(பருவம் வந்தகாலத்துக் கவன்ற தலைவியை நோக்கி, “இது காரன்று; வம்பு” எனக்கூறிய தோழிக்கு, “கார்ப்பருவத்துக்குரிய மேகமுழக்கமும் புதுவெள்ளமும் உள்ளன; இக்காலத்தும் தலைவர் வந்திலர்; அவர் நம்மை மறந்தார் போலும்!” என்று தலைவி கூறி வருந்தியது.)
 200.    
பெய்த குன்றத்துப் பூநாறு தண்கலுழ்  
    
மீமிசைத் தாஅய வீஇ சுமந்துவந்  
    
திழிதரும் புனலும் வாரார் தோழி  
    
மறந்தோர் மன்ற மறவா நாமே  
5
கால மாரி மாலை மாமழை  
    
இன்னிசை யுருமின முரலும்  
    
முன்வர லேமஞ் செய்தகன் றோரே.  

என்பது பருவ வரவின்கண் ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி,“பருவமன்று; வம்பு” என்றவழித் தலைமகள் சொல்லியது.

ஒளவையார். (பி-ம். அவ்வையார்.)

     (பி-ம்.) 1. ‘தண்கமழ்’; 2. ‘நிலமிசை’, ‘வீசும்வந்’, ‘வீசுமந்’, ‘வீசும் வளி கலந்து’, ‘வீழும் வீசுமந்து’; 5. ‘மாமறை’; 6. ‘குரலும்’.

    (ப-ரை.) தோழி-, காலம் மாரி - கார்ப்பருவத்துப்பெய்தற்குரிய மழையையுடைய, மாலை மா மழை-மாலைக்காலத்து வரும் கரிய மேகங்கள், இன் இசை உருமினமுரலும் - வித்தி வானோக்கும் புலமுடையாருக்கு இனியஒலியையுடைய இடியேற்றையுடையனவாகி முழங்கும்;பெய்த குன்றத்து - முன்பு மழைபெய்த குன்றத்தின்கண்,பூநாறு தண் கலுழ் மீமிசை - மலர் மணக்கின்ற தண்ணியகலங்கலின்மேலே, தாய - பரவிய, வீ சுமந்து வந்து -மலர்களைச் சுமந்து வந்து, புனலும் இழி தரும் - அருவிப்புனலும் வீழும்; முன் வரல் ஏமம் செய்து அகன்றோர்-கார்ப்பருவத்திற்கு முன்னரே வருவேமென்ற பாதுகாப்பைச்செய்து அகன்ற தலைவர், வாரார் - இன்னும் வாராராயினர்;மன்ற மறந்தோர் - அவர் நிச்சயமாக நம்மை மறந்தார்; நாம்மறவாம் - நாம் அவரை மறத்தல் செய்யாம்.

    (முடிபு) தோழி, மழை முரலும்; புனலும் இழிதரும்; அகன்றோர்வாரார்; மறந்தோர் மன்ற; நாம் மறவாம்.

    (கருத்து) கார்ப்பருவம் வரவும் தலைவர் வந்தாரல்லர்.

    (வி-ரை.) கலுழ், அருவிநீரில் புதுமழையால் உண்டாயது. முன்னரேவீழ்ந்த பூக்களுந் தாதும் உண்மையின் கலுழ் பூ நாறியது. வீயென்றதுஅப்பொழுது உதிர்ந்த பூக்களை. வம்பென்றாளை மறுத்தவளாதலின்,‘காலமாரி’ என்றாள். கார் காலத்திற்கு முன்னரே வருவதாகக் கூறிச்சென்றவர் அது வந்த பின்பும் வந்திலரென்றாள்.

    நாமே: ஏகாரம், பிரிநிலை. அகன்றோரே: ஏகாரம் அசை நிலை.

     ஒப்புமைப் பகுதி 1-3. புனலும் பூவும்: “நீர்நிறங் கரப்ப வூழுறு புதிர்ந்த,பூமலர் கஞலிய கடுவரற் கான்யாற்று” (அகநா. 18:1-2.)

    4. மறந்த தலைவனைத் தலைவி மறவாமை: “நம்மை மறந்தாரைநாமறக்க மாட்டேமால்” (சிலப். 7:32.) 5. காலமாரி: குறுந். 251:2.

    6. இன்னிசை யுரும்: ‘இன்குரற், றளிமழை பொழியும்” (மதுரைக்.262-3.)

    7.முன்வர லேமம்: “கூதிர்ப், பெருந்தண் வாடையின் முந்துவந்தனனே” (ஐங். 252:4-5)

(200)