(தலைவியின் வேறுபாடு கண்டு தாய் முதலியோர் வெறி யாட்டெடுத்த இடத்து, “இவளுக்குத் தழையுடையுதவி அன்பு செய்தான் ஒருவன் இருப்ப, அதனை அறியாது இது முருகனால் வந்தது என மயங்கி வெறியெடுப்பதனால் பயனில்லை” என்று தோழி கூறி உண்மையை வெளிப்படுத்தியது.)
 214.   
மரங்கொல் கானவன் புனந்துளர்ந்து வித்திய 
    
பிறங்குகுர லிறடி காக்கும் புறந்தாழ் 
    
அஞ்சி லோதி யசையியற் கொடிச்சி 
    
திருந்திழை யல்குற்குப் பெருந்தழை யுதவிச் 
5
செயலை முழுமுத லொழிய வயல 
    
தரலை மாலை சூட்டி 
    
ஏமுற் றன்றிவ் வழுங்க லூரே. 

என்பது தோழி வெறியாட்டு எடுத்துக் கொண்ட விடத்து அறத்தொடுநின்றது.

கூடலூர் கிழார்.

    (பி-ம்.) 6. ‘சூடி’.

    (ப-ரை.) மரம் கொல் கானவன் - மரங்களை வெட்டியகுறவன், புனம் துளர்ந்து வித்திய- கொல்லையை உழுதுவிதைத்த, பிறங்கு குரல் இறடி - விளங்குகின்ற கதிரைஉடைய தினையை, காக்கும் - காவல் செய்யும், புறம் தாழ்அம் சில் ஓதி - புறத்தின் கண்ணே தாழ்ந்த அழகிய சிலவாகியகூந்தலையும், அசைஇயல் - மெலிந்த சாயலையும் உடைய,கொடிச்சி - தலைவியினது, திருந்து இழை - செவ்விதாகஅமைத்த ஆபரணத்தை அணிந்த, அல்குற்கு -, பெரு தழை உதவி - பெரிய தழையாகிய உடையை அளித்து, செயலைமுழுமுதல் ஒழிய - அசோகினது பெருத்த அடி மரம் ஒழிந்துநிற்ப, அயலது - அதனோடு தொடர்பு இன்றி அயலதாய்நின்ற, அரலை மாலை சூட்டி - அலரி மாலையை முருகனுக்குச்சூட்டி வெறியெடுத்து, இ அழுங்கல் ஊர் - இந்த ஆரவாரத்தைஉடைய ஊரானது, ஏம் உற்றன்று - மயக்க முற்றது.

    (முடிபு) செயலை ஒழிய அரலை மாலை சூட்டி இவ்வூர் ஏமுற்றன்று.

    (கருத்து) தலைவிக்குத் தழையுடை அளித்த அன்பன் ஒருவன்உளன்.

    (வி-ரை.) துளர்தல் - களைக்கொட்டால் கொத்துதல் எனலும் ஆம்(மலைபடு. 122, ந.) பிறங்கு குரலிறடி காக்கு மென்றாள், கதிர் தோன்றியபின்னரே காவல் இன்றி அமையாததாதலின். அசைதல் - இளைத்தல்;மெலிதல் (பெரும்பாண். 331, ந.); ‘அசையியல் - நுடங்கிய இயல்பு’என்பர் பரிமேலழகர் (குறள்,1098, உரை). அசையியல் - அசைந்துநடக்கும் இயல்பெனலுமாம்; “அசைநடைப் பேதை” (குறுந். 182:6)என்பதன் உரையையும் ஒப்புமைப் பகுதியையும் பார்க்க.

    இழையென்றது இங்கே மேகலையை. பெருந்தழை என்றான்அதனை அணியும் உறுப்புப் பெரிதாதல் பற்றி; “அகலல்குறோள்கண்ணென மூவழிப் பெருகி” (கலி. 108:2.)

    தலைவன் அசோகந்தழையைத் தந்தான்.

    அயலது - அயன்மையை உடையது; இது சூட்டுவதனால்பயனில்லை என்ற குறிப்பை உணர்த்தியது; அருகில் உள்ளதெனப்பொருள் கொண்டு அரலை மலர் கொய்வார் அதன் அருகே நின்றசெயலையின் நிலைகண்டு அது தழையின்றி நிற்பதன் காரணத்தைஆய்ந்திலரென்னுங் குறிப்புரைத்தலும் பொருந்தும்.

    வெறியாடுவார் அரலை மாலையை முருகக் கடவுளுக்குச் சூட்டுதல்வழக்கம் (முருகு. 236): அரலை என்பது இப்போது அரளி என வழங்கும்.

    ஏமுறுதல் - மயக்குறுதல்; “ஏமுற் றவரினும்” (குறள், 873, பரிமேல்.); ஏமம் ஏமென நின்றது.

    ஊரென்றது தாய் முதலியோரை.

    இதனால், ‘தலைவனொருவன் தலைவி தினைப்புனங் காக்கும் காலத்தில் ஆண்டுப் போந்து அசோகந் தழையுதவி அவளோடு அளவளாவிச் சென்றான்’ என்பதைத் தோழி உணர்த்தினாள்.

    ஒப்புமைப் பகுதி 1. கானவன் மரத்தை வெட்டியவிடத்து விதையைவித்துதல்: குறுந். 198: 1-2, ஒப்பு. 2. இறடி: மலைபடு. 169; பெருங், 1:49:104.

    3. அஞ்சிலோதி: குறுந். 211:1, ஒப்பு. மு. ஐங். 299:3, பி-ம்.

    2-3. புறந்தாழ் ஓதி: “புறந்தாழ் பிருளிய பிறங்குகுர லைம்பால்” (அகநா. 126:20.)

    4. அல்குற்குத் தழை : குறுந். 125:3, ஒப்பு.

    5. முழுமுதல்: குறுந். 255:2, 361:4.

    4-5. தலைவன் அசோகந்தழை உதவல்: “கையது செயலையந்தழையே” (தமிழ் நெறி. மேற்.) 6. அரலை: நற். 121:4.

(214)