(தலைவனைப் பிரிந்த காலத்து, “நம்பாலுள்ள விருப்பத்தினால்தலைவர் தாம் சென்ற வினையை நிறைவேற்றாமல் வந்து விடுவாரோ?”என்று ஐயுற்ற தலைவியை நோக்கி, “அவர் விலங்கினமும் தமது கடமையைஆற்றும் காட்சி கண்டு தாமும் தம் கடனாற்றத் துணிவராதலின் மீளார்”என்று தோழி கூறியது.)
 213.    
நசைநன் குடையர் தோழி ஞெரேரெனக் 
    
கவைத்தலை முதுகலை காலி னொற்றிப் 
    
பசிப்பிணிக் கிறைஞ்சிய பரூஉப்பெருந் ததரல் 
    
ஒழியி னுண்டு வழுவி னெஞ்சிற் 
5
றெறித்துநடை மரபிற்றன் மறிக்குநிழ லாகி 
    
நின்றுவெயில் கழிக்கு மென்பநம் 
    
இன்றுயின் முனிநர் சென்ற வாறே. 

என்பது ‘நம்பெருமான், நம்பொருட்டு இடைநின்று மீள்வர்’ எனக்கவன்ற தலைமகட்குத் தோழி உரைத்தது.

கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றன்.

    (பி-ம்.) 1. ‘நெரேரென’, ‘நெரோவென’; 2. ‘கவைத்தலை முதுபோத்து’; 3. ‘இறைஞ்சிப்’, ‘பெருந்தாதால்’, ‘பெருந் தாளால்’; 4. வழியினெஞ்சிற்’, வழியனெஞ்சிற்; 5. தெறித்து நகை; 6. வெயிற்.

    (ப-ரை.) தோழி-, நசை நன்கு உடையர் - தலைவர்நின்பால் விருப்பம் மிக உடையவர்; நம் இன் துயில் முனிநர் -நம்மோடு செய்யும் இனிய துயிலை வெறுத்துப் பிரிந்துசென்ற அவர், சென்ற ஆறு - போன வழியில், ஞெரேரென -விரைவாக, கவை தலை முது கலை - கிளைத்த கொம்பைஉடைய தலையைப் பெற்ற முதிய ஆண்மான், காலின்ஒற்றி - காலால் உதைத்து, பசி பிணிக்கு இறைஞ்சிய -பசி நோயைத் தீர்த்துக் கொள்ளும் பொருட்டு வளைத்த,பரூஉ பெரு ததரல் - பருத்த பெரிய மரப் பட்டை, ஒழியின்உண்டு - தனது குட்டி உண்டபின் எஞ்சினால் தான் அதைஉண்டு, வழு இல் நெஞ்சின் - குற்றம் இல்லாத நெஞ்சினோடு,தெறித்து நடை மரபின் - துள்ளி நடத்தலாகிய இயல்பினைஉடைய, தன் மறிக்கு நிழலாகி - தனது குட்டிக்கு நிழலாகி,நின்று வெயில் கழிக்கும் - நின்று வெயிலை நீக்கும், என்ப -என்று கூறுவர்.

    (முடிபு) தோழி, நசை நன்குடையர், முனிநர், அவர் சென்ற ஆறுகலை வெயில் கழிக்கும் என்ப.

    (கருத்து) தலைவர் தம் கடமையை உணர்ந்து, மீளாது சென்றுபொருள் தேடி வருவர்.

    (வி-ரை.) ஞெரேரென - விரைவாக (பொருந. 141, ந.) கவை -கவைத்த கொம்பு: ஆகுபெயர், கவைத்தலை - கவை போன்ற கொம்புகளை உடைய தலையெனலும் ஆம்; “தொடுதோற் கானவன் கவைபொறுத் தன்ன, இருதிரி மருப்பி னண்ண லிரலை” (அகநா. 34:3-4.) ஒற்றுதல் - உதைத்து வீழ்த்துதல் (புறநா. 237:16, உரை), இறைஞ்சிய - இறைஞ் சுவித்த; “ஒடித்துண்டெஞ்சிய” (குறுந். 232:4) என்பதில் உள்ள ‘எஞ்சிய’ என்பது போல. ததரல் - சிதைந்த பட்டை (கலி. 91:13, ந.) தெறித்தல் - துள்ளுதல் (அகநா. 4:4, உரை.)

    தன் பசியைத் தீர்த்துக் கொள்ளுதலில் நாட்டம் இன்றித் தன்மறியின் பசியை முதலில் நீக்கியும், தன்மேல் படும் வெயில் வெம்மையைக் கருதாமல் மறிக்கு நிழலாகியும் கடம் பேணுதலின் வழுவினெஞ்சுடைய தாயிற்று; வழு - அறத் தினீங்கிய செயல்; தன் குட்டி பசித்திருப்பத் தான் உண்டலும் அது வெயிலால் வாடத் தான் ஓடுதலும் வழு வாகும். வெயில் கழிக்கும் - வெயிற் போதைக் கழிக்கும் என்பதும்பொருந்தும்.

    “தலைவர் நசை நன்குடையரேயாயினும், தன்னலத்தையும் பேணாதுகடம் பேணிய கலையைக் காண்பார்; தாமும் தம் நசையையே கருதாது இல்லறம் புரியும் கடமையை நினைந்து அதற்கு உரிய பொருள் தேடச்சென்று அது முற்றியே மீள்வர்” என்பது தோழியின் கருத்து.

    தான் பாலை நில நிகழ்ச்சிகளை அறியாளாதலின் அறிந்தார் வாய்க்கேட்டுள்ளே னென்பாள் ‘என்ப’ என்றாள்.

    மேற்கோளாட்சி 2. கலையென்னும் ஆண்மைப் பெயர் புல்வாய்க்கு வந்தது(தொல். மரபு. 46, பேர்.) 5. ‘மறியென்னும் இளமைப் பெயர் புல்வாய்க்கு வந்தது (தொல். மரபு. 12,பேர்.)

    ஒப்புமைப் பகுதி 1. தலைவனது நசை: குறுந். 37:1, ஒப்பு.

    2. கவைத்தலை முதுகலை: “கவைமருப் பெழிற்கலை” (அகநா. 395:8) ஒற்றி: அகநா. 2:14.

    3. ததரல்: அகநா. 257:16.7. இன்றுயில் முனிநர்: குறுந். 39:4.

(213)