்கிலைக் கண்ணுக்குக் கண் உள்ளாக நறுக்கிப் பலவாகப் பிளந்து ஓசை யுண்டாக ஒன்றிலே தட்டப்படுவது (குறிஞ்சிப். 43.ந.); தட்டப்படுவதனால் தட்டை யென்னும் பெயர் உண்டாயிற்று. (மதுரைக். 305, ந.)
மன்: மிகுதியை உணர்த்தியது. நெடுந்தோளென்றாள், அவன் மணந்தமையாற் பொலிவு பெற்றமையை யுணர்த்த வேண்டி.
சிறந்த ஆடவர் மேனி முல்லைமலரின் மணமுடையதென்று தெரியவருகிறது; இதனை,
| ‘‘1.பந்தினை யிளையவர் பயிலிட மயிலூர் |
| கந்தனை யனையவர் கலைதெரி கழகம் |
| சந்தன வனமல சண்பக வனமாம் |
| நந்தன வனமல நறைவிரி புறவம்” (கம்ப. நாட்டுப்.48) |
| “தேன்மறிக்கும் வெறித்தொங்க லறற்கூந்தற் றிருந்திழைகண் |
| மான்மறிக்குன் றிருமேனி மலர்முல்லைப் புறவமே” |
| (சிதம்பரச் செய். 57) |
என்னும் செய்யுட்கள் உணர்த்துகின்றன.
தொல்லைத் திங்களென்றது அவன் நெடுங்காலத்துக்கு முன் மணந்தனனேனும் அவனன்பு இன்றளவும் அறாது நின்று காத்ததென்பதைவெளியிட்டவாறு. முல்லை முகைநாறு மென்றாள் அந்நறு மணத்தைமோந்து ஆற்றினேனென்பது கருதி.
நாறும்மே: விரிக்கும் வழி விரித்தது. ஏகாரங்கள் அசை நிலைகள்.
(மேற்கோளாட்சி) மு. தலைமகள் தலைவன் பிரிவின்கண் வருந்தாதிருந்தற்குக்காரணம் கூறியது (நம்பி. 203.)
ஒப்புமைப் பகுதி 2. சுனையின் குறுகிய வாய்: “நுங்கின், தடிகண் புரையுங்குறுஞ்சுனை” (கலி.108: 40-41.)
பகுவாய்த் தேரை : அகநா.154:2.
1-3. சுனையின் குறுமை : குறுந். 12:1.
3. தட்டை : குறுந். 223:4; மலைபடு.9, 328; பெருங்.2.12: 120.
2-3. தேரையின் ஒலிக்குத் தட்டையின் ஒலி : “அரிக்குரற்றட்டை” (மலைபடு. 9.)
தேரை கறங்குதல் : அகநா. 364:3.
4. திங்கள் நிலவு :“அற்றைத் திங்க ளவ்வெண்ணிலவின்.. இற்றைத்திங்க ளிவ்வெண் ணிலவின்” (புறநா. 112:1-3.)
நெடு வெண்ணிலவு : குறுந். 47:4,ஒப்பு.
5. நெடுந்தோள் : குறுந். 268:6.
தலைவன் தலைவியின் தோளை மணத்தல் : குறுந். 36:4, 50:5,100:7, 272: 1-8.
6. தலைவன் மேனி நறுமணம் உடையதாதல் : “ஊரனறுமேனி,கூட லினிதா மெனக்கு” (ஐந். ஐம்.30.)
(193)
1. | இச்செய்யுள் நிரனிறை. இதன் பொருள்: இளைய மகளிர் சந்தனவனங்களில் பந்தாடல் செய்தனர்; அவ்வனங்கள் தம் இயற்கை மாறி அம்மகளிர் மேனியின் இயற்கைமணமாகிய சண்பக மணத்தால் சண்பகவனம் போலாயின. அங்ஙனமே கந்தனையனைய ஆடவர் கலை தெரிகழகங்கள் அமைந்த நந்தன வனங்கள் அவர் தம் மேனியின் முல்லை மணத்தால் முல்லை வனம் போல் ஆயின.
என்னுடைய ஆசிரியராகிய மகாவித்துவான் பிள்ளையவர்கள் இச்செய்யுளுக்குக் கூறிய இவ்வரியவுரை இக் குறுந்தொகைச் செய்யுளுக்கு உரை காணப் பயன்பட்டது. |