(பருவ வரவின்கண், “தலைவர் வருவர்; நீ வருந்தற்க” எனத்துணிபு கூறிய தோழியை நோக்கி, ‘‘என் உயிரைக் கொள்ள வருவது போல இக்கூதிர்ப் பருவம் வந்தது; இனி என் செய்வேன்?” என்று தலைவி கூறியது.)
 197.   
யாதுசெய் வாங்கொ றோழி நோதக 
    
நீரெதிர் கருவிய காரெதிர் கிளைமழை 
    
ஊதையங் குளிரொடு பேதுற்று மயங்கிய 
    
கூதி ருருவிற் கூற்றம் 
5
காதலர்ப் பிரிந்த வெற்குறித்து வருமே. 

என்பது பருவ வரவின்கண் வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

கச்சிப்பேட்டு நன்னாகையார்.

    (ப-ரை.) தோழி-, நோதக - நோதல் பொருந்தும்படி,நீர் எதிர் கருவிய - நீரை ஏற்றுக் கொண்ட மின் முதலியதொகுதியை யுடையனவாகிய, கார் எதிர் கிளை மழை - கார்காலத்தை ஏற்றுக் கொண்ட கிளைத்த மழையையுடைய,ஊதையம் குளிரொடு - ஊதைக் காற்றினது குளிர்ச்சியோடு,பேதுற்று மயங்கிய- மிக மயங்கிக் கலந்த, கூதிர் உருவின்கூற்றம் - கூதிர்க் காலமாகிய உருவத்தையுடைய கூற்றம்,காதலர் பிரிந்த என் குறித்து வரும் - தலைவரைப் பிரிந்திருக்கும்என்னைக் கொல்லுதல் குறித்து வாரா நின்றது; யாதுசெய்வாம்--!

    (முடிபு) தோழி, கூதிர் உருவிற் கூற்றம் எற்குறித்து வரும்; யாதுசெய்வாம்?

    (கருத்து) தலைவர் கூதிர்க் காலத்தும் வந்திலராதலின் இனி உயிர்வாழேன்.

    (வி-ரை.) யாது - இத்துன்பத்தினின்றும் உய்வதற்குரிய முயற்சிகளுள் எதனை. கொல்: அசைநிலை. கருவி - தொகுதி; இந்நூல், 42-ஆம் செய்யுளின் விசேடவுரையைப் பார்க்க. மழைத்துளி வீசுதலும் ஊதைக் காற்றும் கூதிர்க்காலத்துக்குரியவை. ஊதை - வாடை. ஊதையங் குளிர்: அம், சாரியை. கூற்றமென்றாள் தன் உயிரை உடலினின்றும் கூறுபடுத்து வதற்கேதுவாதலின். எற்குறித்து - என்னைக் கொல்லுதல் குறித்து. ஏகாரம்: ஈற்றசை.

    ஒப்புமைப் பகுதி மு. அகநா. 364:12.

    4. கூதிர் உருவிற் கூற்றம் : “வாடையாய்க் கூற்றி னாருமுருவினைமாற்றி வந்தார்” (கம்ப. கார்காலப். 60); சீகாளத்திப். பொன்முகரி. 41.

    5. எற்குறித்து வரும்: குறுந். 188:4, 216:7.

(197)