(“இனி யாங்கள் தினைப்புனங் காக்கச் செல்கின்றேம்; நீ ஆண்டேவருக. ஈண்டு எம்முடைய தாய் வருவாளாதலின் வாரற்க” என்று தோழிதலைவனுக்குக் கூறியது.)
 198.    
யாஅங் கொன்ற மரஞ்சுட் டியவிற் 
    
கரும்புமருண் முதல பைந்தாட் செந்தினை 
    
மடப்பிடித் தடக்கை யன்ன பால்வார்பு 
    
கரிக்குறட் டிறைஞ்சிய செறிகோட் பைங்குரற் 
5
படுகிளி கடிகஞ் சேறு மடுபோர் 
    
எஃகுவிளங்கு தடக்கை மலையன் கானத் 
    
தார நாறு மார்பினை 
    
வாரற்க தில்ல வருகுவள் யாயே. 

என்பது தோழி குறியிடம் பெயர்த்துக் கூறியது.

    (குறியிடம் - இரவுக்குறி யிடத்தை. பெயர்த்து - மாற்றி.)

கபிலர்.

    (பி-ம்) 1. ‘மாஅங் கொன்ற’, ‘மாவுங் கொன்ற’; 2. ‘கருப்பு மருள்’;‘செறிகோற், ‘செறிதாட்ட’; 8. ‘வாரன் மற்றைய’.

    (ப-ரை.) யாஅம் கொன்ற - யாமரத்தை வெட்டிய,மரம் சுட்ட இயவில்- மரங்களைச் சுட்ட வழியில், கரும்புமருள் முதல - கரும்பைப் போன்ற அடியை யுடையனவாகிய,பசு தாள் செதினை - பசிய காம்பையுடைய சிவந்த தினையினது, மட பிடி தட கை அன்ன- மடமை மிக்க பிடியினதுவளைந்த கையைப் போன்றனவாகி, பால் வார்பு - பால்நிரம்பி, கரி குறட்டு இறைஞ்சிய - கரியை எடுக்கின்ற குறட்டைப்போல வளைந்த, செறி கோள் பசு குரல் - செறிந்த குலையையுடைய பசிய கதிர்களில், படுகிளி - தின்னும் பொருட்டுவீழ்கின்ற கிளிகளை, கடிகம் சேறும் - ஓட்டுவேமாகிச் செல்வேம்; யாய் வருகுவள் - இவ்விடத்தில் தாய் வருவாள்;அடு போர்- பகைவரைக் கொல்லும் போர்க்குரிய, எஃகுவிளங்கு தடகை- வேற்படை விளங்குகின்ற பெரிய கைகளையுடைய, மலையன் கானத்து- மலையனது முள்ளூர்க்கானத்தில் வளர்ந்த, ஆரம் நாறும் மார்பினை- சந்தனம்மணக்கின்ற மார்பினையுடையை யாகி, வாரற்க- வருதலையொழிக; தில்ல - இஃது எங்கள் விருப்பம்.

    (முடிபு) இயவில் சேறும்; யாய் வருகுவள்; வாரற்க.

    (கருத்து) இனித் தினைப் புனத்தே வந்து தலைவியோடுஅளவளாவுவாயாக.

    (வி-ரை.) தினைவிதைத்தற் பொருட்டு யாமரங்களை வெட்டினர்(குறுந். 214.) சுட்டஇயவு, சுட்டியவாயிற்று; அகரம் விகாரத்தாற் றொக்கது;“புகழ்புரிந் தில்லிலோர்” (குறுந், 59) என்புழிப் போல.

    களிற்றின் கை கொம்புடையதாதலின் அதனைக் கூறாது பிடியின்கையைக் கூறினாள். பால் - தினை முதலியவற்றிலுள்ள பால். கரிக் குறடு -கொல்லர் கரியை எடுக்கப் பயன்படுத்தும் குறடு. கோள் - வித்துமாம்.தடக்கை, மலையனுக்கு அடை. மலையன்- மலையமான் திருமுடிக்காரியென்னும் வள்ளல். ’மலையன் கானத்து ஆரம் நாறும் மார்பினை’என்றது, அவ்வாரத்தின் மணமறிந்து, “இஃது எற்றினான் வந்தது?”என்று தாய் ஆராய்தற்கு ஏதுவாகித் துன்பம் பயக்குமென்னும் நினைவிற்று. தலைவியைக் காண வந்தவனாதலின் சந்தனம் முதலியவற்றாற் புனைந்து கொண்டு வந்தான்.

    யாம் இயவிற் சேறுமென்றது, நீயும் ஆண்டே வருகவென்னும்எச்சப் பொருளைத் தந்தது. இதனால் இது குறியிடம் பெயர்த்துக்கூறியதாயிற்று.

    மேற்கோளாட்சி 1. அகக்காழன மரமென்று கூறப்படும் (தொல். மரபு. 85,பேர்.)

    மு. தலைவனது குறையைக் கடிது முடியாமையைக் கருதும் தோழிகுரவரைத் தான் அஞ்சித் தலைவியும் அவரை அஞ்சுவளெனக் கூறுவனவற்றுள் இது யாயை அஞ்சுதல் கூறியது (தொல். களவு. 23, ந.); பாங்கிஇறைவியைக் குறிவரல் விலக்கியது (நம்பி. 156.)

     ஒப்புமைப் பகுதி 1. யாம்: குறுந். 37:3, வி-ரை.

    2. தினையின் தாளுக்குக் கரும்பு: “கரும்பெனக் கவினிய பெருங்குரலேனல்” (அகநா. 302:10.) பைந்தாட் செந்தினை: அகநா. 242:5.

    1-2. மரங்களை வெட்டிய இடத்தில் தினையை விதைத்தல்: குறுந். 214:1-2; திணைமாலை. 1; “அந்தண் சந்தமோ டகின்மாந்தொலைச்சிச், சந்து சிதைய வுழுத செங்குரற் சிறுதினை” யா-வி. 15,மேற்.

    மரங்களைச் சுட்டவிடத்தே தினையை விதைத்தல்: “சுடுபுன மருங்கிற்கலித்த வேனல்” (குறுந்.291:1); “தொடுதோற் கானவன் சூடுறு வியன்புனம், கரிபுறங் கழீஇய பெரும்பாட் டீரத்துத், தோடுவளர் பைந்தினைநீடுகுரல்” (அகநா. 368:1-3); “கானவர், கரிபுன மயக்கிய வகன்கட்கொல்லை, ஐவனம் வித்தி மையுறக் கவினி, ஈனல் செல்லா வேனற்கு”,“எரிபுனக் குறவன் குறைய லன்ன, கரிபுற விறகி னீம வொள்ளழல்”(புறநா. 159:15-8, 231:1-2.)

    2-3. பால்வார்ந்த தினை: “துய்த்தலைப் புனிற்றுக் குரல் பால்வார்பிறைஞ்சித், தோடலைக் கொண்டன வேனல்”, “ஏனற் செந்தினைப்பாலார் கொழுங்குரல்” (நற்.206:1-2, 288:8.)

    3-4. தினைக்கதிருக்குப் பிடியின் கை: (குறுந். 360:5); “யானை..இறங்குகை கடுப்பத், துய்த்தலை வாங்கிய புனிறுதீர் பெருங்குரல்,நற்கோட் சிறுதினை” (குறிஞ்சிப். 35-8); “பொய்பொரு கயமுனி முயங்குகை கடுப்பக், கொய்பத முற்றன குலவுக்குர லேனல்” (மலைபடு. 107-8); “நீடிருஞ் சிலம்பிற் பிடியொடு புணர்ந்த, பூம்பொறி யொருத்தலேந்துகை கடுப்பத், தோடுதலை வாங்கிய நீடுகுரற் பைந்தினை”,“மணியேர் தோட்ட மையா ரேனல், இரும்பிடித் தடக்கையிற் றடைஇயபெரும்புனம்” (நற். 317:1-3), 344:2-3.) “உறங்குபிடித் தடக்கையொருங்கு நிரைத் தவைபோல், இறங்குகுர லிறடி” (பெருங். 1.49:103-4.)

    5. கிளி கடிகஞ் சேறும்: “உறுகிளி கடிகஞ் சென்றும்” (நற். 288:9.)

    2-5. “முறஞ்செவி யானைத் தடக்கையிற் றடைஇ, இறைஞ்சியகுரல பைந்தாட் செந்தினை, வரையோன் வண்மை போலப் பலவுடன்,கிளையோடுண்ணும் வளைவாய்ப் பாசினம்” (நற். 376:1-4.)

    4-5. தினையிற் கிளிகடிதல்: குறுந். 291:1-2, 360:5-6.

    6. எஃகு விளங்கு தடக்கை மலையன் கானம்: “செவ்வேன்மலையன், முள்ளூர்க் கான நாற” (குறுந்.312:2-3.)

    எஃகு விளங்கு தடக்கை மலையன்: “செவ்வேல், முள்ளூர் மன்னன்கழறொடிக் காரி” (அகநா. 209:11-2); “வல்வேன் மலையன்”(புறநா. 125:14.)

    7. தலைவன் சந்தனம் பூசி வருதல்: குறுந்.150:3, ஒப்பு.

    8. வாரற்க தில்ல: குறுந். 360:4; அகநா. 40:12.

    மு. குறுந். 141.

(198)