நெய்தற் கார்க்கியன். (பி-ம்.) 1. ‘கொடிஞ்சி’, ‘கொடுஞ்சினை’; 2. ‘தெளிர்மணி’; 3. ‘கானல்வந்து’.
(ப-ரை.) கொண்கன் ஊர்ந்த - தலைவன் ஏறிச் சென்ற,கொடுஞ்சி நெடு தேர் - கொடுஞ்சியை உடைய உயர்ந்ததேரானது, தெள் கடல் அடை கரை - தெள்ளிய நீரைஉடைய கடலை அடைந்த கரைக்கண், தெளி மணி ஒலிப்ப - தெளிந்த ஓசையை உடைய மணிகள் ஒலிக்கும்படி, காண வந்து நாண - நாம் காணும்படி வந்து பின்பு நாம் நாணும்படி,பெயரும் - மீண்டு செல்லா நிற்கும்; காமம்--, அளிது -இரங்கத் தக்கது; மன்ற விளிவது - நிச்சயமாக அழியக்கடவதாகும்; யான் நோகு - இவை கருதி யான் வருந்துவேன்.
(முடிபு) கொண்கன் ஊர்ந்த தேர் வந்து பெயரும்; காமம் அளிது;அது விளிவது; யான் நோகு.
(கருத்து) தலைவன் குறை பெறாமல் வருந்திச் சென்றான்.
(வி-ரை.) கொண்கன் - நெய்தல் நிலத் தலைவன் (குறுந். 230:1,299:4); தமிழ் நெறி விளக்கம், 8-ஆம் சூத்திரம் பாரக்க.
கொடுஞ்சி - தாமரை மொட்டின் வடிவமாகச் செய்து தேர்முன்நடப்படுவது; தேரூரும் தலைவர் இதனைக் கையால் பற்றிக் கொள்வதுவழக்கம்; “மணித்தேர்க் கொடுஞ்சி கையாற் பற்றி” (மணி. 4:48.) தம்பால்நயந்து வந்தோரது குறையைப் போக்குதல் அறநெறியாளர் கடனாதலின்,அதனைச் செய்யாமையால் வறிதே தலைவன் மீண்டது நாணத்தைத்தருவதாயிற்று; “இன்னா திரக்கப் படுத லிரந்தவர், இன்முகங் காணுமளவு” (குறள், 224); “இன்மை யுரைத்தார்க் கதுநிறைக்க லாற்றாக்கால்,தன்மெய் துறப்பான் மலை” (கலி. 43:26-7) என்பவற்றை ஓர்க.
‘நாம் காண வந்தானாயினும் நீ கண்டு குறைநயந்தா யில்லை’என்பது குறிப்பு. காமம் - தலைவனது காமம். தலைவன் நிலைக்குஇரங்கி, ‘யான் வருந்துவேன்” என்றாள். தலைவிக்கும் இரக்கம் உண்டாகிக் குறை நயத்தற் பொருட்டு.
ஓகாரங்கள், ஏகாரங்கள், தான்: அசை நிலைகள்.
கருப் பொருளால் இப்பாட்டு நெய்தற்குரியதாயிற்று; இங்ஙனமேநெய்தல் திணைக்குரிய பல செய்யுட்களைப் பாடிய காரணத்தால் இச்செய்யுளை இயற்றிய நல்லிசைப் புலவர், நெய்தல் கார்க்கியன் என்னும்சிறப்புப் பெற்றார் போலும்.
ஒப்புமைப் பகுதி 1. கொண்கன்: குறுந். 229:4, 230:1. கொடுஞ்சி நெடுந்தேர்: குறுந். 345:1; பொருந. 163; பெரும்பாண். 416: மதுரைக். 752.
1-3. தேர்மணி ஒலிப்பத் தலைவன் வருதல்: குறுந். 336: 3-4.
4. அளிதோதானே: குறுந். 149:1, 395:7; புறநா. 109:2, 111:1.
5. நோகோ யானே: குறுந். 131:6, ஒப்பு.
(212)