(தலைவனும் தலைவியும் மணந்துகொண்டு இல்லறம் நடத்தும்மனைக்கண் சென்ற தோழி, “வரைந்துகொள்ளும் வரையில் நீ வேறுபடாமல் எங்ஙனம் ஆற்றியிருந்தாய்” என்று கூற, “நான் அங்ஙனம் ஆற்றியிருக்கும் வண்ணம் அயன்மனைக் கிழத்தி முன்பு தலைவன் வரவைக் கூறினாள்; அவள் வாழ்க!” என்று தலைவி சொல்லியது.)
 201.    
அமிழ்த முண்கநம் மயலி லாட்டி 
    
பால்கலப் பன்ன தேக்கொக் கருந்துபு 
    
நீல மென்சிறை வள்ளுகிர்ப் பறவை 
    
நெல்லி யம்புளி மாந்தி யயலது 
5
முள்ளி லம்பணை மூங்கிற் றூங்கும் 
    
கழைநிவந் தோங்கிய சோலை 
    
மலைகெழு நாடனை வருமென் றோளே. 

என்பது கடிநகர் வேறுபடாது நன்கு ஆற்றினாயென்ற தோழிக்குக்கிழத்தி உரைத்தது.

     (கடிநகர் - காவலமைந்த வீட்டில்; மணம் செய்துகொண்டு இல்லறம்நடத்தும் மனையிலெனலும் ஆம்.)

(ஆசிரியர் பெயர் காணப்படவில்லை.)

    (பி-ம்.) 1. ‘அமிர்த’, ‘அமுத’, ‘மயிலியலாட்டி’; 4. ‘மாந்தியல்லது’;‘மூங்கிலிற்’; 6. ‘ஓங்கிய சாரல்’.

    (ப-ரை.) தோழி-, அயல் இல் ஆட்டி - அயன்மனைக்கிழத்தி, பால் கலப்பு அன்ன - பாலைக் கலந்தாற்போன்றஇனிமையையுடைய, தேக்கொக்கு அருந்துபு - தேமாம்பழத்தைத் தின்று, நீலம் மெல்சிறை - கரிய மெல்லியசிறகுகளையும், வள் உகிர் பறவை - கூரிய நகங்களையும்உடைய வௌவால், நெல்லியம் புளி மாந்தி- நெல்லியினதுபுளித்த காயை உண்டு, அயலது - அயலிலுள்ளதாகிய,முள் இல் அம் பணை மூங்கில் தூங்கும் - முள்ளில்லாதஅழகிய பருத்த மூங்கிலின் கண்ணே தொங்குகின்ற, கழைநிவந்து ஓங்கிய சோலை - மூங்கிற் கோல்கள் உயர்ந்துவளர்ந்த சோலைகளையுடைய, மலைகெழு நாடனை -மலைகள் பொருந்திய நாட்டையுடைய தலைவனை,வருமென்றோள்- வரைவுக்குரியவற்றோடு வருவானென்றுகூறினாள்; ஆதலின், அமிழ்தம் உண்க - அவள் அமிழ்தத்தைஉண்பாளாக!

    (முடிபு) அயலிலாட்டி நாடனை வருமென்றோள்; அமிழ்தம் உண்க!

    (கருத்து) தலைவன் வரைவொடு வருதலை முன்பு கூறி எனக்குஉறுதி யுண்டாக்கிய அயலிலாட்டி வாழ்வாளாக!

    (வி-ரை.) அமிழ்தமுண்கவென்றது சுவர்க்க போகத்தைப் பெறுகவென்றபடி. இங்ஙனம் வாழ்த்தும் மரபை இந்நூல் 83-ஆம் செய்யுளாலும்உணரலாகும்.

     தலைவி, புறம்போந்து செய்தியறிதற்கியலாத பெருங்காப்பினளாகஇருந்தமையின், தலைவன் வரைவொடு புகுதலைத் தான் அறியாதுஅயலிலாட்டி கூற அறிந்தாள்.

    நெல்லியம் புளியென்றது நெல்லிக்காயையே; அம்: சாரியை.தேமாங்கனியை அருந்தித் தெவிட்டினமையின் வேற்றுச் சுவையையுடையநெல்லியம்புளியை வௌவால்கள் உண்டன.

     தலைவன் வரைவுடன் வருதலை அயலிலாட்டி முன்பு கூறினமையின் ஆற்றியிருந்தேனென்று தலைவி காரணத்தைப் புலப்படுத்தினாளாயிற்று.

     தேமாம்பழத்தை உண்ட வௌவால் பின்பு மாறுபட்ட சுவையையுடைய நெல்லிக்காயை உண்டு சிறிதும் ஊறு உண்டாக்காத முள்ளில்மூங்கிலிற் றூங்கியதுபோல, களவுப் புணர்ச்சியின்கண் இன்பந் துய்த்ததலைவன் அவ்வின்பத்துக்கு மாறாகிய இடையீடுகளையும் ஏற்றுப் பின்வரைந்து கொண்டு சிறிதும் ஏதமின்றி இன்பம் துய்க்கும் நிலையினனாயினனென்பது குறிப்பு.

    மேற்கோளாட்சி 1. அகரத்தோடு கூடிய தகரவீறு வியங்கோளில் வாழ்த்துதற்பொருண்மைக்கண் வந்தது (நன். 337, மயிலை; இ.வி. 239.)

     ஒப்புமைப் பகுதி 1. அயலிலாட்டி: அகநா. 386:11.

    1. மு. நற். 65:1.2. தேக்கொக்கு: குறுந். 26:6, ஒப்பு.

    4. நெல்லியம்புளி: “தீம்புளி நெல்லி” (குறுந். 317:2); “பராரைநெல்லி யம்புளித் திரள்காய்” (அகநா. 69:7.)

    2-4. வௌவால், மா, நெல்லி: “உள்ளூர் மாஅத்த முள்ளெயிற்றுவாவல், ஓங்க லஞ்சினைத் தூங்குதுயில் பொழுதின், வெல்போர்ச் சோழரழிசியம் பெருங்காட்டு, நெல்லியம் புளிச்சுவைக் கனவி யாஅங்கு”(நற். 87:1-4.)

    7. குறுந். 83:5.

    6-7. சோலை மலைகெழு நாடன்: “பிறங்கிருஞ் சோலை நன்மலைநாடன்” (கலி. 42:4.) மு. குறுந். 38, 389; நற். 65.

(201)