அள்ளூர் நன்முல்லை. (பி-ம்.) 1. ‘நோமனெஞ்சே’; 2. ‘நெரிஞ்சி’; 4. ‘செய்தியல்’; 5. ‘செய்யினோம்’, ‘னோமேநெஞ்சே’.
(ப-ரை.) தோழி, என் நெஞ்சு நோம் - என் நெஞ்சுவருந்தும்; என் நெஞ்சு நோம்-, புன்புலத்து - முல்லைநிலத்தின் கண், அமன்ற - நெருங்கி முளைத்த, சிறிய இலைநெருஞ்சி - சிறிய இலைகளையுடைய நெருஞ்சியினது,கட்கு இன் புதுமலர் - முன்னர்த் தோன்றிக் கண்ணுக்குஇனிய புதியமலர், முள் பயந்தாஅங்கு - பின்னர் இன்னாமையைத்தரும் முள்ளைத் தந்தாற்போல, இனிய செய்த நம்காதலர் - முன்பு நமக்கு இனியவற்றைச் செய்தொழுகியநம் தலைவர், இன்னா செய்தல் - இப்பொழுது இன்னாதனவற்றைச் செய்தொழுகு தலால், என் நெஞ்சு நோம்--.
(முடிபு) என் நெஞ்சு நோம்; என் நெஞ்சு நோம்; நம் காதலர்இன்னா செய்தலால் என் நெஞ்சு நோம்.
(கருத்து) தலைவர் இன்னாராகி ஒழுகுதலால் என் நெஞ்சம் வருந்தும்.
(வி-ரை.) நோமென்னெஞ்சே நோமென்னெஞ்சே யென்ற அடுக்குஇடைவிடாது நோதலைக் குறித்தது; “பொய்யாமை பொய்யாமையாற்றின்” (குறள், 297) என்புழிப்போல. புன்புலம் - செந்நிலம்; என்றதுமுல்லைநிலத்தை; புன்மை - செம்மை; புன் செய்யுமாம். சிறிய இலை,சிறியிலையென விகாரம் (நன். 155, வி.)
“தலைவர் நின்மாட்டு இனிய பல செய்தவரன்றே; அவரை நீஏற்றுக்கோடல் வேண்டும்” என்ற தோழியை மறுப்பவளாதலின், “அவர்இனியராயிருந்தது முன்பு; இப்பொழுது இன்னாராயினர்” என்றாள்.கட்கின் புதுமலரென்பதனோடு முரண் நயம்பட ஊற்றிற்கு இன்னாதமுள்ளென்பதை இசையெச்சத்தால் வருவிக்க. இன்னா செய்தலாவதுபரத்தையர் மாட்டு அன்புடையனாகி யொழுகுதல்.
மேற்கோளாட்சி 2-5. தலைவி பாங்கியோடு பகர்ந்தது (இ.வி. 513.)
மு. தலைவி பாங்கியோடு பகர்தல் (நம்பி. 154)
ஒப்புமைப் பகுதி 1. நோமென்னெஞ்சு: குறுந். 4:1, ஒப்பு.
2. சிறியிலை நெருஞ்சி: “சிற்றிலை நெருஞ்சிப் பொற்பூ” (கல்லாடம். 65:15.)
சிறியிலை: புறநா. 109:4, 308:4.
4-5. இனிய செய்த தலைவர் பின் இன்னாசெய்தல்: “இனியசெய்தகன்றுநீ யின்னாதாத் துறத்தலின்” (கலி. 53:12.)
(202)