இறையனார். (பி-ம்) 2. ‘கண்டன’.
(ப-ரை.) கொங்குதேர் வாழ்க்கை - பூந்தாதை ஆராய்ந்து உண்ணுகின்ற வாழ்க்கையினையும், அகம் சிறை தும்பி - உள்ளிடத்தே சிறையையும் உடைய வண்டே, காமம் செப் பாது - என் நிலத்து வண்டாதலின் யான் விரும்பியதையே கூறாமல், கண்டது மொழிமோ - நீ கண்கூடாக அறிந்த தையே சொல்வாயாக: நீ அறியும் பூ - நீ அறியும் மலர்களுள், பயிலியது கெழீஇய நட்பின் - எழுமையும் என்னோடு பயிலுதல் பொருந்திய நட்பையும், மயில் இயல் - மயில் போன்ற மென்மையையும், செறி எயிறு - நெருங்கிய பற்களையும் உடைய, அரிவை கூந்தலின் - இவ்வரிவையின் கூந்தலைப் போல, நறியவும் - நறுமண முடைய பூக்களும், உளவோ - உள்ளனவோ?
(முடிபு) தும்பி, நீ அறியும் பூக்களுள் அரிவையின் கூந்தலைப் போல நறியனவும் உளவோ? மொழிவாயாக.
(கருத்து) தலைவியின் கூந்தல் இயற்கை மணம் உடையது.
(வி-ரை.) தும்பி சொல்லும் ஆற்றல் இலதாயினும் உள்ளதுபோல, “சொல்லா மரபி னவற்றொடு கெழீஇச், செய்யா மரபிற் றொழிற்படுத் தடக்கியும்” (தொல். பொருள். 2) என்ற விதிப்படி உவகை பற்றிக் கூறியது. கொங்கு - தேனுமாம்; முள்ளரைத் தாமரை முகிழ்விரி நாட்போது, கொங்குகவர் நீலச் செங்கட் சேவல்” (சிறுபாண். 184-5, ந.)அம் சிறை - அழகிய சிறையுமாம்; “அம்ம வாழியோ வணிச்சிறைத் தும்பி” (குறுந்.392:1). தும்பி - உயர்ந்த சாதி வண்டு. மணத்தைப் பற்றிக் கூறுதலின் நன் மணத்திற் செல்லும் தும்பியை நோக்கிக் கூறினான் (சீவக.892, ந). செப்பென்பதைத் திசைச் சொல் என்பர் நச்சினார்க்கினியர். கண்டது - அறிந்தது. மோ: முன்னிலையசை. பயிலாத பொருட்கண் அருவருப்புத் தோன்றுதற்கு ஏதுவாகிய பயிர்ப்பென்னும் குணம் உடையளாதலின், பயிலியது கெழீஇய நட்பென்றான். மயிலியல், செறியெயிறு என்னும் அடைகளும் உடம்படு புணர்த்தும் வாயிலாக இரண்டு இயல்புகளை விளக்கின; “முறிமேனி முத்த முறுவர் வெறி நாற்றம், வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு” (குறள்,1113) என்பதையும், ‘பெயரடையானும் ஓரியல்பு கூறப்பட்டது’ (பரிமேல்.) என்னும் அதன் உரையையும் பார்க்க. அரிவை என்றது பருவம் குறித்தது அன்று. ஓகாரம் வினாவோடு எதிர்மறைப் பொருளது. பூ - பூக்களுள்; ஏழனுருபு இறுதிக்கண் தொக்கது. ஏகாரம் ஈற்றசை.
(மேற்கோளாட்சி) 1. ‘கொங்கு ... வாழ்க்கை என்பது இளவேனி லாயிற்று, தும்பி கொங்குதேரும் காலம் அதுவாதலின்’ (தொல்.அகத்.16, ந.); அஞ்சிறை: அகம் என்பதன் முன் சிறை என்பது வரின் இடை எழுத்துக்கெடும் (நன்.222, சங்.).
2. மோவென்பது முன்னிலையசை (தொல்.இடை.26, இளம், சே, தெய்வச், ந, கல்; நன்.439, மயிலை, 440,சங்;இ.வி. 276); செப்பென்பது சொல்லென்பதை உணர்த்தல் (நன்,457, மயிலை; 458, சங்.); ‘காமஞ்செப்பாது கண்டது மொழிமோ வென்றது என்நிலத்து வண்டாதலின் எனக்காகக் கூறாதே கொள்ளென்றலிற் குறிஞ்சிநிலம் ஒன்றாயிற்று’ (தொல்.களவு. 2, ந.) 1-2. ‘கொங்கு ,.. தும்பியென்பது ஒன்பதெழுத்தான் வந்தது; காமஞ் ... கண்டன மொழிமோ வென்பது பத்தெழுத்தான் வந்தது’ (தொல். செய்.49, இளம.்)
மு. ‘இதனுள் தும்பி என்றது முன்னிலையாக்கல்; கண்டது மொழிமோவென்றது சொல்வழிப்படுத்தல்; கூந்தலின் நறியவு முளவோ வென்றதுநன்னயமுரைத்தல்; காமஞ் செப்பா தென்றது என்னிலத்து வண்டாதலின் எனக்காகக் கூறாது மெய்கூறெனத் தன் இடம் அதுவாகக் கூறலின் இடமணித்தென்றது; பயிலியது கெழீஇய நட்பென்றது தம் நிலையுரைத்தல்'(தொல், களவு. 10, ந.); சொல்லாமரபின சொல்லுவனவாக உவகை பற்றிக்கூறியது (தொல். பொருள்.2,ந.); ‘கொங்குதேர் வாழ்க்கை யென்னும்பாட்டு இயற்கைப் புணாச்சிக்கண் நிகழ்ந்த செய்யுள், (தொல்.செய்.187, பேர.்); தலைமகளைப் புகழ்ந்து நயப்புணர்த்தியது (இறை.2); பெருநயப்புரைத்தலென்னுந் துறை (நம்பி.129;இ.வி.497); நயப்புணர்த்தியது (தமிழ்நெறி விளக்கம், 15); ‘இவ்வாசிரியத்துள் இயற்சீரும் உரிச்சீரும் விரவி வந்தன’(யா.வி.15); நயப்புணர்த்தல் (களவியற் காரிகை,25.)
வரலாறு
இச்செய்யுளை, ‘ஆலவாய் இறையனார் தருமி என்னும் பிரமசாரிக்குப்பொற்கிழி வாங்கிக் கொடுத்த சிந்தாசமுத்தி யகவல்’ என்று தமிழ் நாவலர்சரிதை கூறும.்
இது, பாண்டியனால் சங்க மண்டபத்தின் முன் கட்டப்பட்டபொற்கிழியைத் தருமி என்னும் பிரமசாரி ஒருவன் பெறும் பொருட்டு ஸ்ரீசோமசுந்தரக் கடவுள் இயற்றி அவனுக்கு அளித்ததென்று கூறப்படும்;"பொதியப் பொருப்பன் மதியக் கருத்தினைக், கொங்குதேர் வாழ்க்கைச்செந்தமிழ் கூறிப், பொற்குவை தருமிக் கற்புடனுதவி, என்னுளங் குடிகொண்டிரும்பய னளிக்கும், கள்ளவிழ் குழல்சேர் கருணையெம் பெருமான்’’(கல்.1); "வழுத்திய மறையோன் றன்மை கண்டவன் மனத்தினாசை,ஒழித்திடு வான்வி ரும்பி யுரகமா ணிக்கச் செம்பொற், குழைக்கியை காதனங்கட் கொங்குதேர் வாழ்க்கை யென்றோர், கிழிக்கிசை கவிதை பாடிக்கொடுத்தனன் கீர்த்தி வேட்டு" (திருவால.16:10); ‘‘திருந்துசிவ முனிதருமிதளர்ந்தேன் மன்றல் செய்வான்வண் பொருளிலையென் றேத்த விங்குப்,பொருந்துமடந் தையரொடுயர் தலத்து லாவும் புகழ்மாற னணைந்தமணங்கண்டீ தென்கொல், அருந்தமிழா லிதுபொருந்தப் பாடுவாரே லளிப்பலென்றோர் பொற்கிழிநற் சபையுட் டூக்க, மருந்தனையான் கொங்கென்றோர்கவிதை பாடிக் கிழியறுப்பான் வழங்கியொப்பித் தனன்கீழ் நின்றே"(கடம்பவன புராணம், 10:17);’’தென்ன வன்குல தெய்வமாகிய,மன்னர்கொங்குதேர் வாழ்க்கை யின்றமிழ், சொன்ன லம்பெறச் சொல்லி நல்கினார,்இன்ன றீர்ந்தவ னிறைஞ்சி வாங்கினான்’’ (திருவிளை. தருமிக்கு.88);‘’அங்கதை யிப்பா வேந்தர்க் கறைந்தனை பெறுதி யென்று, கொங்குதேர்வாழ்க்கை யென்னுங் கோதிறூக் கீந்து விட்டான், பொங்கிய களிப்பி னானும் போய்த்தொடர் பமுதந் தன்னைத், திங்கள்வெண் குடையி னான்றன்செவிப்புலத் தூற்றி னானால்’’ (சீகாளத்தி. நக்கீர.61); ‘அப்பாலோர்வண்டை யனுப்பி னவர்காமம், செப்பாதே யென்றாற் றிகைக்குமே’’,‘தருமிக்கே, ஓர்வாழ்க்கை வேண்டி யுயர்கிழிகொள் வான்கொங்கு,தேர்வாழ்க்கை யென்றெடுத்த செய்தியும்’’ (தமிழ் விடுதூது, 108, 114-5);‘கொங்கய வன்மீ னவர்க்கு வகுத்துச் சொல் பவள- கொங்குதேர்வாழ்க்கையென்னும் கவிதையைக் கனவட்ட மென்னும் குதிரையையுடைய வலிய பாண்டியனுக்கு, கூந்தற்கு இயற்கை மணமுண்டென்பதனைவிளக்கத் திருவுளம் பற்றும் பவளம் போலும் சிவந்த வாயினை யுடையாய்"(திருமயிலையமக அந்தாதி, 53, உரை.)
ஒப்புமைப் பகுதி 1. தும்பிகொங்கு தேர்தல்; "தாதுண் டும்பி" (மதுரைக்.655); "தாதுண் பறவை" (அகநா.4:11); "கொங்குண் வண்டே கரியாக"(பெரிய திருமொழி, 9,3:4). அஞ்சிறைத்தும்பி; "அஞ்சிறை வண்டி னரிக்கணம்" (முருகு.76); அறுசில் கால வஞ்சிறைத் தும்பி", "அஞ்சிறை வண்டி னரியினம்" (ஐங். 20, 489); "அஞ்சிறை மணிநிறத் தும்பி" (கலித்.46:2.)
2. காமம்செப்பல்: "தாமிள மகளிரைக் காமஞ் செப்பி" (பெருங். 11.41; 101.) கண்டதுமொழிதல்: ‘கண்டது மொழிவல்’’ (குறுந். 273; 4.)
3. பிறவிதோறுந் தொடர்ந்த நட்பு: ‘உடுத்துவழி வந்த வுழுவ லன்பு’’, ‘பிறப்பிடைக் கொண்டுஞ் சிறப்பொடு பெருகி, நெஞ்சிற் பின்னிநீங்கல் செல்லா, அன்பு’’, ‘தொன்முறை வந்த, பிறப்பிடைக் கேண்மைப்பெருமனைக் கிழத்தி’’, ‘பிறப்புவழிக் கேண்மை’’ (பெருங். 2.11:39,16:39-41, 18:115-6, 3. 6:64.)
4. செறியெயிற்றரிவை: ‘செறியெயிற் றரிவைய ருருவாய்’’ (நீலகேசி, 58.) 4-5. கூந்தலின் இயற்கை மணம்: ‘கூந்தல் ... நறுந்தண்ணியவே’’, ‘கைவள் ளோரி கானந் தீண்டி, எறிவளி கமழு நெறிபடு கூந்தல்’’, ‘நறுமென் கூந்தல்’’, ‘நாறிருங் கூந்தல்’’, ‘நறுங் கதுப்பு’’ (குறுந். 116:1-4, 199:3-4, 270:8. 272:8, 312:6); ‘நாறுமயிர்க் கொடிச்சி’’, ‘தண்ணிய கமழுந் தாழிருங் கூந்தல்’’, "நாறிருங் கதுப்பு’’, "வண்டுபடு நாற்றத், திருள்புரை கூந்தல்’’ (நற். 95:8, 137:1, 143:10, 250:8, 270:2-3); ‘மணநாறு கதுப்பினாய்’’ (கலித், 43: 23); ‘நாறிருங் கூந்தல்’’ (புறநா. 113:9)
மு | ‘வண்டுக ளோவம்மி னீர்ப்பூ நிலப்பூமரத்திலொண்பூ |
| உண்டு களித்துழல் வீர்க்கொன் றுரைக்கிய மேனமொன்றாய் |
| மண்டுக ளாடிவை குந்தமன் னுள்குழல் வாய்விரைபோல் |
| விண்டுகள் வாரு மலருள வோநும் வியலிடத்தே’’ |
| (திவ்.திருவிருத்தம், 55) |
| "தூவுண்டை வண்டினங் காள்வம்மின் சொல்லுமின் றுன்னிநில்லாக் |
| கோவுண்டை கோட்டாற் றழிவித்த கோன்கொங்க நாட்டசெங்கேழ் |
| மாவுண்டை வாட்டிய நோக்கிதன் வார்குழல் போற்கமழும் |
| பூவுண்டை தாமுள வோநுங்கள் கானற் பொழிலிடத்தே’’, |
| ‘இருங்கழல் வானவ னாற்றுக் குடியிகல் சாய்ந்தழியப் |
| பொருங்கழல் வீக்கிய பூழியன் மாறன்றென் பூம்பொதியில் |
| மருங்குழ லுங்களி வண்டினங் காளுரை யீர்மடந்தை |
| கருங்குழ னாறுமென் போதுள வோநுங் கடிபொழிலே’’, |
| ‘‘விண்டே யெதிர்ந்ததெவ் வேந்தர் படவிழி ஞத்துவென்ற |
| ஒண்டே ருசிதனெங் கோன்கொல்லிச் சார லொளிமலர்த்தா |
| துண்டே யுழல்வா யறிதியன் றேயுள வேலுரையாய் |
| வண்டே மடந்தை குழல்போற் கமழு மதுமலரே’’, |
| ‘‘பொருங்கழல் வானவற் காயன்று பூலந்தைப் போர்மலைந்தார் |
| ஒருங்கழ லேறவென் றான்கொல்லிச் சாரலொண் போதுகடம் |
| மருங்குழல் வாய்நீ யறிதிவண் டேசொல் லெனக்குமங்கை |
| கருங்குழல் போலுள வோவிரை நாறுங் கடிமலரே’’, |
| ‘‘தேற்றமில் லாததெவ் வேந்தரைச் சேவூர்ச் செருவழித்துக் |
| கூற்ற மவர்க்காய வன்கொல்லிச் சாரற்கொங் குண்டுழல்வாய் |
| மாற்ற முரைநீ யெனக்குவண் டேமங்கை வார்குழல்போல் |
| நாற்ற முடைய வுளவோ வறியு நறுமலரே.’’ |
| (பாண்டிக்கோவை.) |
(2)