மிளைப்பெருங் கந்தன். (பி-ம்.) 1. ‘என்பர்’; 3. ‘முதுசுவற்’; 4. ‘கைவந்தாங்கு’.
(ப-ரை.) பெரு தோளோயே - பெரிய தோளையுடையதலைவ, காமம் காமம் என்ப - காமம் காமமென்று அதனைஅறியார் இகழ்ந்து கூறுவர்; காமம் - அக்காம மானது,அணங்கும் பிணியும் அன்று - வருத்தமும் நோயும் அன்று;முதை சுவல் கலித்த - பழங்கொல்லையாகிய மேட்டு நிலத்தில்தழைத்த, முற்றா இள புல் - முதிராத இளைய புல்லை,முது ஆ - முதிய பசு, தைவந்தாங்கு - நாவால் தடவி இன்புற்றாற்போல, நினைப்பின் - நினைக்குங் காலத்து, காமம்விருந்து - அக்காமம் புதிய இன்பத்தை யுடையதாகும்.
(முடிபு) பெருந்தோளோயே, காமம் காமம் என்ப; காமம் அணங்கும் பிணியும் அன்று; அது விருந்தே.
(கருத்து) காமம் நம்முடைய அறிவின் எல்லைக்கு உட்பட்டது.
(வி-ரை.) காமமென்றது இங்கே காம உணர்ச்சியை. தலைவன்,“ஒரு மகள் என்னை அணங்க இந்நோய் உற்றேன்” என்றானாதலின்காமம் பிறர் அணங்க வருவதன்றெனவும் நோயன்றெனவும் மறுத்துரைத்தான். நினைப்பின் - ஆராய்ந்தாலெனலுமாம். ‘தனக்குக் கறிக்க வியலாதஇளம்புல்லைத் தடவிய அளவில் முதிய பசு இன்புற்றதற்குக் காரணம்அப் புல்லின் சுவையன்று; பசுவின் ஆர்வமே. அதன் ஆர்வத்தளவுஅவ்வின்பம் நிற்றலைப் போலக் காமமானது நமது நினைப்பினளவிற்புதுமை யின்பத்தைத் தருவதாகின்றது. அதனை நாம் அறிவினால்அவித்தொழுகின் அதனால் இன்பந்தோன்றாது. நம் மனநிலையே அதனை விருந்தாகத் தோற்றுவிக்கின்றது’ என உவமையை விரித்துக் கொள்க.
விருந்தென்றது புதிதாகத் தோற்றிச் சிறுபொழுதில் அழிவதென்றும்,என்றும் நிலைநிற்கும் நற்குணமன்றென்றும் உணர்த்தியபடி.
இதனால், அறிவுடையார்பாற் காமம் தோன்றாதென்றும், அறிவின்றிமனத்தின்வழியே செல்வார்க்கு அது விருந்தாவதென்றும் புலப்படுத்திஇடித்துரைத்தானாயிற்று.
பெருந்தோளோயே என்றது, இத்தகைய தோளின் வன்மையைஇழந்தனையேயென இரங்கியபடி.
மேற்கோளாட்சி மு. பாங்கன் கூற்று (தொல். செய். 189, பேர், ந.); தலைவன்உற்றதுரைப்பக் கேட்ட பாங்கன் உலகத்து நிலைநிற்கும் நற்குணங்களைஅவனை நினைப்பித்துக் கழறிக் கூறியது (தொல். களவு. 11, ந.); பாங்கன்கிழவோற் பழித்தது (நம்பி. 137.)
ஒப்புமைப் பகுதி 1-2. மு. குறுந். 136: 1-2.
3. சுவல்: குறுந். 282:1; மலைபடு. 436. முதைச்சுவல்: குறுந். 155:1; அகநா. 359:14.
(204)