காக்கை பாடினியார் (பி-ம். பாடினி) நச்செள்ளையார். (பி-ம்.) 3. ‘விழைந்த’; 4. ‘றொருகலத்’; 5. ‘செல்வற்கு’; 6. ‘விரைந்துவரக்’.
(ப-ரை.) திண் தேர் நள்ளி - திண்ணிய தேரையுடையநள்ளி யென்னும் உபகாரியினது, கானத்து - காட்டிலுள்ள,அண்டர் - இடையர்களுக்குரிய, பல் ஆ பயந்த நெய்யின் -பல பசுக்கள் உண்டாக்கிய நெய்யோடு, தொண்டி - தொண்டியென்னும் ஊரிலுள்ள வயல்களில், முழுது உடன் விளைந்த -முற்றும் ஒருங்கே விளைந்த, வெள் நெல் வெ சோறு -வெண்ணெல்லரிசியால் ஆக்கிய வெம்மையையுடையசோற்றை, எழு கலத்து ஏந்தினும் - ஏழு பாத்திரங்களில்ஏந்திக் கொடுத்தாலும், என் தோழி - என் தோழியாகியதலைவியினுடைய, பெரு தோள் நெகிழ்த்த செல்லற்கு -பெரிய தோளை நெகிழச் செய்த துன்பத்தை நீக்கும்பொருட்டு, விருந்து வர - விருந்தினர் வரும்படி, கரைந்தகாக்கையது பலி - கரைதலைச் செய்த காக்கைக்குரிய அப்பலியானது, சிறிது - சிற்றளவினதே யாகும்.
(முடிபு) சோறு ஏந்தினும் கரைந்த காக்கையது பலி சிறிது.
(கருத்து) காக்கை கரைதலாகிய நின்வரவுக்குரிய நிமித்தங் காட்டி,யான் தலைவியை ஆற்றுவித்தேன்.
(வி-ரை.) நள்ளி - ஏழு வள்ளல்களில் ஒருவனாகிய கண்டீரக்கோப்பெரு நள்ளி. கானம்- முல்லை நிலம். தொண்டி - ஈண்டு மேல்கடற்கரைக் கண்ணேயுள்ளதொரு துறைமுகப் பட்டினம்.
நெய்யிற் சோறு ஏந்தினுமென இயைக்க.
செந்நெல்லும் உண்மையின், வெண்ணெல்லென்றாள். வெம்மைசோறட்ட அணிமையைக் குறித்தது.
பெருந்தோளென்றது நெகிழ்தற்குரியதன்றென்னும் கருத்தினது.செல்லற்கு விருந்தென்றது ‘நோய்க்கு மருந்து’ என்பது போல நின்றது.காக்கைக்கு இடும் உணவைப் பலியென்றல் மரபு. காக்கை கரைதல்புதியதோர் வரவைக் குறிக்கும் நிமித்தமென்பர்;
| “மறுவி றூவிச் சிறுகருங் காக்கை |
| அன்புடை மரபினின் கிளையோ டாரப் |
| பச்சூன் பெய்த பைந்நிண வல்சி |
| பொலம்புனை கலத்திற் றருகுவென் மாதோ |
| வெஞ்சின விறல்வேற் காளையொ |
| டஞ்சி லோதியை வரக்கரைந் தீமே” (ஐங். 391); |
| “பணங்களஞ் சாலும் பருவர வார்த்தவன் றில்லையன்ன |
| மணங்கொளஞ் சாயலும் மன்னனு மின்னே வரக்கரைந்தால் |
| உணங்கலஞ் சாதுண்ண லாமொண் ணிணப்பலி யோக்குவன்மாக் |
| குணங்களஞ் சாற்பொலி யுந்நல சேட்டைக் குலக்கொடியே” (திருச்சிற். 235.) |
“நான் ஆற்றுவித்தற்பொருட்டுப் பெருமுயற்சி செய்தேனல்லேன்.நின்வரவை முன்னரே யுணர்த்தும் நிமித்தமாகக் காக்கை கரைந்தது. அதுகாட்டி யான் ஆற்றுவித்தேன். ஆதலின் அக் காக்கையே பாராட்டுதற்குரியதாகும்” என்றாள்.
காக்கையை இங்ஙனம் பாடிய சிறப்பால் இச்செய்யுளைப் பாடியவர்காக்கைபாடினியாரென்னும் பெயரைப் பெற்றார்.
மேற்கோளாட்சி மு. குற்றமில்லாத தலைமகனைச் சுட்டிய தெய்வக்கடன்கொடுத்தற்கண் தோழிக்குக் கூற்று நிகழ்ந்தது (தொல். கற்பு. 9, இளம்.)
ஒப்புமைப் பகுதி 1. திண்டேர்: குறுந். 128:2, வி-ரை.
2. தொண்டி: குறுந். 128:2, ஒப்பு.
2-3. நெய்யுஞ் சோறும்: “நெய்யிடை நல்லதோர் சோறும்” (திவ். திருப்பல்லாண்டு, 8); “பாற்சோறு, மூடநெய் பெய்து முழங்கைவழிவார” (திருப்பாவை.27.) தொண்டி நெல்: குறுந், 238:2-4.
4. ஏழுகூறுதல் மரபு: குறள், 1278; சீவக. 116.
5. தோள் நெகிழ்த்த செல்லல்: குறுந். 87:5, ஒப்பு.
6. காக்கையது பலி: “செஞ்சோற்ற பலிமாந்திய, கருங்காக்கை” (பொருந. 183-4); “பலியுண் காக்கை”, “உகுபலி யருந்திய தொகுவிரற்காக்கை” (நற். 281:1, 343:5.)
(210)